Sat. May 4th, 2024

கொரோனோ தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளை ( டாஸ்மாக் ) உடனடியாக மூட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ…….

கொரோனா கொடுநோய் தொற்றின் இரண்டாவது அலையினால்
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அளவுக்கு அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக சிறு குறு வணிக நிறுவனங்களும், பூக்கடை வியாபாரிகளும், முடி திருத்தும் நிலையங்களும், திரையரங்குகளும் மூட மத்திய, மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து கோவில்களில் வழிபாட்டு தலங்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. இதனால் மதுபான கடைகளில் கூட்டம் அதிகளவு உள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா பரவலையும், பாதிப்பையும் தடுக்கும் விதமாக புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மோசமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் புதுச்சேரி அரசு எடுத்த நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது. ஆனால், இதனிடையே, புதுச்சேரியில் மதுபான கடைகள் மூடப்பட்டதால் அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழக எல்லையில் உள்ள மதுபான கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். அதேபோன்று கேரளாவைச் சார்ந்தவர்களும் தமிழகத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இப்படியான சூழலை தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

புதுச்சேரி அரசை போன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

மாநிலத்தின் நிதியாதாரத்தை ஜி.எஸ்.டி மூலமாக மத்திய அரசின் காலில் சமர்ப்பித்துவிட்டு, மாநில நிதி நெருக்கடியை ஈடுகட்ட மதுபான கடைகளை திறந்து மக்களிடம் இருந்து மாநில காபந்து அரசு கொள்ளையடிப்பது, மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அவர்கள் உண்ணும் உணவில் சேற்றை அள்ளி கொட்டுவதை போன்றது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம் சாட்டுகிறது. கொரோனாவை விடக் கொடுமையான தொழில்நசிவு, வேலையின்மை, வருவாய் இழப்பு ஆகியவை பலரை அன்றாடம் தற்கொலையை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தற்போது மதுபான கொள்ளையும் இணைந்து பசி பட்டினி மரணங்களை அதிகரிக்கச் செய்யக் காத்திருக்கிறது.

கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் உள்ளனர். அப்படி வேலைக்கு செல்வோருக்கும் போதிய ஊதியம் இல்லை. இந்த நிலையில் ஆண்கள் பெரும்பாலானோர் தனது வருமானத்தை மது மற்றும் போதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குடும்பம் நடத்த முடியாத நிலையில் பெண்கள் தவிக்கின்றனர்.

மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்றும், அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், மது அருந்துவதற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

எனவே கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், தமிழக மக்களின் நலன் கருதியும், உலக சுகாதார அறிவுரையும் ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு முன்வர வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.