Sat. Nov 23rd, 2024

சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி…..

1987 ல் தராசு ஆசிரியர் ஷ்யாமுடன் ஏற்பட்ட அறிமுகத்தின் காரணமாக, அன்றைய காலத்தில் இருந்தே அரசின் செயல்பாடுகளை உண்ணிப்பாக கவனிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது..அந்த வகையில் தற்போது அரியணையில் வீற்றிருக்கும் திமுக ஆட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மிகச் சிறந்த அறத்தோடும், பேராண்மையுடன் ஆட்சி அதிகாரத்தை செலுத்த முற்பட்டிருக்கிறார் என்பதற்கு ஒரே ஒரு நடவடிக்கை அடித்தளமாக அமைந்திருக்கிறது.

காலம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதரிக்கலாம் என்பதற்கு, நியாய விலைக்கடைகளுக்கான கொள்முதலில் திமுக அரசு காட்டியிருக்கும் அறமே சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்த வரை, நியாய விலைக்கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட எந்த பொருள்களும், இந்த விலைக்குதான் கொள்முதல் செய்யப்படுகிறது என்று இதற்கு முன்பு இருந்த எந்தவொரு அரசும் வெளிப்படையாக, குறிப்பாக முந்தைய திமுக அரசு கூட இவ்வளவு வெளிப்படையாக அறிவித்தது கிடையாது.

அடிப்படையில் நான் ஒரு கூட்டுறவு பட்டதாரி. 1986ல் சேலத்தில் உள்ள டால்மியா மேக்னசைட் பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் வணிக மேலாளராக (Business Manager) பணியாற்றியிருக்கிறேன். அப்போது, பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு தேவையான உணவுப் பொருட்கள் (அரிசி,எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும்) கொள்முதல் செய்வதற்கு என்று ஒரு குழு உண்டு. அந்தக் குழுவில் நானும் ஒரு உறுப்பினர். சேலத்தில் செவ்வாய்பேட்டை என்ற ஒரு பகுதி உண்டு. உணவுப்பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் விற்பனை மையங்கள் நிறைந்த பகுதி அது.

எங்கள் குழு அங்குச் சென்றாலே ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும். அப்போதே லட்சக்கணக்கில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களை மூட்டை மூட்டையாக வாங்குவோம். எங்கள் குழுவின் தலைவர் மிகச் சிறந்த நேர்மையாளர். நாலு கடை ஏறி இறங்கி, யார் குறைந்த விலைக்கு தருகிறார்களோ அவர்களிடம்தான் வாங்குவார்.

தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார். இந்த கொள்முதல் விவகாரம் எனக்கு புதிது. உணவுப்பொருள்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கும் வரை குழுத் தலைவர் அங்கேயே இருப்பார். தேநீர் சாப்பிடும் நேரத்தில் மற்ற குழு உறுப்பினர்கள் குழுத்தலைவரை கடுமையாக கரித்துக் கொட்டுவார்கள்.

பிழைக்க தெரியாத மனிதனாக இருக்கிறார். கொஞ்சம் சமரசம் செய்து கொண்டால் குழுவில் உள்ள உறுப்பினர்கள் (5 பேர்) எல்லோரும் ஒருவருடத்தில் லட்சாதிபதிகளாக (1987) மாறிவிடலாம். அந்தளவுக்கு வியாபாரிகள், உணவுப் பொருட்களுக்கு கமிஷன் தர தயாராக இருக்கிறார்கள். கிலோவுக்கு பத்து பைசா, இருபது பைசா கூடுதலாக விலை நிர்ணயித்து கமிஷனை வாங்கிக் கொள்ளலாம். கூட்டுறவு தணிக்கையின் போதுகூட அதிகாரிகளை சரிகட்டி விடலாம். சொன்னால் கேட்கவே மாட்டேன் என்கிறார் என்று குழு உறுப்பினர்கள் புலம்பியதை பலமுறை கேட்டிருககிறேன்.

இப்படி மொத்த கொள்முதலின் போது அடக்க விலையை சிறிது குறைத்துக் கொண்டு கமிஷன் தர எத்தனையோ வியாபாரிகள் தயாராக இருந்தார்கள். இன்றைக்கும் கூட இப்படிபட்ட வியாபாரிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை சில்லறையில் பொருட்களை விற்பனை செய்வதைவிட ஒட்டுமொத்தமாக பொருட்களை வியாபாரம் செய்வதுதான் அவர்களது வரவு செலவை அதிகப்படுத்தும் அம்சமாகும்.

இந்த நடைமுறையை 1987 ம் ஆண்டிலேயே எனக்கு அத்துபடி என்பதால், உணவுத்துறை மட்டுமல்ல, மருந்து கொள்முதல், போக்குவரத்து கழகங்களுக்கு வாங்கப்படும் புதிய பேருந்துகள், அரசு துறைக்கு வாங்கப்படும் வாகனங்கள் என அனைத்திலும் அடக்க விலையை விட குறைத்தே கொள்முதல் செய்யப்படும்போது, அதைவிட அதிகமாக சந்தை விலையை விட கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்ததாக கூறப்பட்ட பல நிகழ்வுகளை கடந்த காலங்களில் நாம் நிறையவே பார்த்திருக்கிறோம்.

அதிமுக.வின் 1991- 96 கலர் டிவி ஊழல்கள், கடந்த ஆட்சியில் நியாய விலைக்கடைக்கு கொள்முதல் செய்யப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு ஊழல், சத்து மாவு, முட்டை கொள்முதல் முறைகேடு என முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களின் பட்டியல் மிகப் பெரியது.

கொங்கு மண்டலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக நண்பர்கள் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்களிடம் நல்ல பெயர் கிடைத்து வருகிறது என்று பேச தொடங்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய மாற்றமாக, பாராட்டுகளாக இதை நான் பார்க்கிறேன். இதே அணுகுமுறையை தொடர்ந்தால், திமுக ரவுடிக் கட்சி என்று கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலினால் வெகு விரைவாக உடைத்து எறிந்து விட முடியும்..

நியாய விலைக் கடைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் விலையை வெளிப்படையாக குறிப்பிட்டதைப் போல, மதுபான கொள்முதல், சுகாதாரத்துறைக்கு கொள்முதல் செய்யப்படும் மருந்து, மாத்திரைகள் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மையை திமுக அரசு கடைப்பிடிக்க தொடங்கினால், இந்தியாவில் தலைச் சிறந்த மாநிலமாக தமிழகம் வெகு விரைவாக அங்கீகரிக்கப்பட்டு விடும்…

தடம் மாறி விடாதீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே… தரணியெங்கும் வாழும் தமிழர்கள் உங்களை கொண்டாட காத்திருக்கிறார்கள். பொன்னான வாய்ப்பு உங்கள் முன் காத்திருக்கிறது.