Sat. Apr 27th, 2024

ஜிஎஸ்டி கவுன்சில் அமைச்சர் குழுவில் தமிழக நிதி அமைச்சருக்கு இடம் அளிக்காதது கடும் கண்டனத்திற்கு உரியது என்று தொழில் முனைவோர்கள் மத்திய அரசுக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு விலக்கு மற்றும் தடுப்பூசி , ஆக்சிமீட்டர் போன்ற கருவிகளுக்கு வரிச்சலுகை வழங்குதல் போன்றவை குறித்து விவாதிப்பதற்காக, ஏழு மாதங்களுக்குப் பிறகு ஒன்றிய அரசின் நிதி அமைச்சர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை அண்மையில் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் இதன் பொருட்டு “அமைச்சர் குழு” ஒன்றும் உருவாக்கப் பட்டது. இதில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அக்குழுவில் இணைக்கப் படாதது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

மாநில உரிமைகளை வலியுறுத்தக் கூடியவர்கள் இப்படிப்பட்ட குழுவில் இடம் பெற வேண்டியது சனநாயக மரபு ஆகும். ஒன்றிய அரசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ரப்பர் ஸ்டாம்பு நபர்கள் அதில் இருப்பதால் எவ்விதப் பயனும் இல்லை. மாறுபட்ட கருத்து உடையவர்களும் அதில் பங்கேற்பதுதான் உண்மையான கூட்டாட்சிக்கான அடையாளம் ஆகும்.

ஆனால் இந்தியாவில் மாநிலங்கள் என்ற அமைப்பே இருக்கக் கூடாது, வெறும் நிர்வாக அலகுகள் இருந்தால் போதும் எனக் கருதும் ஆர் எஸ் எஸ் கொள்கை உடையவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் கசப்பானதாகத் தானிருக்கும்.

இதுவரையிலும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எவரும் கண்டும் கேட்டுமிராத மாநில உரிமைக் குரலை ஓங்கி ஒலித்து, பாரதிய ஜனதா கட்சிக்கு மின்சார அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார், தமிழக நிதி அமைச்சர். மிக அருமையான கருத்துக்களை ஜிஎஸ்டி குழுக்கூட்டத்தில் தமிழகத்தின் நிதி அமைச்சர் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டுள்ளார்.

“இந்தியா விடுதலை பெற்றதில் இருந்தே மாநிலங்களுக்கான வரி வருவாய், ஒன்றிய அரசுகளால் நியாயமாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை. நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பை அதிகரிப்பதில் இந்திய அரசு பெரும்பான்மையான நாடுகளில் இருந்து விலகிச் சென்றுள்ளது.

உண்மையில் ஒருபொழுதும் கற்பனைகூடச் செய்ய முடியாத அளவுக்கு ஜிஎஸ்டியின் வருகை, மாநிலங்களுக்கு அநீதி இழைத்துள்ளது. 15வது நிதி ஆணையக் குழுவின் அறிக்கை குறிப்பிடுவது போல், வரி இழப்புக்கான ஆதாயங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல் மற்றும் பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் ஆகியவற்றை ஜிஎஸ்டி அமைப்பு ஒழுங்குபடுத்தத் தவறிவிட்டது.

மாநில அரசு விதிக்கும் செஸ் வரி, நேரடியாக ஒன்றிய அரசுக்குச் சென்று விடுகிறது. பிற வரிகள் இந்திய அரசின் தொகுப்பு நிதிக்குச் செல்கிறது. ( Consolidated Fund of India ) இத்தொகுப்பு நிதி, நிதி ஆணையத்தால் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. மாநிலங்களில் கூடுதலாகப் பெறப்படும் செஸ் வரியும் நேரடியாக ஒன்றிய அரசுக்குச் சென்றுவிடுகிறது. இதனால் மாநில அரசுகள் தங்களுக்கு உரிமையான தொகையைக் கூட ஒன்றிய அரசிடமிருந்து கெஞ்சிக் கூத்தாடிப் பெறவேண்டியுள்ளது.

மேலும் இந்தியாவில் அடுத்தடுத்து வந்த நிதி ஆணையங்கள், தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களுக்குத் தொடர் அநீதியை இழைத்து வருகின்றன. தங்களுக்குச் சட்டப்படி பெற உரிமையுள்ள நிதியைக் கூடப் பெற முடிவதில்லை.

மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஓர் உறுப்பினர் மட்டுமே எனும் இப்பொழுதுள்ள நடைமுறை குறித்துத் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை. எனவே இத்தருணத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக இரண்டு மாற்றுப் பரிந்துரைகளை முன் வைக்க விரும்புகிறோம்.

ஒரு மாநிலம் எவ்வளவு வரியை ஒன்றிய அரசுக்கு அளிக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டும், ஒரு மாநிலத்திலுள்ள மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

ஜிஎஸ்டி கட்டமைப்பு / பங்கீடு குறித்து நம்பிக்கை மன நிலையிலும், மாநில – ஒன்றிய உறவு குறித்துக் கருணை மனநிலையிலும் ஒன்றிய அரசு அணுக வேண்டும்.

மாநிலங்கள் இல்லாமல், ஒன்றியம் இல்லை” எனத் தமிழ்நாடு நிதி அமைச்சர் குறிப்பிட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இந்தியாவில் கூட்டாட்சி நோக்கிய அடியெடுப்புக்கும், மாநிலங்களின் உரிமைக்கும் இப்படிப்பட்ட அணுகுமுறை புதிய திறப்புக்களை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பிற மாநிலங்களின் நிதி மேலாண்மைக்காகவும் தமிழக நிதி அமைச்சர் முன்னெடுக்கும் முயற்சிகள் கொண்டாடத் தக்கவையாகும்.