Sun. Apr 20th, 2025

சிறப்புச் செய்தியாளர் …

வீடியோ – பாலாஜி, கோயம்புத்தூர்

காதலும் இல்லாமல், காமமும் இல்லாமல் படுக்கையில் மல்லாக்க படுத்திருக்கும் பருவப் பெண்ணை, உச்சி முதல், உள்ளங்கால் வரை முகர்ந்து பார்க்கும் அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு..? நித்திரையில் முழு பௌர்ணமியாக, மூச்சுக் காற்றின் இயக்கத்தில் வனப்புகள் விம்ம, விம்ம, சுவாசத்தோடு சுவாசம் கலந்தால் கூட கற்பிழந்துவிடும் சிநேகம் என்ற ஆழ்மனதின் பயத்தோடு மூச்சடைத்து வாழ்ந்திருக்கும் தருணத்தை கடந்ததுண்டா?

50 வயதைக் கடந்த பிறகும் முதல் காதலியின் அருகாமையில் அமரும் சூழலில், உடலுக்குள் மின்னலடிக்கும் மின்சாரத்தை கட்டுப்படுத்த முடியாமல், தகதகவென பரவும் உடல் சூட்டை உணர்ந்தும், உணராமலும் தவக் கோலம் பூண்டதைப் போல நடிக்க முயற்சித்தது உண்டா? உடல்களின் கலப்பில் உச்சத்தை தொடும் உணர்ச்சி கொந்தளிப்பின் நீட்சியில் போதையில் தள்ளாடியவர்களா, நீங்கள்..

ஊடலும் கூடலுமே மனிதப் பிறப்பின் இலக்கணம் எனும் எண்ணத்தையெல்லாம் அடியொடு துடைத்தெறித்து, இறை நிலைக்கு கொண்டு செல்லும் சொர்க்கமே இயற்கையின் தாய்மடி…

மனித சமுதாயத்தின் சதிராட்டத்திற்கு ஆட்படாமல் கற்பிழக்காமல் காட்சியளிக்கும் இயற்கையோடு இயந்த வாழ்க்கையை அனுபவிப்பதே தெய்வ நிலையை எட்டுவதற்கு சிறந்த வழி என்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். ஆனந்தமாய் வாழ்க்கை மாற, ஆயுளுக்கும் ஆசை தலைகாட்டாமல் இருக்க, இயற்கையோடு இயற்கையாய் கலப்பதுவே பேரின்பம்..

வாசிப்பதில் ஆனந்தம் கொள்ளாமல், காட்சிகளாய் பார்த்து கரைந்து போகாமல், பனிப் போல உடல் உருகிப் போக வேண்டுமானால், ஆள்ஆரவமற்ற இயற்கையில் இரண்டற கலக்க வேண்டும்.

கடந்து போகும் இடமெல்லாமல் பச்சை பசேலென காட்சியளிக்க, கண்மணிகளை பனித்துளிகள் புதுப்பிக்கும் பரவசமே தனி சுகம்தான்..மனித சுவாசம் மனசை அலைக்கழிக்காமல், பச்சை தேயிலையின் வாசம், உடலையும், உள்ளத்தையும் வெள்ளாவி வைக்க, தலையை கோதி போகும் மேக கூட்டமும், தாகத்தையும், தவிப்பதையும் ஆற்றுப்படுத்தும் இடைவிடாத மழைப் பொழிவும், கண் முன்னே கடவுள் தோன்றினால்கூட, சற்று விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு, இயற்கையில் கரைந்து போகும் உடலும், உள்ளமும்.

மலையும், மடியில் தவழும் ஆறும், பன்னீர் துளிகளாய் தூவும் மழையும் இடையறாது தாலாட்டும் மணித்துளிகளில் மரணித்துப் போகும் வரம் கிடைத்தாலும், மனிதப் பிறப்பின் லட்சியம் நிறைவேறிப் போகும்…

வெறும் அரசியல் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்கிறாயே… மூளை சூடாகி விடவில்லையா.. அரசியலைத் தவிர வேறு சிந்தனையே இல்லையா.. அன்பின் மிகுதியில் கேட்கிற நல்உள்ளங்கள் சுற்றியிருப்பதே, இளைப்பாறும் இடத்தை விட மேலானது..

நல்லரசுக்கு அரசியல் தொடர்பான சிறப்புச் செய்திகளைத் தந்து கொண்டிருந்த வேளையில், அன்பு நண்பரிடம் இருந்து ஒரு நேசமிகு அழைப்பு.. கோடை வெயிலை தணிக்க, மலைப்பிரசேதத்தை நோக்கி ஒரு பயணம். வருகிறாயா என்று.. துள்ளிக்குதித்து மனம்..

