சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, திமுக.வைப் பொறுத்தவரை தாய் வீடு மாதிரி. சென்னை மாவட்டத்தை திமுக.வின் கோட்டை என்று சொல்லி வந்த காலங்களில், ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் என்றாலே, அவர் நட்சத்திர அந்தஸ்து பெற்றவராகதான் இருப்பார். திமுக தலைவர்களோடு நெருக்கமான அந்த தொகுதி, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், அதிமுக.வை தொடங்கிய பிறகு, அதிமுக.வின் முன்னணி தலைவர்களை அரவணைத்து ஆசிர்வசித்தது. அந்த வகையில், திமுக, அதிமுக என இரண்டு பிரதான கழகங்களுக்கும் தாய் மடியாக இருந்து வரும் அந்த தொகுதியின் தற்போதைய அதிமுக கூட்டணி வேட்பாளர் நடிகை குஷ்பு. பாஜக வேட்பாளராக களம் கண்டிருக்கிறார்.
அவரின் அரசியல் ஜாதத்தைப் புரட்டிப் பார்த்தால், பரிதாபமும், பச்சாதாபமுமே மிஞ்சி நிற்கும். அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டாடியதற்கு இணையான அவரை வசைப்பாடவும் செய்திருக்கின்றன. அரசியல் வாழ்க்கையையும் தனிமனித வாழ்க்கையும் சம்பந்தப்படி பார்க்கிற குணம், ஆழமான மனநோயாக குறிப்பிட்ட ஒரு பிரிவினரிடம் இன்றைக்கும் காணப்படுவதால், நடிகை குஷ்பு எதிர்கொண்டு வரும் எதிர்மறை விமர்சனங்களை போல, வேறு எந்தவொரு பெண்மணியும் அரசியலில் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
அவரின் பல செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்குரியவைதான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அதேபோன்ற கருத்துகளை, விமர்சனங்களை ஆண் தலைவர்கள் முன்வைத்தபோது எழாத வசவுகள், பெண்ணாகவும், நடிகையாகவும் இருக்கிறார் என்பதற்காகவே, குஷ்பு, மனதளவில் அடைந்த காயங்கள் ஏராளம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்க வேண்டியவர் நடிகை குஷ்பு. மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு கருணாநிதியை பற்றி உண்மையைச் சொன்னதால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. அதிகாரத்தை கைப்பற்றாத அரசியல் வாழ்க்கை என்பது நடமாடும் சடலத்திற்கு சமமானது என்பது அண்மைக்கால சிந்தனையாக மாறிப் போனதையடுத்து, சமரசத்தை நோக்கி பெரும்பான்மையானோர் நகர்கின்றனர்.
அந்த வகையில், நடிகை குஷ்பும், தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் முழங்கிக் கொண்டிருந்தார். தேர்தல் நெருக்கத்தில் பாஜக.வுக்கு தாவினார். சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு நிச்சயம் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த நடிகை குஷ்பு, அங்கு வீதி வீதியாகச் சுற்றி வந்து வாக்குசேகரித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, அந்த தொகுதி முழுவதையும் ஒரு சுற்று சுற்றிவந்து நிறைவு செய்திருந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி பாஜக.வுக்கு ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக.வுக்கு ஒதுக்கப்பட்டது.
அந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ., கு.க.செல்வம், திமுக குடும்பத்தோடு ஒட்டி உறவாடியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோடு என்ன முரண்பாடு என்று இதுவரை முழுவதமாக வெளியே வராத சூழலில், சில மாதங்களுக்கு முன்பு கு.க.செல்வம், பாஜக.வுக்கு திடீரென தாவி திமுக தலைவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். அப்படிபட்டவர், அதே தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளக்ள் கூறி வந்த நிலையில், ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு பாஜக.வில் இணைந்த நடிகை குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளரானார்.
தனக்கு முன்னால் யார், தனக்கு பின்னால் யார் என்பதை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், ஆயிரம் விளக்கு தொகுதியில் வீதி வீதியாக சுற்றி வந்தார். குடிசை வீடுகள் நிறைந்த பகுதிகளுக்கு எல்லாம் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் நடந்தே சென்றார். வயதான பாட்டி, தாத்தாவை எல்லாம் கை பிடித்து, கன்னத்தை தடவி நலம் விசாரித்துவிட்டு, தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டார். அந்த பகுதி மக்களுக்கு எல்லாம், நடிகை என்ற ஒரு நட்சத்திரத்தை நேரில் பார்ப்பதே வரம் போன்றதுதான். அப்படிபட்ட சூழ்நிலையில், குடிசை வீட்டுக்குள் வந்து நலம் விசாரித்த, வாக்கு சேகரித்த செல்வச் செழிப்பான நடிகை குஷ்புவை மிரட்சியோடும், நெகிழ்ச்சியோடும் பார்த்தவர்களே ஏராளம்.
இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள், பச்சிளங் குழந்தைகள் என அனைத்து தரப்பு விளிம்புநிலை மக்களையும் தொட்டு, கட்டியணைத்து, ஆரத்தழுவி விசாரித்தவர் என்ற வகையில், நடிகை குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதியில் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். ஏராளம். இதுவரை வாசித்தது எல்லாம் குஷ்புவின் மாறுபட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தவே தவிர, நேர்மை எனும் தராசில் வைத்து எடை போடுவதற்காக அல்ல.
