Sun. Nov 24th, 2024

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம் இதோ…….

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த கொடும் நோய்த் தொற்றின் இரண்டாவது அலை இளம் தலைமுறையினரையும் மோசமாக பாதித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்று (15.4.2021) ஒரு நாள் மட்டும் 7,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 2,558 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு 10 சதவிகிதம் கொரோனா பரவல் அதிகரிக்கிறது. இது மேலும் உயரக் கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்

  1. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுற்று வாக்கு எண்ணிக்கை மே 2ந் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை பணிகளை மேற்கொள்வதில் நிர்வாக ரீதியாக சிரமங்கள் தொடர்கின்றன. போர்க்கால அடிப்படையில் மாநில அரசு, அரசியல் கட்சிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் அனைத்தையும் களமிறக்கி கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மாபெரும் கடமையாற்ற வேண்டியுள்ளது. எனவே, கொரோனா தொற்று பணிகளை மேற்கொள்வதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளிலிருந்து விதிவிலக்கு பெற்று பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு, தேர்தல் ஆணையத்தினை அணுகி இதற்கான உரிய உத்தரவுகளை பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மாவட்ட, மாநில அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்

  1. கொரோனா தடுப்பு பணிகளில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும். மாநில, மாவட்ட அளவில் அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தி அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பையும் பெற வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் அனைத்தையும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும்

  1. தற்போது கைவசமுள்ள தடுப்பூசிகள் சில நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழகத்தினுடைய தேவைக்கான தடுப்பூசியினை மத்திய அரசிடம் வற்புறுத்தி பெற்றிட வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து வயதினருக்கும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து தடுப்பூசி போடுவதை உறுதி செய்திட வேண்டும்.
  2. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படுவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

ரெம்டிசிவர் மருந்து மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை உறுதி செய்திட வேண்டும்

  1. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இது களையப்பட வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கான ரெம்டிசிவர் மருந்து உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்லூரிகள், திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றிட வேண்டும். அமைக்கப்படும் அனைத்து மருத்துவ முகாம்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் தேவையான அளவிற்கு பணியமர்த்தப்பட வேண்டும். இம்முகாம்களில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயித்திட வேண்டும்

  1. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக தினந்தோறும் காலியாக உள்ள படுக்கைகளின் விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அதனை விளம்பரப்படுத்திட வேண்டும். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேநேரத்தில் கொரோனா அல்லாத நோய்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனகைளில் சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அபராதம் விதிப்பதை கைவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்

  1. முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தினந்தோறும் கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்திட வேண்டும். கபசுர குடிநீரும் வழங்கிட வேண்டும். அனைவருக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கிட வேண்டும்.
  2. ஆர்.டி., பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகளின் அடக்கவிலை ரூ.200/- அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் பரிசோதனைக் கட்டணம் ரூ. 1500/- வரை வசூலிக்கப்படுகிறது. இது குறைக்கப்பட வேண்டும்.

முன்களப்பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும்

  1. மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் ரூ. 2 லட்சம், மரணமடைந்தால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் கூறியது. ஆனால் இந்த நிவாரணத்தொகைகள் எவருக்கும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த அணுகுமுறை கொரோனா தடுப்பு பணியை பாதிக்கும். எனவே, அரசு அறிவித்தபடி நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 7,000/- வழங்கிட வேண்டும்

  1. பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. இதனால் நோய் பரவலுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 7,000/- நிவாரணம் வழங்கிட வேண்டும். தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுவோர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.