தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மே 7 ஆம் தேதி திமுக அமைச்சரவை பதவியேற்றது. அன்றைய தினம் எளிமையான விழாவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் முனைப்பு காட்டி வந்தார். கூடவே, கொரோனோ தொற்றின் 2 ஆம் அலையால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் காரணமாக மே 7 ஆம் தேதி இருந்த நிலைமையை விட கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்றின் தாக்கம் வெகு விரைவாக குறைந்து வருகிறது. முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, சட்டமன்றத் கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாகவும், தமிழ்நாடு அரசின் நிர்வாக நடவடிக்கைகள், கொரோனோ தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டது.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகத்தை பரிசாக வழங்கி ஆளுநர் வரவேற்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.