Sat. Nov 23rd, 2024

தமிழக சட்டமன்றத்திற்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த தொகுதிக்குப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில், 24 மணிநேரமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் மூன்று ஷிஃப்ட் அடிப்படையில் காவல்துறையினர் கண்காணிப்பும்போடப்பட்டுள்ளது. மேலும், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பகல், இரவு பாராமல், அந்த மையங்களிலேயே கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்து 24 மணிநேரம் கடப்பதற்கு முன்பாக, வாக்குப்பதிவு எந்திரங்களை அதிமுக.வினர் கடத்தி வருவதாக திமுக தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. சென்னையில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹஸ்ஸான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் எம். கே. அசோக் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இருவருக்குமான வெற்றி வாய்ப்பு இழுபறியாக இருப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டன.

அதனால், வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த முறைகேடும் நடந்துவிடக் கூடாது என கண்கொத்தி பாம்பாக திமுக கூட்டணியினர் கவனித்து வருகின்றனர். இந்தநிலையில், இன்று வேளச்சேரி தொகுதிக்குப்பட்ட பகுதியில், இரண்டு பேர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திமுக.வினர், அந்த வாகனங்களை மறித்து, அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

அரசு அதிகாரிகளைப் போல பேட்ஜ் அணிந்திருந்த இருவரும் தங்களை அரசு அதிகாரிகள் போல காட்டிக் கொண்டனர்.அவர்களின் நடவடிக்கைகளின் மேல் சந்தேகம் அடைந்த திமுக நிர்வாகிகள், அவர்களிடம் அடையாள அட்டை கேட்டபோது,இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்து அங்கு விரைந்த வந்த போலீசார், திமுக.வினர் பிடியில் இருந்த இரண்டு பேரை மீட்டு, தங்களின் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். விசாரணையில் இருவரும் அதிமுக.வைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்டமாக தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை போலீசார் பாதுகாப்பு இன்றி இருசக்கர வாகனங்களில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் சென்றது, திமுக நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.