சிறப்புச் செய்தியாளர் …
பணமே பிரதானமாக இருக்கும் இன்றைய தேர்தல், மிகப்பெரிய அதிர்ச்சியை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. கன்று பசு, ஏர் உழவன் சின்னம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இருந்து தேர்தலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை கடந்து போன தேர்தல்களைவிட, இந்த தேர்தல்தான் என்னை எல்லா வகையிலும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டோர் ஒவ்வொருவரும் அவரவருக்கு நேர்மையாளராக தெரியும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குரலாக இல்லாமல், என் வாழ்க்கையில் பார்த்து வியந்துபோன அதிதீவிர தமிழ் உணர்வாளரை பற்றி இங்கு பதிவிடலாம் என்று இருக்கிறேன். ஏனெனில், நான் சார்ந்துள்ள ஊடக குடும்பத்தைச் சார்ந்தவர் அவர் என்பதால்தான்.
2008 ஆம் ஆண்டில் டிசம்பர் மாத நிறைவில், ஊடக நண்பர் ஒருவரின் தூண்டுதலால் அச்சு ஊடகத்தில் இருந்து காட்சி ஊடகத்திற்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவரின் அறிமுகத்தோடு மக்கள் தொலைக்காட்சிக்குச் சென்றேன். அங்கு செய்தி ஆசிரியராக இருந்த கோமல் அன்பரசன் (மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய அமமுக வேட்பாளர்) என்பவரைச் சந்தித்து பேசினேன்.
ஆங்கிலச் செய்தி ஒன்றைக் கொடுத்து மொழிபெயர்த்து எழுதித் தரச் சொன்னதை செய்து முடித்துவிட்டு விடைபெற்றேன். இரண்டொரு நாளில், ஜனவரி முதல் தேதியன்று பணியில் சேருமாறு அழைப்பு வந்தது. அங்கு பணியில் சேர்ந்த சில நாள்களில், அச்சு ஊடகத்தில் செய்தியை எழுதுவதற்கும், காட்சி ஊடகத்திற்கு செய்தியை தருவதற்குமான யுக்தியைக் கற்றுக் கொடுத்தார், கோமல் அன்பரசன்.
மக்கள் தொலைக்காட்சி செய்தியில், தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. ஜனவரி மாதம் இனிமையாக கடந்தது. பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி வரை ஆர்வமாகவே பணியாற்றிக் கொண்டிருந்தேன். 25 ஆம் தேதியன்று ப.சிதம்பரம் பற்றிய ஆங்கிலச் செய்தியை மொழிப் பெயர்த்து வழங்கியபோது சிறிய பிழை ஏற்பட்டுவிட்டது. அதைக் கண்டுபிடித்து அப்போது, அங்கு துணை ஆசிரியராக இருந்த ஒருவர் கூறிய வார்த்தையில் கடுமை இருந்ததால், மறுநாள் அலுவலகத்திற்கு செல்லாமல், பணியில் இருந்து விலகுகிறேன் என்று பொது நண்பர் மூலம் கோமல் அன்பரசனுக்கு தகவல் அனுப்பினேன்.
காரணத்தை அறிந்து இதெல்லாம் காட்சி ஊடகத்தில் சாதாரணம். பணியில் இருந்து நிற்க வேண்டாம் என்று கூறினார். எனது முடிவில் நான் உறுதியாக இருந்தேன். சரி. உங்களை கட்டாயப்படுத்தவில்லை. இரண்டு நாட்கள் பணிக்கு வந்தால், பிப்ரவரி மாதத்திற்குரிய ஊதியத்தை பெற்றுக் கொண்டு விலகிக் கொள்ளுங்கள் என்றார். அதற்கும் நான் உடன்படவில்லை. காட்சி ஊடகம் குறித்த பயிற்சி எனக்கு மக்கள் தொலைக்காட்சிதான் கற்றுத்தந்தது. அதனால், பிப்ரவரி மாத ஊதியத்தை பெறுவதில் எனக்கு உடன்பாடில்லை என்று கூறினேன். வருத்தப்பட்டார் கோமல் அன்பரசன்.