இதற்கு மேல் வருகிற வரிகள்தான், கோடிக்கணக்கான ரூபாயைக் கூட துச்சமாக நினைக்கிறவர் குஷ்பு என்பதை வெளிப்படுத்த போகிறது. ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் அரசியல் ரீதியாக 7 பகுதிகளாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றிருக்கும் கட்சி ரீதியாக பகுதி செயலாளர்களோ, பகுதி தலைவர்களோ இருக்கிறார்கள். அவர்களை உடன் பிறந்த சகோதரர்களாக பாவித்தவர், அவர்களின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து லட்சக்கணக்கில் பணத்தை வாரி வழங்கியிருக்கிறார்.
பிரசாரத்திற்கு புறப்பட்ட முதல்நாளில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை, செலவுக்கு பணம் கூட தர மாட்டேன் என்கிறாரே வேட்பாளர் என்ற குற்றச்சாட்டு, ஆயிரம் விளக்கு தொகுதியில் சன்னமான குரலில் கூட எழவில்லையாம். எதிர்க்கட்சியான திமுக வேட்பாளர் கொடுத்ததை விட, தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதற்காக, பாஜக மேலிடம் கொடுத்ததோ, அதிமுக தலைமை கொடுத்ததோ, தனது தேர்தல் செலவுக்காக வந்த கோடிக்கணக்கான ரூபாயை அப்படியே கட்சி நிர்வாகிகளிடம் மடை மாற்றியுள்ளார் நடிகை குஷ்பு.
நடிகை என்ற அந்தஸ்ததை தூக்கியெறிந்துவிட்டு, வெற்றிக்கனியை பறிப்பது ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில், நடிகை குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு தொகுதியையும் சுற்றி சுற்நி வந்ததைப் பார்த்து, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உற்சாகமானதுடன், மனசாட்சிக்கு கொஞ்சம் பயந்து உண்மையாக உழைத்தாகவும், வாக்காளர்களுக்கு கொடுத்த பணம், அவர்களுக்கே போய் சேரும் வகையில் தேர்தல் பணியாற்றியதாக கூறுகிறார்கள்.
ஆயிரம் விளக்கில் முதல் நாள் பிரசாரத்தை துவங்கும் போது எந்த உற்சாகத்தில் இருந்தாரோ, அதே எனர்ஜி, வாக்குப்பதிவு நாள் அன்றும் குஷ்புவிடம் காணப்பட்டதை கண்டு வியந்து போனோம் என்கிறார்கள் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள். அவர்களுக்கு மட்டுமா அந்த உணர்வு ஏற்பட்டது. சென்னையில் பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு சோர்ந்து போய் வந்த முதல்வர் பழனிசாமி, ஆயிரம் விளக்கில் பிரசாரம் செய்தபோது நடிகை குஷ்புவை எட்டிவிடும் தூரத்தில் சந்தித்த போது, அவரது முகம் அடைந்த மலர்ச்சியைப் பார்த்து, உடனிருந்த நிர்வாகிகளும் சந்தோஷமானார்களாம்.
தொண்டர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை உற்சாகப்படுத்திய நடிகை குஷ்பு, ஆயிரம் விளக்கில் தாமரைப் போல மலர்ந்தால், அதை விட மகிழ்ச்சி எங்களுக்கு வேறொன்றும் இல்லை என்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள். என்ன ஆச்சரியம் இது.. காரணம் கேட்டால், சிரித்த முகத்தை, அதுவும் பிரபலமான நடிகையின் புன்சிரிப்பு, நமது கண் முன்னே தெரியும் போது உள்ளத்தில் ஏதோ ஒரு மாயத்தை, மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த சந்தோஷம், வரும் 5 ஆண்டுகளும் கிடைக்குமே என்ற அல்ப ஆசைதான். தயவு செய்து எங்கள் எண்ணத்தை கொச்சைப்படுத்தி விடாதீர்கள். தப்பான எண்ணமே இல்லை. 60 வயதை தொட்டுவிட்டேன். பல எம்.எல்.ஏ.க்களை பார்த்திருக்கிறேன். யாரிடமும் எந்த உதவியும் கேட்டு நேரில் சென்று எம்.எல்.ஏ.க்களை சந்தித்தது இல்லை. குஷ்பு எம்.எல்.ஏ.வானால், நேரில் சந்திக்கும் வாய்ப்பும், அதனால் கிடைக்கும் சந்தோஷமும், வாக்களித்ததற்கு கிடைத்த நன்மையாக எடுத்துக் கொள்வேன். அதுதான் காரணம். என்னைப் போலவே நிறைய நிர்வாகிகள் அதே சிந்தனையோடுதான் இருக்கிறார்கள் என்று கூறியவாறே கருப்பு, சிகப்பு துண்டை வீசியபடி நடந்து சென்றார், அந்த மூத்த திமுக நிர்வாகி……
ஊடகவியலாளருக்கென்று ஒரு பஞ்ச்..வைக்கவேண்டாமா… ஆயிரம் விளக்கு தொகுதியை சுற்றி சுற்றி வந்த குஷ்பு. கொரோனோ தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஆனால், சுந்தர் சி. வுக்கு கொரோனோ தொற்று என்றால் எப்படி எடுத்துக் கொள்வது?