முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு கால ஆட்சிக்கு மேகம் போல குடையாக காத்து நின்றது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு. தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிரான ஊழல் புகார்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்த அதிமுக ஆட்சிக்கு எதிரான புகார்களையும் கடந்த நான்காண்டுகளாக குப்பையிலேயே போட்டு வைத்து, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு கிடைக்காத செல்வாக்கை, எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி குளிர்வித்து வந்தது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு.
அதன் விளைவுதான், ஊழல் துறையாக மாறிப் போன உள்ளாட்சித்துறைக்கு அதிகளவிலான விருதுகளை வாரி வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒருசேர கொண்டாட்டத்தில் திளைக்க வைத்தது, மத்திய அரசு.
அதேபோல, ஊழலில் யார் முதலிடம் என்று போட்டி வைத்தால் உள்ளாட்சித்துறையை வீழ்த்தி விட்டு முதலிடத்தை பிடிக்கும் சுகாதாரத் துறைக்கும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கும் மத்திய அரசு நற்சான்றிதழ்களை தொடர்ந்து வழங்கி கொண்டே வந்தது.
இப்படி நான்காண்டுகளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு முட்டுக் கொடுத்து வந்த பிரதமர் மோடி, ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மீதிருந்த நல்லெண்ணத்தை கொஞ்சம் கொஞ்சம் விலக்கி கொண்டுவிட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முதல் காரணமாக கூறப்படுவது, அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறாது என்று மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கைதான் காரணமாம். அதேபோல, கன்னியாகுமரி நாடாளுமன்றத் இடைத்தேர்தலிலும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்ற தகவலும், பிரதமரை கோபமாக்கியுள்ளது.
தமிழகத்தில் பாஜக.வுக்கு படுதோல்விதான் கிடைக்கும் என்ற தகவலை ஜீரணிக்க முடியாத பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி மீதான கோபத்தை, உள்துறை துறை அமைச்சர் அமித்ஷா,, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் பேசும்போது வெளிப்படுத்தியதாக டெல்லியில் உள்ள தமிழக அரசியல் தலைவர் கூறுகிறார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே பலமான கூட்டணி அமைத்து அமோக வெற்றிப் பெற்ற திமுக., அதே கூட்டணி பலத்தோடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், அதிமுக மிகவும் பலவீனமாக இருக்கிறது, கூட்டணியை மேலும் பலமாக்க வேண்டும் என்ற எவ்வளவோ அறிவுரைகளை கூறிய போதும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, அமமுக.வை கூட்டணியில் சேர்க்காதது மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் வழங்காமல் அலட்சியம் காட்டினார்.
மேலும், ஏற்கெனவே கூட்டணியில் இருந்த தேமுதிக.வையும் கழற்றிவிட்டு விட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரின் அதிகார மமதையால்தான் தேமுதிக வெளியேறியிருக்கிறது. தனது பெயரைச் சொன்னாலே, அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்து விடும் என்று ஜெயலலிதாவை மிஞ்சிய தலைவராக தன்னை நினைத்துக் கொண்டு, பலவீனமான கூட்டணியோடு தேர்தலை எதிர்கொண்டதால்தான் பாஜக.வுக்கும் சேர்த்து வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக.வால் பாஜக.வுக்கு எந்த நன்மையும் இல்லை.. ஆனால், அண்மைக்காலமாக இந்து மதத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த அபரிதமான ஆதரவு அலை, அதிமுக.வுக்கு உதவியுள்ளது. அதிமுக கூட்டணியால் பாஜக.வுக்கு எந்த நன்மையும் இல்லை. வாக்காளர்களை உரிய முறையில் அணுகியிருந்தால், ஒன்றிரண்டு தொகுதிகளில் பாஜக எளிதாக வெற்றிப் பெற்றிருக்கும் என்றும் மத்திய அரசின் உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களின்படி, அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்ததை பெற்றுவிடும் என்றும் ஒரு தொகுதியில் கூட பாஜக.வுக்கு வெற்றி கிடைக்காது என்றும் தெளிவாக கூறுகிறது.
எடப்பாடி பழனிசாமி மீதான தனிப்பட்ட நம்பிக்கையின் காரணமாகதான், மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்தது. ஆனால், அவையெல்லாம் பாஜக.வுக்கு தமிழகத்தில் வலுவான அடித்தளத்தை உருவாக்கி தரவில்லை என்பதால், இனிமேலும் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசோ, பாஜக.வோ உதவிக்கரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவு வந்த பிறகு, தமிழகத்தில் புதிய திட்டத்தோடு களமிறங்கி பாஜக.வை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கான ஆலோசனைகளை வழங்குங்கள் என்று பிரதமர் மோடி தனது எண்ணத்தை வெளிப்படுத்தி விட்டதாக கூறுகிறார் அந்த டெல்லி தமிழ் அரசியல் தலைவர்..
பிரதமர் மோடி கைகழுவிவிட்ட கதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? என்று கேட்டோம். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகுகிறது என்பதை ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு டெல்லியில் உள்ள தமிழக உயரதிகாரிகள் மூலம் முதல்வருக்கு தகவல் கிடைத்தது. அவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சிதான். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை. பாஜக.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எப்படி வெளிப்படுத்துவது என்று அவரும் சரியான நேரத்திற்காக காத்திருந்தார். ஆக்சிஜன் தட்டுப்பாடு வடிவில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரம் தோதாக அமைந்துவிட்டது.
பாஜக.வுக்கு எதிரான நிலைப்பாட்டை துணிச்சலாக எடுக்கவும், திமுக.வோடு நட்புப்பாலம் அமைக்கவும் அனைத்துக் கட்சி கூட்டம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரின் இந்த ராஜதந்திரம்தான் அதிமுக.வுக்கு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. ஆளும்கட்சியாக மட்டுமே இருக்கணும்மா என்ன, வலுவான எதிர்க்கட்சியாக இருந்து எதிர்க்கட்சி அரசியலிலும் வெற்றிப் பெறுவோம் என்று மகிழ்ச்சியுடனே கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி.
அவரின் இந்த முடிவுதான் அவருடன் விசுவாசமாக இருக்கும் எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அதிமுக.வுக்கும் நல்ல காலமாக அமையப் போகிறது என்று துள்ளலோடு பேசினார் இ.பி.எஸ். ஆதரவு முன்னணி அதிமுக தலைவர் ஒருவர்…
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை…..