Sun. May 4th, 2025

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 4 மெட்ரிக் டன் அளவுக்கான ஆக்சிஜனை, தமிழக அரசின் ஒப்புதல் இன்றி ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கூறியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர், மத்திய அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பாக, ஆக்சிஜன் விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று நண்பகல் 2.15 மணியளவில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ஆக்சிஜன் விவகாரத்தில் பிற மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை, தமிழகத்திற்கும் வந்து விடக் கூடாது என்றும் தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் விவரம், இருப்பு உள்ளிட்டவை பற்றியும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.