Mon. Nov 25th, 2024

பிரதமர் மோடி, இந்தியாவுக்கு பிரதமாக இருந்தாலும் கூட, அவரின் முழு கவனமும் மேற்கு வங்க மாநிலத்தின் மீதே எப்போதும் இருக்கிறது. அந்தளவுக்கு அம்மாநில முதல்வரான மம்தா பானர்ஜி, எந்த நிமிடமும் பாஜக.வுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராகவும் நித்தம் நித்தம் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி விடாதபடி, மோடி – அமித்ஷா கூட்டணி பல தகிடுதத்தங்களை செய்த போதும், மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தன்னை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது என்று கர்ஜித்தார் மேற்கு வங்கத்து வீராங்கனையான மம்தா பானர்ஜி.

இருப்பினும், மேற்கு வங்க அரசியலில் இருந்து மம்தா பானர்ஜியை விரட்டியே தீர்வது என்ற ஒற்றை குறிக்கோளோடு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நித்தம் நித்தம் அரசியல் விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக சோர்வே இல்லாமல் மம்தா பானர்ஜியும் எதிர்விளையாட்டு விளையாடி வருகிறார்.

அந்தவகையில், தனது தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தனக்கு அடுத்த நிலையில் இருந்த முகுல்ராய் என்ற மூத்த அரசியல் தலைவரை, கடந்த 2017 ஆம் ஆண்டில் பாஜக. தன் பக்கம் இழுத்துக் கொண்டது. மூன்றாண்டுகளில், அவரை மீண்டும் திரிணாமுல் காங்கிரஸுக்கே திரும்பும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் முதல்வர் மம்தா பானர்ஜி.

பாஜக.வில் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததால் மனம் நொந்து போய் இருந்த முகல்ராய் இன்று தனது ஆதரவாளர்களுடன் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற எளிய விழாவில் இணைத்துக் கொண்டார். அவரையும், அவரது ஆதரவாளர்களையும் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் அபிகேஷ் பானர்ஜி ஆரத்தழுவி வரவேற்றார்.

முகுல்ராயைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக.வில் சேர்ந்த பல தலைவர்கள் மீண்டும் தாய்க்கட்சிக்கு விரைவில் திரும்புவார்கள் என்று உற்சாகமாக கூறி வருகிறார்கள் மம்தா பானர்ஜியின் விசுவாசிகள்….