Sat. Nov 23rd, 2024

முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டதையடுத்து, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மௌன உலகத்திற்கு சென்றுவிட்டது. நாள்தோறும் உயிரிழப்புகள் 400 க்கு மேல் உயர்ந்து வரும் நிலையில், கிராமப்புற மக்களிடம் பயம் தொற்றிக் கொண்டது. மருத்துவமனைகளில் இடம் இல்லை, ஆக்சிஜன் இல்லாததால் நோயாளிகள் உயிருக்குப் போராடி வருவது போன்ற தகவல்களால், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் வருகிறார்கள்.

இப்படி கிராம மக்களையும் வீடுகளுக்கு உள்ளேயே கொரோனோ முடக்கிப் போட்டிருக்கும் இன்றைய நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் சுற்றி திரியும் மக்களைப் பார்த்து, கிராம மக்கள் கோபமாக பேச தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு மேலாக அவர்களின் கோபம் அதிமுக பக்கமும் திரும்பி இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதாவது தேர்தலுக்கு முன்பாக கொரோனோ நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் வீடு, வீடாக தேடிச் சென்று அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிய அப்போதைய அதிமுக அமைச்சர்கள், கடந்த பல நாட்களாக, தொகுதி பக்கமே தலையை காட்டாததால், கிராம மக்கள் அதிருப்தியடைந்திருக்கிறார்கள்.

கடந்தாண்டு கொரோனோ காலத்தில் பத்து மாதங்களுக்கு மேலாக பம்பரமாக சுற்றிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்தபோதும் சரி, வெளிமாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோதும் சரி, தனது தொகுதியான எடப்பாடியில் உள்ள மக்களுக்கு மாதந்தோறும் உணவுப் பொருட்களை அதிமுக நிர்வாகிகள் மூலம் வீடு வீடாகச் சென்று வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், கடந்த பத்து நாட்களாக அவர் சேலத்தில் இருந்தபோதும், தனது கிராமமான சிலுவம்பாளையத்தில் இருந்த போதும், எடப்பாடி தொகுதிக்குள் தலையையே காட்டவில்லை. எடப்பாடி தொகுதிப்பட்ட பல பகுதிகளில் சமூக ஆர்வலர்கள், ஏழை பாழைகளுக்கு மூன்று வேலை உணவு, விளிம்பு நிலை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வரும் நிலையிலும், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சி அதிகாரத்தை வைத்து கொள்ளையடித்தவர்கள், தேர்தலில் தோல்வியைத் தழுவியவுடன், வாக்களித்த மக்களை கண்டு கொள்ளவே இல்லையே என்று ஆவேசமாக குரல் எழுப்புகிறார்கள்.

இதேபோல, எடப்பாடி பழனிசாமியின் வலது, இடது என இருந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும், பி.தங்கமணியும் தொகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்க கூட முன்வரவில்லை என்பதும் கொங்கு பகுதியைச் சேர்ந்த மக்களின் வேதனைக்குரலாக இருக்கிறது.

இதேவேதனை, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், அவர் ஆசைப்படுவதைப்போல முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தேனி மாவட்ட மக்களுக்கும் கோபம் இருக்கிறது. ஆனால், அந்த கோபத்தில் இ.பி.எஸ். ஸுக்கு எதிராக இருக்கும் காட்டத்தை விட குறைவாகவே இருக்கிறது.

ஏனெனில் துணை முதல்வராக இருந்தபோதும் கடந்தாண்டு கொரோனோ காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஓ.பி.எஸ்., ஒன்றும் வாரி வழங்கி விடவில்லை. அதனால், இப்போதும் ஓ.பி.எஸ்.ஸிடம் இருந்து ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவரது போடி தொகுதி அதிமுக நிர்வாகிகள் விரக்தியுடன்.

சாலையோரம் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுக்க ஏற்பாடு செய்தால் கூட, கொடுத்து கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர் துவக்கிய கட்சியின் தலைவர் என்று சொல்லி கொள்வதற்கு புண்ணியம் கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வததை வறுத்தெடுக்கிறார்கள் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமங்கலத்தில் 50 கோடி முதல் 100 கோடி வரை செலவு செய்து மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கு கோயில் கட்டி குடமுழுக்கு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கடந்த சில நாட்களாக தனது தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவதில் பிஸியாக இருந்துள்ளார்.

கோயில் கட்டிய பணத்தில், திருமங்கலத்தில் மருத்துவமனை கட்டியிருந்தால் கூட நூற்றுக்கணக்கான உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என்று கண்கள் சிவக்கும் திருமங்கலம் பொதுஜனம், திருப்பதி கோயில் உண்டியல் போல பொருளாதார வசதியுடைய ஆர்.பி.உதயகுமார், தொகுதி மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களை வழங்கினால், அவரிடம் உள்ள பணம் குறைந்தா போய்விடும் என்று கேள்வி கேட்கிறார்கள்.

மஞ்சள் சட்டை மைனர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடமே தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று கூறும் விருதுநகர் மாவட்ட மக்கள், அவரது துறையில் நடைபெற்ற ஊழல் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், பொதுமக்களை பற்றி எங்கே கவலைப்படப் போகிறார், சிறை வாசம் உறுதி என்று தனிமையில் புலம்பிக் கொண்டிருக்கிறார் கே.டி.ராஜேந்திர பாலாஜி என்கிறார்கள் ராஜபாளையம் தொகுதி அதிமுக நிர்வாகிகள்.

இப்படி ஒட்டுமொத்தமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஊரடங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் இருந்து துறவறம் பூண்டிருப்பதால், இதுபோன்ற பேரிடர் காலங்களில் உதவும் மனம் படைத்த ஒன்றிரண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்களும் நமக்கு ஏன் வம்பு என்று அமைதியாகிவிட்டதாக, அதிமுக எம்.எல்.ஏ ஒருவரே நம்மிடம் தெரிவிக்கிறார்.

அதிமுக ஆளும்கட்சியாக இருந்த போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, ஒன்றிணைவோம் வா என்று அழைத்து, ஏழை மக்களுக்கு உதவிகளை செய்தது. அதுபோன்று இப்போது துயரின் உச்சத்தில் இருக்கும் மக்களின் கண்ணீரை துடைக்க அதிமுக ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்றால், அடுத்த ஆறுமாதத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அவமானகரமான தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைதான் அதிமுக.வுக்கு ஏற்படும் என்று ஆதங்கத்தோடு கூறுகிறார் நட்போடு இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர்…