நண்பரின் அழைப்பை தட்டி கழிக்க விருப்பமில்லாமல் புகைவண்டி ஏறியாயிற்று. இரவு நேர பயணம். அதிகாலையில், கோவையில் கால் பதித்து, பயண களைப்புக்கு சிறிது ஓய்வு கொடுத்து காரில் ஏறி அமர்ந்தோம். இன்னோவா காரில் ஓட்டுனரோடு சேர்த்து மூன்றே பேர். பொள்ளாச்சி நோக்கி பறந்தது கார். எப்போதுமே பசுமையாக காட்சியளிக்கும் வழியெங்கும் வாழ்ந்திருக்கும் ஊர்கள், வறட்சியின் சுவடுகளை போர்த்தியிருக்க, அரைமணிநேரத்தில் பொள்ளாச்சி கடந்து போக, மலைப்பாதை வரவேற்க தொடங்கியது.

ஆனைமலை புலி காப்பகத்தின் நுழைவுப்பகுதியில் உள்ள காடம் பாறையில் வனத்துறையின் விசாரிப்புகளுக்கு பதில் சொல்லி மலைப்பாதையில் ஊர்ந்தது கார். உதகை, கொடைக்கானல், ஏற்காடு மலைப் பிரசேதங்களைப் போல, வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை..கடந்து போன 30 நிமிட பயணத்தில், மலைப்பிரதேசத்தின் ஈர்ப்பு இல்லையென்றாலும்கூட, ஏற்றத்தை நோக்கிய பயணம், மனதை துள்ளாட்டம் போட தூண்டியது.

20 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டியவுடன் இருகரம் கூப்பி மேகங்கள் வரவேற்க, உறவுகளே சுற்றி நிற்பதுபோல பசுமையின் சுவாசம், உடல் முழுவதையும் கவசமாக்கியது. பார்வை படும் தூரமெல்லாமல் பச்சை பசேல் என்று தேயிலைச் செடிகள் குளுமையாக காட்சியளிக்க, வால்பாறை எனும் மலைப் பிரசேதத்தின் உச்சியில் பாதம் பதித்தோம். காலணிகளை கடந்து உடலுக்குள் பரவிய குளிரின் இனிமையை இதயத்தால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை..

சிறுதூறலாகவும், அடர்த்தியாகவும் மழைத்துளிகள் இடைவெளி விட்டுவிட்டு பெய்து கொண்டிருக்க, இதயத்தின் படப்படப்பு, இயந்திரத்தை விட அதிகமாக துடிதுடிக்க ஆரம்பித்தது. வால்பாறையின் சுகத்தை அனுபவித்த அதே மனநிலையோடு, சோலையாறு அணையை நோக்கிப் பயணம். உதகையை விட, கொடைக்கானலை விட, ஏற்காட்டை விட, ஆள் அரவமற்று காட்சியளிக்கும் தேயிலை தோட்டத்தின் பசுமை, தாய்ப் பாலை விட புனிதமானது.. ஆயுளைக் கூட்டக் கூடிய சக்தி நிறைந்தது…

சிறு குன்றாய், பெருங் குன்றாய் தேயிலை தோட்டங்கள் வரவேற்க, இயற்கையின் சத்தத்தைவிட வேறு எந்த சத்தமும் இல்லாமல் அமைதிப் பிரசேதத்திற்கு அரணாக மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் நீள, நீள, 20 கிலோ மீட்டர் பயணம் கரைந்த போது, சோலையாறு அணை வரவேற்கிறது.

அணையின் அமைதியும், அழகும், அதன் பிரம்மாண்டமும், பெருந்தலைவர் காமராஜரை மானசீகமாக வணங்கி, மண்ணோடு உடல் கலக்க, அணையின் ஆயுளை பெறும் ஆசையோடு ஆசிர்வாதம் பெறுவதற்காக, இரண்டொரு நாள் தவமிருக்க தொடங்கியிருக்கிறோம்..

முதல் பயணம் இது.. நெஞ்சுக்குள் புதைந்து கிடக்கும் பரவசத்தை பகிர்ந்து கொள்ள வார்த்தைகளை தேடிக் கொண்டே இருக்கிறேன்.. ஊடகத்துறையை வாழ்க்கையாக கொண்டவர்கள் ஒருநாளாவது வால்பாறையில் வாழ வேண்டும்.. புதிதாய் பிறந்தோம் என்ற நினைப்போடு இல்லாமல் உணர்வோடு மீண்டும் வேகமாக ஓடுவதற்கான உயிர்க்காற்றை வால்பாறை மலைத்தாய் வாரி வாரி வழங்குகிறாள்….