இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ…
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை முன்களப் பணியாளர்கள் உயிரிழப்பதாக வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
மருத்துவத்துறை பணியாளர்களின் தியாகம் அளவிட முடியாதது. அவர்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கங்கள்.கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த போது தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் இருந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 54,896 மட்டும் தான். ஆனால், இன்றைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1.52 லட்சத்தைக் கடந்து விட்டது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசு மருத்துவமனைகளிலும், அரசு கோவிட் மையங்களிலும் தான் மருத்துவம் பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்காக மருத்துவம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து விட்ட நிலையில், அவர்களுக்கு மருத்துவம் அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. இருக்கும் மருத்துவர்கள் தான் அனைவருக்கும் மருத்துவம் அளிக்க வேண்டி உள்ளது. அதனால் அவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, பல நாட்களில் பணி நேரத்தை விட கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் பணியாற்ற வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை பரவியபோது இரு வாரம் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஒரு வாரம் ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அத்தகைய ஓய்வு அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, கடந்த முறை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்பட்டது.
ஆனால், இந்த முறை அத்தகைய சிறப்பு ஊதியம் வழங்கப்படாமல், பணிச்சுமையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் தியாக உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பான சேவைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அதற்காக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி முடிக்கும் வரை, உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற மருத்துவப் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
பணியின் போது உயிர்த்தியாகம் செய்த மருத்துவப் பணியாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிதியுதவியை தாமதமின்றி அவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். இவை அனைத்தையும் விட, மருத்துவத்துறையினரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களை போதிய எண்ணிக்கையில் நியமிக்க அரசு முன்வர வேண்டும்.
இவை தவிர மருத்துவர்களின் நிறைவேற்றப்படாத முக்கியமான கோரிக்கை ஒன்று உள்ளது. மத்திய அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கும், மாநில அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கும் இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்பது தான் அந்தக் கோரிக்கை ஆகும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொடக்கநிலை ஊதியம் ரூ.56,100 என்ற ஒரே அளவு தான். ஆனால், ஐந்தாவது ஆண்டிலிருந்து இந்த ஊதியம் மாறுபடத் தொடங்குகிறது.
இதற்குக் காரணம் மத்திய அரசு மருத்துவர்களுக்கு முறையே 4, 9, 13, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் வழங்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் மாநில அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளின் இறுதியில் தான் வழங்கப்படுவது தான். இதனால் 14-ஆம் ஆண்டில் தொடக்கத்தில் மத்திய அரசு மருத்துவர்கள் பெறும் அடிப்படை ஊதியமான ரூ. 1.23 லட்சத்தை, மாநில அரசு மருத்துவர்கள் 20-ஆவது ஆண்டில் தான் பெறுகின்றனர்; 14-ஆவது ஆண்டில் அவர்களுக்கு ரூ.86,000 மட்டுமே கிடைக்கிறது.
மாநில அரசு மருத்துவர்கள் அவர்களின் 14-ஆவது ஆண்டு பணிக்காலத்தில் தொடங்கி, பணி ஓய்வு பெறும் வரை, மத்திய அரசு மருத்துவர்களை விட ரூ.45,000 வரை குறைவான ஊதியம் பெற வேண்டியிருக்கிறது. உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடும் மருத்துவர்களுக்கு இதை விட மோசமான அநீதியை இழைக்க முடியாது.தமிழக அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை களைய வேண்டும் என்று கடந்த மூன்றரை ஆண்டுகளில் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.
மருத்துவர்களின் கோரிக்கைகளை ஆராயும்படி மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் ஆணையிட்டது; மருத்துவர்களும் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.எனினும், இவற்றை மனதில் கொள்ளாமல் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
மருத்துவர்களின் இந்த அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மருத்துவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தின் 5, 9, 11, 12 ஆகிய ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.