Fri. Nov 22nd, 2024

மே 2 ஆம் தேதியை ஆவலுடன் திமுக எதிர்நோக்கியுள்ளதைப் போலவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவுக் கூட்டமும் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் போலவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறாராம்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளதால், தனது தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடிப்பவர்கள் ரத்தினங்களைப் போல ஜொலிக்க வேண்டும் என்று நீண்ட யோசனைக்குப் பிறகே ஒவ்வொரு பெயராக சேர்த்துக் கொண்டிருக்கிறாராம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியத்தைப் போல, தனது தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும், மேலும் ஒரு வரலாற்று சாதனைப் படைக்கும் என்று அசாத்திய நம்பிக்கையுடன் இருந்து வரும் முதல்வர் இ.பி.எஸ்., எந்தவிதமான கட்டாயத்திற்கும் அடிபணியாமல், அசாத்திய திறமைக் கொண்டவர்களைத் தேடி தேடி அமைச்சரவையை உருவாக்கி வருகிறாராம். அதில், துணை முதல்வர் பெயரே இல்லை என்று அதிர்ச்சி வைத்தியம் தருகிறார்கள் இ.பி.எஸ். நிழல் போல உள்ள அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.
அவரின் அற்ப சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள கேட்டோம்..துள்ளிக் குதித்தபடி பேசத் தொடங்கினார்.

மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக.வுக்கு வரும் வெற்றிச் செய்திகளுக்கு ஒரே ஒருவர் மட்டும்தான் சொந்தம் கொண்டாட முடியும். அவர் யாரென்றால், விவசாயிகளின் முதல்வர் இ.பி.எஸ்.தான். முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வைத்த மதிநுட்பமாகட்டும், தேர்தலுக்கான கூட்டணி அமைத்த வியூகமாகட்டும், எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அரசியல் சாதூரியமாகட்டும், அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்கிய கொடைத்தன்மையாகட்டும், ஒற்றை மனிதராக அதிமுக எனும் தேரை பெரும்பாடுபட்டு இழுத்துச் சென்றவர் இ.பி.எஸ்.தான். அதனால், அதிமுக.வுக்கு கிடைக்கும் வெற்றி என்பது இ.பி.எஸ்.ஸுக்கு கிடைக்கும் வெற்றி என்பதை கொங்கு மண்டலம் மட்டுமின்றி, வடக்கு மண்டலமும், டெல்டா மண்டலமும் புரிந்து வைத்திருக்கிறது. தெற்கு மண்டலத்தில் பாதிப்பேர் இ.பி.எஸ்.ஸின் ராஜதந்திரத்திற்கு மயங்கிக் கிடக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் அதிமுக.வில் 70 சதவிகிதம் நிர்வாகிகள் இ.பி.எஸ். தலைமைக்கு வெண் சாமரம் வீச தயாராகிவிட்டார்கள். அதிமுக.வின் அஸ்திவாரம் என ஐந்து சமுதாயத்தைச் சொல்லுவார்கள். கொங்கு மண்டலம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலத்திலேயே இரண்டு பெரும்பான்மை சமுதாயத்தினர், ஐந்தாவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயம் என இந்த ஐந்து சமுதாயத்தில், தெற்கு மண்டலத்தில் உள்ள ஒரே ஒரு பெரும்பான்மை சமுதாயம் மட்டும் இ.பி.எஸ்.தலைமைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதுவும்கூட முழுமையாக இல்லை. அந்த சமுதாயத்தில் பாதிப்பேர், இ.பி.எஸ்.ஸின் கடந்த நான்காண்டு கால ஆட்சி மற்றும் கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து, இ.பி.எஸ்., தலைமையே தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அவர்களின் சாதியின் பெயரால் கட்டாயப்படுத்தி இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக கொடிப் பிடிக்க ஒரு கூட்டம் முயன்று கொண்டிருக்கிறது.
அப்படிபட்டவர்களுக்கு அடைக்கலம் தருபவராக ஓ.பி.எஸ். இருக்கிறாரே என்ற வேதனை, அதிமுக.வில் உள்ள 90 சதவிகிதம் நிர்வாகிகளுக்கு இருக்கிறது. ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக.வை மே 2 ம் தேதிக்குப் பிறகு எப்படி வழிநடத்திச் செல்வது என்பது தொடர்பாக இ.பி.எஸ்.ஸுடன் முன்னணி நிர்வாகிகள் தொடர்ச்சியாக ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக.வும் இரட்டை இலையும், ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிடக் கூடாது, அடிமை வாழ்க்கைக்கு மீண்டும் வழி வகுத்துவிடக் கூடாது என்ற ஒரே சிந்தனைக்கு 90 சதவிகிதம் அதிமுக நிர்வாகிகள் வந்துவிட்டனர்.
ஆட்சியிலும், கட்சியிலும் இ.பி.எஸ். தலைமையே நீடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கக் கூட பெரும்பான்மையான அதிமுக நிர்வாகிகள் தயாராகிவிட்டனர்.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவே பஞ்சாயத்து நடத்தும் நிலைக்கு கொண்டு சென்ற ஓ.பி.எஸ். மீது கொங்கு மண்டல நிர்வாகிகளுக்கு கோபம் இருக்கிறது. வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்தைப் போல தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த போது 10.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால், அவருக்கு எதிராக வடக்கு மண்டல சமுதாய நிர்வாகிகளும் அடங்காத கோபத்துடன் இருக்கிறார்கள். தென் மாவட்டங்களிலேயே பெரும்பான்மை சமுதாயமாக உள்ள ஒரு பிரிவினருக்கு கடந்த காலங்களில் ஆதரவாக நிற்காத காரணத்தால் அவர்களும் ஒ.பி.எஸ்.ஸுக்கு எதிராக திரண்டிருக்கிறார்கள். அதிகாரமிக்க பதவியில் அவர் இருந்த போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அணுசரணையாக இல்லை என்ற கோபம் அந்த சமுதாய நிர்வாகிகளுக்கும் இருக்கிறது. இப்படி அதிமுக.வை தாங்கி நிற்கும் ஐந்து சமுதாயத்தில், நான்கு சமுதாய மக்கள், இ.பி.எஸ். தலைமைக்கு தயாராக இருக்கிறார்கள்.
இன்றைய நிலையிலும் கூட ஓ.பி.எஸ்.ஸுக்கு வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் மீதான பாசம் அகலவில்லை.


