மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 5 ஆம் கட்டத் தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நான்கு கட்டத் தேர்தலின்போதும், பாஜக தலைவர்களும் அம்மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் கடுமையாக மோதிக் கொண்டு இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மேற்கு வங்கத்தில் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், இதுவரை மேற்கு வங்காளம் பக்கமே தலையை காட்டாத காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி, வரும் 14 ஆம் தேதி முதல் ந்த மாநிலத்தில் பிரசாரத்தை மேற்கொள்கிறார் என டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் அறிவித்துள்ளது.
வரும் 14 ஆம்தேதி மேற்கு வங்காளத்திற்கு செல்லும் அவர், போகர் மற்றும் மாநிலத்தில் மாட்டிகரா-நக்சல்பாரி ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து மொத்தம் 92 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காகவே, ராகுல்காந்தி மேற்கு வங்க பிரசாரத்தில் அதிகளவு ஆர்வம் காட்டவில்லை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 17 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள ஐந்தாவது கட்டத்தில் 45 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து 43 தொகுதிகளுக்கான ஆறாவது சுற்றுத் தேர்தல் ஏப்ரல் 22 ஆம் தேதியும், ஏழாவது கட்டத் தேர்தலில் ஏப்ரல் 26 அன்று 35 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.