சேலத்தில் நேற்றைய நிலவரப்படி ஒருநாள் கொரோனோ பாதிப்பு 664 …
ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்புக்கு சிகிச்சைக் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியுள்ளது.
சேலம் நகரில் அரசு மாவட்ட மருத்துவமனை உள்ளது. இதனையொட்டியே பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகமும் உள்ளது. இதனைத்தவிர்த்து, ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அளவில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளும் 50க்கும் மேற்பட்ட அளவில் சேலம் நகரிலேயே உள்ளன.
தொங்கும் பூங்காவில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் என தனித்தனியே பிரிவு துவக்கப்பட்டு சுமார் 500 படுக்கைகள் தயாராக உள்ளன. ஆனால், முழுமையான மருத்துவ கட்டமைப்பு அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மேலும் சிகிச்சை மையங்கள் உருவாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
ஒருபக்கம் அரசு நிர்வாகம் முழு மூச்சுடன் பணியாற்றி வந்தாலும், கொரோனோவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, கிராமங்களிலும் சோகக் குரல் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடமே கிடையாது. புதிதாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் தொற்றாளர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்கு கிடைப்பது, கடந்த ஒருவாரமாக கடும் போராட்டமாக உள்ளது.
நோய் தொற்றுக்கு ஆளானவர்களை ஆம்புலனிஸில் படுக்க வைத்துக் கொண்டு ஒருநாள் முழுவதும் அலையும் உறவினர்களின் சோகக் கதைகளைக் கேட்டால் ரத்தக் கண்ணீர்தான் வருகிறது.
சேலத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்துவதற்கும், அங்கு சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
சேலத்தில் கொரோனோ சிகிச்சையை மேம்படுத்தும் பணிகளை விரைவுப்படுத்தவும், மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காகவும் இன்று காலை சேலம் நகரின் மையப்பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அங்கு நூற்றுக்கணக்கான காரில் வந்திருந்த திமுக நிர்வாகிகளால், அமைச்சர் செந்தில்பாலாஜி தனது காரில் இருந்து இறங்கி, ஆட்சியரின் கூட்டரங்கிற்கு செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல்.
தனிமனித இடைவெளி சுத்தமாக கிடையாது. தன்னை வரவேற்க திரண்டிருந்த திமுக நிர்வாகிகளின் கூட்டத்தைப் பார்த்து அமைச்சர் செந்தில்பாலாஜியே மிரண்டுப் போனார். திமுக எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்) கௌதம சிகாமணி (கள்ளக்குறிச்சி, அமைச்சர் பொன்முடியின் புதல்வர்) சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் இராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா, மாநகர, மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள்.
ஒவ்வொருவரும் ஆர்வமாக பூங்கொத்து, பொன்னாடை வழங்கி மரியாதை செலுத்த முயன்றபோது நாசூக்காக அவற்றை தவிர்த்துவிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
திருவிழாக் கோலம் பூண்டதைப் போல திரண்டிருந்த திமுக நிர்வாகிகளை விலக்கிவிட்டு, ஆட்சியர் ராமன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் குழுமியிருந்த ஆய்வுக் கூட்டத்திற்குள் போவதற்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி மிகவும் சிரமப்பட்டு போய்விட்டார்.
ஆய்வுக் கூட்டத்தை நிறைவு செய்தவுடன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துவிட்டு, சேலம் இரும்பாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனோ சிகிச்சை மையத்தை ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றார்.
சேலம் நகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலையில் உள்ள இரும்பாலைக்கு அமைச்சர் புறப்பட்டுச் சென்றபோது, அவரின் காரை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து சென்றதைப் பார்த்து, சேலம் மாநகர மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வெற்றி விழா கொண்டாட்டம் போல திமுக.வினர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருகையை தூள் கிளப்பிவிட்டனர்.
கொரேனோ ஊரடங்கால் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்கள், அமைச்சரின் வருகையால், கொரோனோ நோய் பரவல் கட்டுக்குள் வரும், உடனுக்குடன் மருத்துவச் சிகிச்சை கிடைக்கும், விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்று எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், சேலம் மாவட்ட திமுக.வினரின் திடீர் உற்சாகத்தைக் கண்டு நொந்து போயினர்.
இத்தனைக்கும் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில்தான் திமுக வெற்றிப் பெற்றிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் திமுக படுதோல்வியை சந்தித்ததால் வெறுத்துப் போன முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு திமுக எம்.எல்.ஏ., வெற்றிப் பெற்றிருந்த போதும், அமைச்சர் பதவியை வழங்காமல் தவிர்த்துவிட்டார்.
சேலம் மாவட்ட அரசியல் வரலாற்றில், இதுவரை ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சராக இல்லாமல் இருப்பது என்பது இப்போதுதான். அமைச்சர் பிரதிநிதித்துவமே இல்லாத மாவட்டத்தில் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஆய்வு நடத்துவது என்பதும், அதை வரலாற்றுச் செய்தியாக மாற்றிய பெருமையும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கே உண்டு.
முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது கூட இவ்வளவு கார்கள் அணிவகுத்து சென்றதில்லை என்று வருத்தத்தோடு கூறுகிறார் பழம்பெரும் திமுக நிர்வாகி.
எளிமையான ஆட்சி நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபூண்டுள்ள நிலையில், அவருக்கே அவப்பெயரை தேடித் தரும் வகையில், சேலத்தில் திமுக நிர்வாகிகள் கொரோனோ கட்டுப்பாட்டு நெறிமுறைகள் ம்ற்றும் ஊரடங்கு விதிகளை துளியும் சட்டை செய்யாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க திரண்டது, நிச்சயமாக சேலம் மக்களிடம் திமுக.வுக்கு மேலும் அவப்பெயரைதான் ஏற்படுத்தி தரும் என்று வேதனையோடு தெரிவித்தார்.
அமைச்சரை வரவேற்க திரண்ட திமுக.வினரால் நல்ல அம்சமே இல்லையா என்று கேட்டால், ஒரு நிகழ்வை கூறலாம். வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர், கொரனா பெருந்தொற்று பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ 2,00,000 வரைவோலையை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் வழங்கினார்.
வெண்ணிலா சேகரைப் போல மற்ற திமுக நிர்வாகிகள் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்திருந்தால் கூட சேலம் மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கிடைத்திருக்கும்…