Sun. Nov 24th, 2024

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற வேட்பாளர்களைவிட, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர்கள் யார் ? என்ற கேள்விதான் அரசியல் தலைவர்களிடம் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடையே நடைபெற்று வரும் விவாதத்தைப் போல, பொதுமக்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

காலை முதல் மாலை வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது தொகுதியில் அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், அவரையே முந்தி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார், திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.பெரியசாமி.

இரவு 8 மணியளவில் 1,34,110 வாக்குகள் வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி முன்னிலை பெற்றுள்ளார். இன்னும் இரண்டு மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையிலும், தமிழகத்தில் எந்தவொரு வேட்பாளரும் பெபறாத வகையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் ஐ.பெரியசாமி.

ஆத்தூரில் அவரை எதிர்த்து போட்டியிடும் பாமக பொருளாளர் திலகபாமா, பரிதாபமான தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் டெபாசிட் வாங்குவாரா? என்பதே சந்தேகமாக உள்ளதாக கூறுகிறார்கள் ஆத்தூர் தொகுதி பாமக நிர்வாகிகள்.

ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றிப் பெற்று வரும் ஐ.பெரியசாமி, அந்த தொகுதிக்குப்பட்ட அனைத்து மக்களையும் தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்து வைத்திருப்பவர். மங்களகரமான விழா, துயரமான தரூணம் போன்ற சந்தர்ப்பங்களில் தாமதம் இன்றி முதல்நபராக நிற்பவர் ஐ.பெரியசாமி என்று நெஞ்சம் நெகிழ்ந்து பேசுகிறார்கள் ஆத்தூர் தொகுதி மக்கள்.

அங்கு அவரை திமுக வேட்பாளராக பார்க்காமல், தங்கள் குடும்பத்தின் தலைமகனாக ஒவ்வொருவரும் பார்ப்பதால்தான், இந்தளவுக்கான வாக்கு வித்தியாசம் சாத்தியமாகி இருக்கிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியான அதிமுக.வில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவர்.

முதலமைச்சர் என்ற பதவியில் இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ள வித்தியாசத்திற்கும் முன்னாள் அமைச்சர், தற்போது சாதாரண சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் உள்ள ஐ.பெரியசாமி பெற்றுள்ள வாக்கு வித்தியாசம், இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத சாதனை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

1989 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தேர்தலை சந்தித்து வரும் ஐ.பெரியசாமி, 8 வது முறையாக ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரின் சாதனையை முறியடிக்க இனிமேல்தான் ஒருவர் பிறந்து வர வேண்டும் என்று கெத்து காட்டுகிறார்கள் ஆத்தூரில் உள்ள திமுக நிர்வாகிகள் பலர்.