Sun. Nov 24th, 2024

சென்னை புரசைவாக்கம் கடை வீதியில் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் இயங்கி வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் 39 பேர் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டது, மருத்துவப் பரிசோதனையில் செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரையின் பேரில், கடை மூடப்பட்டு, அந்த சாலை முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதே கட்டடத்தின் ஒருபகுதியில் ஊழியர்களுக்கான தங்குமிடம் உள்ளது. அங்கு தங்கியிருந்த ஊழியர்களுக்குதான் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை சென்னை மாநகராட்சி ஊழியர்களின் ஆய்வில் தெரியவந்தது. விற்பனை கடையின் ஒருபகுதியில் தங்குமிடம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விற்பனை கடையும் மூடப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் தேதி சரவண ஸ்டோரில் பணியாற்றும் 166 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 13 ஊழியர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து 19 ஆம் தேதியும் 159 ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 26 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சரவண ஸ்டோரில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இளம் வயதினர்தான் என்றாலும் கூட நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் சிலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய சிலர், அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பிற்குள்ளானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் கண்டறியப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து புரசைவாக்கம் கடை வீதிப் பகுதியில் கொரோனோ தொற்று பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.