முன்களப் பணியாளர்களுக்கான காப்பீடு நடப்பாண்டிற்கு புதுப்பிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. குற்றம்சாட்டினார். தொடர்ந்து, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வரிசையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு மத்திய அமைசசர் பதில் கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள சு.வெங்கடேசன் எம்.பி., முன்களப் பணியாளர்களில் ஒருவரைக் கூட தவற விடாமல் அனைவருக்கும் காப்பீடு திட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ…
நேற்று கோவிட் முன் களப் பணியாளர்களுக்கான ரூ 50 லட்சம் காப்பீடு புதுப்பிக்கப்படாமல் இருப்பதை வேதனையோடு பகிர்ந்து உடனடியாக அத் திட்டம் நீட்டிக்கப்பட ஆவன செய்யுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ வர்த்தனுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இன்று நல்ல செய்தி கிடைத்துள்ளது. கோவிட் கள முன்வரிசைப் பணியாளர்க்கான காப்பீடு திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிற வகையில் புதுப்பிக்கப்படுவதாக செய்தி வந்துள்ளது. அமைச்சருக்கு நன்றி.
ஆனால் இரண்டு கேள்விகள் எஞ்சி நிற்கின்றன.
ஒன்று, இதற்கான பாலிசி 24.03.2021 அன்று முடிவடைந்து விட்டது. அன்றைய தினம் நள்ளிரவு வரை உயிரிழந்தவர்களுக்கான காப்பீட்டிற்கான விண்ணப்பம், ஆவணங்கள் 24.04.2021 க்குள்ளாக வரப் பெற்று உரிமப் பட்டுவாடா செய்யப்படும். இதுவே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் இராஜேஷ் பூசனின் (24.03.2021 )கடிதம் தெரிவிப்பது.
ஆனால் அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தி 24.04.2021 வரையில் இத் திட்டத்தின் கீழ் நீட்டிக்கப்பட்டிருப்பது போன்ற பொருள் தருகிறது. ஆனால் அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதா? இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இசைவு பெறப்பட்டுள்ளதா? என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும்.
24.03.2021 நள்ளிரவுக்குப் பின் துவங்கி இன்று வரை உயிரிழந்துள்ளவர்களுக்கான காப்பீட்டின் கதி என்ன?
ஒரு முன் களப் பணியாளர்க்கு கூட காப்பீடு பயன் கிடைக்காமல் போய் விடக் கூடாது. அரசு அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமெனக் கோரி இன்று மீண்டும் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ஒரு வேளை காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கான உரிமம் கிடைக்காவிடில் பி.எம் கேர் நிதி உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். கோவிட் போராளிகளின் குடும்பம் பரிதவிக்கிற நிலைமை வரக் கூடாது.
சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி கோவிட் எதிர்ப்பு களத்தில் அரும் பணி ஆற்றுபவர்கள் எல்லோரும் காப்பீட்டுப் பயன் பெறுகிற வகையில் புதுப்பிக்கப்படுகிற திட்டம் இருக்க வேண்டும்.
அமைச்சரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.