Sun. May 19th, 2024

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜமுத்துவை ஆதரித்து ஆட்டையாம்பட்டியில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் முதலமைச்சராக இருப்பது நமக்கு எல்லாம் பெருமை. எப்போதுமே நான் முதல் அமைச்சரான நினைத்துக் கொண்டது இல்லை. உங்களில் ஒருவனாக இருப்பதில்தான் எனக்கு பெருமை. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையானோரின் இல்லங்களில் அமர்ந்து நான் உணவு அருந்திருக்கிறேன். உங்களின் பாசம்தான் முக்கியமே தவிர, பதவி எனக்கு பெரிது இல்லை.

சேலம் மாவட்டத்தில் பிரசாரத்திற்காக ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் வருகிறார்கள். 24 மணிநேரமும் முதலமைச்சர் கனவிலேயே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவரின் கனவு ஒருபோதும் பலிக்காது. சேலம் மாவட்டம் எப்போது செல்வி ஜெயலலிதாவின் கோட்டையாகதான் இருந்திருக்கிறது. தற்போதைய தேர்தலிலும் அதை நாம் நிரூபிப்போம்.

என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து சந்தித்து மக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசலாம். ஆனால், மு.க.ஸ்டாலினை சாதாரண மக்கள் சந்திக்கவே முடியாது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடி ஆர்வமாக இருக்கிறார். தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும்.

முந்தைய காங்கிரஸ் அரசில் திமுக செல்வாக்குள்ள மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றிருந்தது. அப்போது அவர்கள் தமிழ்நாட்டிற்காக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? அப்போது செய்த சாதனைகளை திமுக.வால் கூற முடியுமா-

2016 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, அப்போது தேர்தல் அறிக்கையில் சொல்லாதவற்றையெல்லாம் கடந்த நான்காண்டு கால ஆட்சியில் நிறைவேற்றியிருக்கிறோம். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய பொதுமக்களின் ஆதரவ வேண்டும். இங்கு பெருந்திரளாக வருகை தந்த வீரபாண்டி தொகுதி மக்களை பார்க்கும் போது இந்த கூட்டம் பிரச்சாரக் கூட்டம் போல் காட்சி அளிக்கவில்லை, வெற்றி விழா கூட்டம் போல்தான் காட்சியளிக்கின்றது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.