Sun. Nov 24th, 2024

ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையான வாதத்தை முன் வைத்தார்கள். நாடே அல்லோகலப்பட்டது. தமிழர்களுக்கு மனிதநேயமே இல்லை என்ற அளவுக்கு வடமாநிலங்களைச் சேர்ந்த ஊடகங்கள், உச்சநீதிமன்றத்தின் விமர்சனத்தை முன்வைத்து கேள்விக்குறியாக்கி இருந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பின் காரணமாகவும், தேச பக்தி குறித்து சந்தேகம் வந்துவிடும் என்று பயந்துபோன தமிழகத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை திருப்தி படுத்தும் விதமாக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் உண்மைத்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஆற்றில் இறங்குவோம் எனக் கூறி, ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான வசதியே இல்லை என்று போட்டு உடைத்திருக்கிறார்.

ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவை தொழில் சார்ந்த ஆக்சிஜன் ஆகும்; இதை மருத்துவத்திற்கு பயன்படுத்த முடியாது என்ற வாதத்தை முன்வைத்த தமிழக அரசு வழக்கறிஞர், வேதாந்தா நிறுவனத்திடம் வாயுவாக உள்ள ஆக்சிஜனை திரவ ஆக்சிஜனாக மாற்றும் உட்கட்டமைப்பு இல்லை; அந்த கட்டமைப்புகளை உருவாக்க 9 மாத காலம் ஆகும் என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார்.

35 டன் அளவுக்கான திரவ ஆக்சிஜன் தயாரிக்கும் உட்கட்டமைப்பு வசதி மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளதாகவும் தமிழக அரசின் வழக்கறிஞர் கூறியுள்ளளார்

மருத்துவப் பயன்பாட்டிற்கு தேவையான ஆக்சிஜனை தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்க முடியுமா, முடியாதா என்ற உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், முதல்வர் இ.பி.எஸ். விரித்த வலையில் தானாக போய் விழுந்திருக்கிறார்கள்.

அதுவும் தூத்துக்குடி திமுக எம்.பி.யான கனிமொழியும், ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு சம்மதம் தெரிவித்திருப்பதுதான் தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.