Fri. Nov 22nd, 2024

பிரதமர் மோடி தமிழக மண்ணில் கால் வைத்த அந்த நிமிடத்தில் இருந்து அதிமுக அமைச்சர்கள் தொகுதிகளில் முதல் ரவுண்ட் பணப்பட்டுவாடா விநியோகம் மின்னல் வேகத்தில் தொடங்கி நடைபெற்று முடிந்துள்ளது. விடிய விடிய பணம் விநியோகம் எந்த சச்சரவு இன்றியும் அமைதியாகவும் முடிந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் செம ஹேப்பியாம்.

அதிமுக தலைமையில் இருந்து அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கு தலா 5 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை சிந்தாமல், சிதறாமல் வாக்காளர்களுக்கு கொண்டு செல்லும் வகையில், அதிமுக மேலிடம் போட்டுக் கொடுத்த திட்டம் 100 சதவிகிதம் சக்ஸஸ் ஆகியுள்ளதாம். முதல் தவணையாக வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு 30 பேருக்கு ஒருவர் என்ற விதத்தில் அமைச்சர்களுக்கு நம்பிக்கைக்குரியவர் தலைமையில், நேற்றிரவு 30 பேருக்கும் நேரடியாக பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த 30 பேர் பட்டியலில் திமுக நிர்வாகிகள் இருந்தாலும், அவர்கள் வீட்டுக் கதவை தட்டி, நிர்வாகிகளின் வீடுகளில் உள்ள பெண்களிடம் பணம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, அனைத்து அமைச்சர்கள் தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் இருந்து கொடுக்கப்பட்ட பணம், நேற்றிரவு முதல் இன்று காலை வரை விநியோகிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டை பார்த்து ஏமாற்றம் அடைந்த வாக்காளர்களிடம் அதிமுக நிர்வாகிகள், இது முதல் தவணைதான் இன்னும் இரண்டு தவணைகளாக பணம் வந்து சேரும் என்று நம்பிக்கை வேறு கொடுத்திருக்கிறார்கள். அதை கேட்டும் திருப்தியடையாத வாக்காளர்கள், 2000 ம் கொடுப்பாங்க. 5000 ரூபாய் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க.. மூனு தவணையாக கொடுத்தாலும் ஆயிரத்து 500 ரூபாய்தானே வருது என்று அங்கலாயத்துக் கொண்டவர்கள்தான் அதிகம் என்கிறார் அமைச்சர் உதயக்குமார் தொகுதியான திருமங்கலத்தில் பண விநியோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதிமுக நிர்வாகி ஒருவர்.

திருமங்கலம் அதிமுக நிர்வாகி கூறியது உண்மையான தகவல்தானா என்பதை உறுதிசெய்து கொள்ள தொண்டாமுத்தூர் தொகுதியைச் சேர்ந்த நமக்கு அறிமுகமான அதிமுக நிர்வாகியிடம் கேட்டோம்.

அதிமுக தலைமை கொடுத்தது 500 ரூபாய்தான். எங்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது பணத்தில் இருந்து கூடுதலாக 500 ரூபாய் சேர்த்து, வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். இதுவும் முதல் தவணைதான், அடுத்தடுத்த தவணைகளில் வாக்காளர்களே வியந்து போகிற அளவுக்கு ஆயிரங்களில் பணம் கொடுக்க தீர்மானித்திருக்கிறார் அமைச்சர். தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கச்சிதமாக போய் சேர்ந்துவிட்டது என்றார் கோவை அதிமுக நிர்வாகி.

தொடர்ந்து, ஜோலார்பேட்டையில் போட்டியிடும் அமைச்சர் கே.சி.வீரமணி தொகுதியிலும் அதிமுக தலைமை கொடுத்த பணத்தை விட கூடுதலாக இருமடங்கு பணத்தை வாரி இறைத்திருக்கிறாராம் அமைச்சர்.

5, 6 மாவட்டங்களில் உள்ள அதிமுக நண்பர்களிடம் பேசினோம். அமைச்சர்கள் போட்டியிடுகிற தொகுதிகளில் மட்டுமின்றி, முக்கியமான அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிற தொகுதிகளிலும் நள்ளிரவில் எந்த சிக்கலும் இன்றி பணப்பட்டுவாடா திருப்திகரமாக நடத்திருக்கிறது. பணம் பட்டுவாடா தொடங்கிய நிமிடம் வரை நள்ளிரவிலும் இன்று அதிகாலையிலும் அப்டேட் தகவல்களை கேட்டு, முதல்வர் இ.பி.எஸ்.ஸும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும் செம ஹேப்பி அடைந்துவிட்டனர்.

அதிமுக தலைமைக் கொடுக்கிற பணம் வாக்காளர்களுக்கு நேரிடையாக செல்லாமல், இடையிலேயே கட்சி நிர்வாகிகள் சுருட்டிக் கொள்வார்கள் என்று பேச்சு எழுந்திருந்த நிலையில், கட்சி விசுவாசத்தோடு, வாக்காளர்களுக்கு பணத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள், வேட்பாளர்கள் என்ற தகவல்தான், அவர்கள் இருவரின் சந்தோஷத்திற்கு முக்கிய காரணம். பணப்பட்டுவாடா ஒழுங்காக நடந்துள்ளதே முதல் வெற்றி என்கிறார்கள் அதிமுக மேலிட புள்ளிகள்..

காசேதான் கடவுளடா….