Sat. Nov 23rd, 2024

தமிழகத்தில் திமுக முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற ஆண்டில் இருந்து இன்றோடு 54 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அக்கட்சியின் மூன்றாவது முதல்வராக 68 வயதில் மு.க.ஸ்டாலின் பதவியேற்று 24 மணிநேரங்களை கடந்துவிட்டது. அவரது ஜாதகத்தில் முதல்வராக பதவியேற்கும் யோகமுமே இல்லை என்று ஜோதிடர்கள், அரசியல் தலைவர்கள் கூறியது தொடர்பாக நிறைய பேர் கலாய்த்து வருகிறார்கள். அவற்றில் இருந்து மாறுபட்டு சி.எம் என்ற வார்த்தை மு.க.ஸ்டாலினை எந்தளவுக்கு திக்குமுக்காட வைத்துள்ளது என்பதற்கு ஒரே ஒரு நிகழ்வு ஏற்படுத்திய சுவாரஸ்ய அம்சத்தை மட்டுமே விவரிக்கிறது இந்த செய்திக் கட்டுரை….

ஃபிளாஷ் பேக்.

2008 ஆம் ஆண்டு. மதுரை தினகரன் எரிப்பு நிகழ்வால் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்திற்கும் கலாநிதி, தயாநிதி மாறன் குடும்பத்திற்கும் பிளவு ஏற்பட்டு,இரண்டு குடும்பங்களும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழல் இருந்தது. இரண்டு குடும்பங்களையும் இணைக்கும் பணியில் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஆற்காடு வீராசாமி பல மாதங்களாக பாடுபட்டு வந்தார்.

இதுபற்றி 2008 ஆம் ஆண்டு குமுதம் ரிப்போர்ட்டரில் பல கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பான்மையான கட்டுரைகளை எழுதியவர், தற்போது ஊடகங்களில் நடைபெற்று வரும் அரசியல் விவாதங்களில் பிஸியாக இருக்கும் மூத்த ஊடகவியலாளர் எஸ்.பி.லட்சுமணன்தான். அப்போது கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களின் குணாதிசயங்களை துல்லியமாக படம் பிடித்து காட்டியிருந்தார். அதில் ஒருவர் மு.க.ஸ்டாலின்.

அன்றைய காலத்தில் அவருக்கு யார் வணக்கம் தெரிவித்தாலும், முக்கிய பிரமுகர்களாக இருந்தாலும் கூட, பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் பழக்கமே மு.க.ஸ்டாலினிடம் இருக்காது என்று குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு கைகளை கூப்பி மு.க.ஸ்டாலின் வணக்கம் சொல்லி யாருமே பார்த்திருக்க முடியாது என்றும் மிகைப்படுத்தியிருந்தார். அன்றைய நிலையில் இருந்து கடந்த 12 ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் எந்தளவுக்கு மாறியிருக்கிறார், அரசியல் அனுபவங்கள் அவரை எந்தளவுக்கு முதிர்ச்சியடைய வைத்திருக்கிறது என்பதை உணர்த்துவதுதான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம்..

இடைச்சொருகலாக, அம்மா உணவகத்தை திமுக.வினர் அடித்து நொறுக்கிய நிகழ்வு, சமூக ஊடகங்களில் வைரலாக பரவிக் கொண்டே இருக்கிறது. அம்மா என்ற வார்த்தையே மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது, அம்மா என்று உச்சரித்தாலே ஜெயலலிதாவை மட்டுமே குறிக்கும் என்று தப்பாக கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் பற்றி எஸ்.பி.லட்சுமணன் குறிப்பிட்டதைப் போலவே, கனிமொழி கருணாநிதியைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

2008 காலகட்டத்தில், தலைமைச் செயலகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் கனிமொழியை, கனியம்மா என்றுதான் அழைத்தார்கள் என்ற செய்தியை, குமுதம் ரிப்போர்ட்டரில் அட்டைப்பட கட்டுரையாக வழங்கியிருக்கிறார் எஸ்.பி. லட்சுமணன்.

பேக் டூ ஸ்டாலின்..

முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று காலை பதவியேற்றபோது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்கலங்கியதை தொலைக்காட்சி நேரலையில் பார்த்து நெகிழ்ந்து போனவர்கள் ஏராளம். அதைவிட சுவாரஸ்யமான ஒரு அம்சம் இருக்கிறது. அதுவும் மு.க.ஸ்டாலினே புளாங்கிதம் அடைந்த நிகழ்வுதான் அது. பதவியேற்ற கையோடு கலைஞர், அண்ணா நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

இரண்டு நினைவிடங்களிலும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்திவிட்டு நடந்து வந்த போது, அங்கிருந்த ஊடக புகைப்படக் கலைஞர்கள், தொலைக்காட்சி ஒளிப்பதிவு கலைஞர்கள், சி.எம். சார்..சி.எம். சார் என்று சத்தம் போட்டு மு.க.ஸ்டாலினை அழைத்திருக்கிறார்கள். தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக 100க்கும் மேற்பட்டவர்கள் கோரஸாக சி.எம். சார் என்று கூப்பிட்டதை கேட்டவுடன் புளாங்கிதம் அடைந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

உள்ளத்தில் பொங்கி வழிந்த உணர்ச்சிப் பெருக்கில், ஒவ்வொரு ஊடகவியாளர்களுக்கும் நின்று நிதானமாக இருகரம் கூப்பி வணக்கம் சொல்லியவாறே நகர்ந்துள்ளார். அவரின் முகத்தில் ஒளிர்ந்த மகிழ்ச்சி வெள்ளத்தைப் பார்த்து நெகிழ்ந்துப் போன பிற மொழி மூத்த புகைப்படக்கலைஞர் ஒருவர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் அபூர்வமாக காணப்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை அப்படியே உணர்ச்சிப் பொங்க கூறினார்.

பதவியேற்வு விழாவின் போது செய்தித்துறையில் பணியாற்றும் வீடியோகிராபர், போட்டோகிராபர் ஆகியோரைதான் மு.க.ஸ்டாலின் அருகே அனுமதித்தார்கள். அவர்கள் கடமையே கண்ணாக பாவித்து படம் எடுத்தார்கள். ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் இருந்தவரை அவரின் அருகே சென்று யாரும் சி.எம். சார் என்று கூப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடற்கரையில் இரண்டு நினைவிடங்களிலும் கூடியிருந்த திமுக தொண்டர்களும் தளபதி வாழ்க என்றுதான் முழக்கம் போட்டார்கள். ஆளுநர் மாளிகையில் இருந்து அவரை தொடர்ந்து வந்தேன். முதல்முறையாக மு.க.ஸ்டாலினை, சி.எம்.சார் என்று நாங்கள் அழைத்தபோது, உண்மையிலேயே அவர் நெகிழ்ந்து போனார்.

அதை கண் கூடாக பார்த்த போது, மு.க.ஸ்டாலினிடம் ஏற்பட்டுள்ள முதிர்ச்சி வியப்பில் ஆழ்த்தியது. பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, குழந்தையின் காதில் பெயரை சத்தமாக உச்சரிப்பதைப் போல, மு.க.ஸ்டாலினை சி.எம்.சார் என்று அழைத்த மகிழ்ச்சி எங்களுக்கும் ஏற்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவரை புகைப்படம் எடுத்து வருகிறேன். அப்போதெல்லாம் அவரது உடல்மொழியில் ஒருவிதமான அலட்சியப்போக்கு தெறிக்கும். ஆனால், நேற்று முற்றிலும் மாறுபட்ட மனிதராக, அனுபவத்தின் முதிர்ச்சி வெளிப்பட்டது.

அதைவிட மேடை நாகரித்திற்கு சிறப்பு சேர்ந்த அவரின் மனப்பாங்கு, இப்போது கூட என்னை உணர்ச்சிவசப் பட வைக்கிறது. பதவியேற்பின் போது, ஒவ்வொரு அமைச்சராக மேடைக்கு வந்த போது, பதவியேற்பதற்கு முன்பாக மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னார்கள். அப்போதெல்லாம் இருக்கையில் இருந்து எழும் வகையில், அவசர அவசரமாக கைகாட்டி, முதலில் பதவி ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மு.க.ஸ்டாலின் சொன்னது எல்லாம் சான்ஸே இல்லை.