எனக்கும் அவருக்குமான தொடர்பை வெளிப்படுத்துவதற்காக இதை எழுதவில்லை. தமிழ் தேசியத்தின் மீது உயிராய் இருப்பவர்கள் எல்லோருக்கும் 2009 ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி மறக்க முடியாத நாள். அன்றைய தினம் தான் முத்துக்குமார் என்ற இளைஞர், ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக தீக்குளித்து, உலகளாவிய கவனத்தை ஈர்த்தார். அன்று காலையில் மக்கள் தொலைக்காட்சியில் பணி. 24 மணிநேர செய்தி ஒளிப்பரப்பு வசதியில்லாத போதும் ஒருமணிநேர இடைவெளியில் செய்தியை தயாரித்து ஒளி வடிவில் இல்லாமல் ஒலிப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். குறுகிய நேரத்தில் முத்துக்குமாரின் சாசனத்தை உள்வாங்கிக் கொண்டு, அதன் வீரியம் குறையாமல் செய்தியாக்கி ஒளிப்பரப்பியவர் கோமல் அன்பரசன். பணி முடிந்து வீடு திரும்பும் அந்த நேரத்தில்தான், முத்துக்குமாரின் உயிர்த்தியாகம் உரைத்தது.
தீயில் கருகிய அவரது உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது முதல் அங்கிருந்து கொளத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து வரும் வரை, தமிழ் உணர்வாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் பேட்டிகளை வாங்கி, உடனுக்குடன் ஒளிப்பரப்ப துடியாய் துடித்தவர். 24 மணிநேர வசதி கொண்ட சன் தொலைக்காட்சி போன்ற ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் தான் அன்றைக்கு இருந்தன.
ஆனால், அந்த தொலைக்காட்சிகள் எல்லாம் முத்துக்குமாரின் ஊர்வலத்தை நேரலையாக காட்ட முன்வரவில்லை. நேரலை வசதியில்லாத போதும் நேரலைப் போலவே மக்கள் தொலைக்காட்சியில் முத்துக்குமாரின் தியாகத்தால் எழுந்த எழுச்சியையும், அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியையும் ஒரு நிமிடம் கூட தவறாமல் ஒளிப்பரப்பாக வேண்டும் என கோமல் அன்பரசன் எடுத்துக் கொண்ட சிரத்தை என்னை வியக்க வைத்தது.
அப்போது நான் கொளத்தூரில்தான் குடியிருந்தேன். எனது வீட்டிற்கு பக்கத்து தெருவில்தான் முத்துக்குமாரின் உடலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 29 ஆம்தேதி மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் கோமல் அன்பரசன் ஏற்படுத்திய பரபரப்பு கூட, அன்று காலை பணி முடிந்து வீடு திரும்பிய பிறகு முத்துக்குமார் வீட்டிற்கு சென்றபோது, அந்தளவுக்கு காணவில்லை. ஆனால், விடிந்து மறுநாள் 30 ஆம் தேதி காலை பணிக்கு சென்றபோது முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த தெரு முழுவதும் கூட்டம்.
அவரின் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டேன். அன்று என்னுடன் நடந்து வந்த இரண்டு ஊடகவியலாளர்களில் ஒருவர், இன்று புகழ்மிக்க தொலைக்காட்சியின் தலைமைப் பீடத்திலும் இன்னொரு தோழி, பிரபல ஆங்கில நாளிதழின் சிறப்புச் செய்தியாளராகவும் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு மட்டும் 24 மணிநேர நேரலை வசதி, மக்கள் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் இருந்திருந்தால் முத்துக்குமாரின் கனவான, எனது உடலை ஆயுதமாக ஏந்துங்கள் என்பதை தமிழக இளைஞர்களின் குரலாக மாற்றிக் காட்டியிருப்பார் கோமல் அன்பரசன் என்பது எனது உறுதியான நம்பிக்கை. அவரின் தியாகத்திற்கு முன்பாகவே, ஈழப் போரை, ஒவ்வொரு செய்தியிலும் இடம் பெற மெனக்கெட்டவர் அவர். அப்போது ஈழத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஈழப் போரின் பின்னணியை விவரிக்கும் காட்சித் தொகுப்பும் அவரது முயற்சியினாலேயே ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.
மயிலாடுதுறை மண்ணின் மைந்தர். ஊடகவியலாளர், எழுத்தாளர், கள செயற்பாட்டாளர். நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பவர். சட்டப்பேரவைக்கு செல்வதற்கான தகுதி, 100 சதவிகிதத்தை விட ஆயிரம் மடங்கு அதிமாக அவருக்கு இருக்கிறது. காவிரி கண்ணீர் என்ற தலைப்பில் காவிரியின் வரலாற்றை குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வந்த போது படித்திருக்கிறேன். தமிழர்கள் எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணம் அது.
அமமுக வேட்பாளராக அவர் களத்தில் நின்றாலும் கூட, அரசியல் பார்வையோடு பார்க்காமல், அவரின் கடந்த கால, நிகழ்கால சேவையை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். அதன் மூலம் மயிலாடுதுறைக்கு பெருமை வந்து சேரும்…
தமிழ் உணர்வாளரின் குரல் சட்டப்பேரவையில் ஒலித்தால் ஊடகவியலாளர்களுக்கு பெருமிதம்.