நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பணம் இருந்தா எஸ்.மணியன், இல்லைன்னா நோ மணியன். இதுக்கு மேல அமைச்சர் ஓ.எஸ்.மணியனைப் பற்ற ஒன்றும் சொல்வதற்கு இல்லை. கஜா புயலின் போது நிவாரணத் தொகையை கேட்டு போராடிய விவசாயிகளுக்கு உரிய பதிலளிக்காமல் சுவர் ஏறி குதித்து ஓடியவர்தான், நாகை மாவட்டத்தில் அமைச்சராக உள்ளார். அப்போது, தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை போட வைத்துள்ளார் ஓ.எஸ்.மணியன். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அந்த வழக்குகள் எல்லாம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
மீனவர்களின் நலனைக் காக்க கடந்த 2016ல் அறிவித்த எந்தவொரு திட்டத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் மீனவரின் நலனுக்காக, மேம்பாட்டுக்காக அமைத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம். தேசிய மீனவா நலன் வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மீண்டும் உழவர் சந்தை புதுப்பொலிவுடன் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாயும், ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாயும், மீன்பிடித் தடைக்காலத்தில் உதவித்தொகை 8000 ஆகவும், மழைக்கால நிவாரணம் 6000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.