சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் செங்கல்கட்டு, காஞ்சிரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு சில தொகுதிகள் என மொத்தம் 16 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு, ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைகழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 24 மணிநேரமும் மூன்று ஷிப்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் விதமாக, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார், லயோலா கல்லூரிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மையங்கள், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாடுகள், வளாகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக உரிய அறிவுரைகளையும் வழங்கினார். இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு கேமிராக்களின் பதிவு மற்றும் இயக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.