மிகுந்த பக்குவம் வந்திருக்கிறது. ஆச்சரியப்படத்தக்க வகையில் நிதானத்தை காட்டுகிறார். சிடுசிடுவென்று இருக்கும் முகம் மாறி, எப்போதும் சிரித்த முகமாக காட்சியளிக்கும் அளவிற்கு உடல் அளவிலும், உள்ளத்திலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதே பண்பு, ஆட்சி முழுவதும் தொடர்ந்தால், கலைஞர் மு.கருணாநிதிக்கு கிடைத்த புகழ் வெளிச்சம், மு.க.ஸ்டாலினுக்கும் நிரந்தரமாகும் என்று பாராட்டு மழை பொழிந்தார் புகைப்பட ஊடகவியலாளர்.

தந்தை வழியில் தனையனின் பண்பாடு…..

நேற்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படியிருந்ததோ, அதற்கு இணையாகவே திமுக இளைஞரணி உதயநிதியின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கத்தக்க வகையில் இருந்ததாக கூறுகிறார்கள், பதவியேற்பு விழாவை ஒருங்கிணைத்த செய்தி மக்கள் தொடர்புத்துறை உயரதிகாரிகள்.

எதிர்பார்ப்புக்கு மாறாக கூட்டம் அதிகம் வந்துவிட்டது. அடுத்தடுத்து பிரமுகர்கள் வந்ததால், அவர்களை வரவேற்று, அவரவருக்கு உரிய இடத்தில் அமர வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த களேபரங்களுக்கு இடையே நடிகர் கமல்ஹாசன், விழா அரங்கிற்குள் வந்ததை கவனிக்க தவறிவிட்டோம். அவரும் வரவேற்பைப் பற்றி கவலைப்படாமல் உள்ளே வந்து அமர்வதற்கான இடத்தை தேடினார். அப்போதுதான் அவரைப் பார்த்த உதயநிதி, ஓடிப் போய் அவரை வரவேற்றதுடன், அவரின் மனம் நோகாமல் அழைத்துச் சென்று அமர வைத்தார்.

இப்படி பல பிரமுகர்களை வரவேற்பதிலும், அவர்களுக்கு இருக்கைகளை ஒதுக்குவதிலும் செய்தித் துறை அதிகாரிகளின் வேலைகளை கால் பங்கு அளவுக்கு எடுத்துக் கொண்டார் உதயநிதி. அதே அளவுக்கான நேசத்தை, அவரின் பெரியப்பா மு.க.அழகிரியின் மகன் தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோர் வந்து இருக்கைகளை தேடிக் கொண்டிருந்த போது உதயநிதி ஓடோடிச் சென்று இருவரையும் பாசத்தோடு அரவணைத்து, இருக்கைகளில் அமர வைத்தார்.

அதுபோல திமுக மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதியும் மிகவும் எளிமையாக நடந்துகொண்டார். தனது சகோதரரின் பதவியேற்பு விழா என்று பந்தா காட்டாமல், மற்ற விருந்தினர்களைப் போலவே வந்து, மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் இடத்தில் இருக்கை வேண்டும் என்று எதிர்பார்க்காமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டார்.

பாவம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். கூட்டணி தலைவர்கள் அமர்ந்த இடத்தில் அவருக்கு இருக்கை கிடைக்கவில்லை. பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் தவித்தார்.

ஒட்டுமொத்தமாக நேற்றைய பதவியேற்பு விழா உணர்ச்சி கொந்தளிப்பாக அமைந்துவிட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகு கொண்டாட்ட காலமாக இருந்ததால், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எப்படி உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தார்களோ, அதை விட பலமடங்கு செய்தித்துறை அதிகாரிகளும் உணர்ச்சி மிகுதியில் திக்குமுக்காடிவிட்டோம்.

கடந்த பத்தாண்டுகளில் அதிமுக அரசு எங்களை பழிவாங்கியதால், எங்களையும் மீறி ஒரு வெறித்தனமான உற்சாகம் பீறிட்டுவிட்டது. அதனால், நேற்றைய தினம் அரசு அதிகாரி என்ற உணர்வு மறந்து போய், தலைவரை கொண்டாட வேண்டும் என்று மனநிலையிலேயே முழுநாளும் இருக்கும்படி ஆகிவிட்டது என்று வெட்கத்தோடு கூறி முடித்தார் செய்தித்துறை உயரதிகாரி…