இப்படி அவருக்காக கொடி பிடிக்க தயாராக இருக்கும் கூட்டத்திற்கு உண்மையான விசுவாசத்தை காட்டாமல் பெரிய அண்ணன் என்ற நினைப்பில் நடந்து கொள்ளும் ஓ.பி.எஸ்.ஸை புறக்கணித்துவிட்டு, அதிமுக.வை இ.பி.எஸ். வழிநடத்த வேண்டும் என்று ஆணித்தரமாக முன்னணி நிர்வாகிகள் பேசியதை அப்படியே உள்வாங்கிக் கொண்டுள்ளார் இ.பி.எஸ்.
தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள சமுதாய நிர்வாகிகளோடு இணைந்து பயணிக்க தயாராகிவிட்டார் இ.பி.எஸ். அந்த வகையில் அதிமுக ஆட்சியில் அமர்ந்தால், மூன்று துணை முதல்வர்கள், இ.பி.எஸ். அமைச்சரவையில் இருப்பார்கள். எஸ்.பி.வேலுமணி அல்லது பி.தங்கமணி, சி.வி.சண்முகம் அல்லது கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் அல்லது ராஜன் செல்லப்பா இந்த ஆறுபேரில் மூன்று பேருக்கு துணை முதல்வர் பதவி நிச்சயம் வழங்கப்படும்.
துரதிர்ஷ்டவசமாக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவானால், இந்த 6 பேரில் மூன்று பேருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி நிச்சயம். கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் இணை பொதுச் செயலாளர்கள். அவசரப்பட்டு பொதுச் செயலாளர் யார் என்று கேட்டுவிடாதீர்கள். சாட்சாத் இ.பி.எஸ்.தான் பொதுச் செயலாளர். இப்படியொரு மெகா திட்டம் தொடர்பான ஆலோசனைகள்தான் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு சூடாக விவாதிக்கப்பட்டு வந்தது
இ.பி.எஸ்.ஸை வந்து சந்திப்பவர்கள் எல்லாம் திரும்பி செல்லும் போது உற்சாகமாக செல்வதைப் பார்த்து நாங்களும் பூரித்துக் கிடக்கிறோம். மே 2 ஆம் தேதிக்கான விடியலை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் இ.பி.எஸ்.ஆதரவு நிர்வாகி.
இ.பி.எஸ்.தேரில் ஓ.பி.எஸ்.ஸுக்கு இடம் இல்லையா என்று அதிர்ச்சியாகி தேனி மாவட்ட அதிமுக நிர்வாகியிடம் கேட்டோம். ஓ.பி.எஸ். விசுவாசி சோகத்தோடு பேசினார். சேலத்தில் இருந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியாகதான் இருக்கின்றன. போடி நிலைமையும் சரியில்லையே.. மே 2 ஆம் தேதி போடி அதிமுக.வினர் பட்டாசு கொளுத்துவார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்த நேரத்தில், ஓ.பி.எஸ்.ஸும் எங்களுக்கு ஆதரவாக இல்லை, போடி வீட்டுகுப் போனால், பெரியகுளம் வீட்டுக்குப் போய் பாருங்கள் என்கிறார்கள். பெரிய குளம் போனால் பண்ணை வீட்டுப் போங்கள் என்கிறார்கள். எங்கே இருக்கிறார் ஓ.பி.எஸ். என்று எங்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் மனதில் இருப்பதை பகிர்ந்து கொண்டால்தானே எங்களுக்கும் தெம்பாக இருக்கும்.
மே 2 க்குப் பிறகு இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக அவர் முடிவெடுத்தால், மன்னார்குடி குடும்பத்தினர் எங்களை கருவேப்பிலை மாதிரிதான் பயன்படுத்திக் கொள்வார்கள். டெல்லி பக்கம் தலையை காட்டினால் காவி துண்டோடு வரவேற்பார்கள். எங்கள் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை அறிந்து கொள்ள நல்ல ஜோதிடர் இருந்தால் சொல்லுங்கள் என்று நம்மிடமே பரிதாபமாக கேட்கிறார்கள், தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள்..

பணிவுக்கே பல்பா….