வங்கிகளின் கடன் வசூல் நெருக்கடியை தடுத்து நிறுத்தவும், மத்திய அரசு
பீட்டா அமைப்பை தடை செய்திட வலியுறுத்தியும் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்த வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. முழு ஊரடங்கால் முற்றிலும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கடன் வசூல் என்கிற பெயரில் நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்த வேண்டும்.
முழு ஊரடங்கை காரணம் காட்டி பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 2020 குருவைக்காண இழப்பீடும் இதுவரையிலும் வழங்கப்படவில்லை. 2020 21 ஆம் ஆண்டிற்கான சம்பா இழப்பீட்டுத் தொகை வழங்காமல் நிலுவையில் உள்ளது.
கூட்டுறவு வங்கிகள் குறுவை கடன் வழங்குவது தடைபட்டுள்ளது இதனால் விவசாய உற்பத்தி உரிய காலத்தில் துவங்க முடியாமல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பேரழிவு பெருமழையை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த இடுபொருள் இழப்பீட்டு நிவாரணத் தொகை 30 சதவீத விவசாயிகளுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே முழு ஊரடங்கால் ஒட்டுமொத்த அரசு நிர்வாக மும் முடங்கி விடாமல் பாதுகாக்க முன்வரவேண்டும். இணையவழி அலுவலக செயல்பாடுகளையும், குறைந்த அளவிலான ஊழியர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் செயல்பட்டு விவசாயிகளுக்கான நிவாரணத் தொகைகள் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பீட்டா அமைப்பு தொடர்ந்து இந்தியாவில் விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிப்பதற்கான மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது’தற்போது சைவ பால் உற்பத்தி என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக கால்நடையை ஒழிக்கும் நோக்கோடு சோயா மற்றும் இயற்கை தாவரங்கள் மூலம் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
குறிப்பாக குஜராத்தில் இயங்கக்கூடிய அமுல் நிறுவனத்திற்கு இதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் பல்வேறு சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். பீட்டா அமைப்பு தொடர்ந்து இந்தியாவில் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக அதனை தடை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.