Sat. May 18th, 2024

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்ட சேலம் உள்பட நீலகிரி வரை 51 தொகுதிகளில் திமுக படு வீக்காக இருக்கிறது என்பதை நல்லரசு தமிழ் செய்திகள் தொடர்ந்து சொல்லி வருவதைப் போல மற்ற ஊடகங்களும் போட்டு உடைத்து வருகின்றன. சேலம் உள்பட 6 மாவட்டங்களிலும் செல்வாக்கு படைத்த திமுக நிர்வாகிகள், தங்களின் எதிர்கால அரசியல் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக களத்தில் உள்ள திமுக வேட்பாளர்களை உள்ளடி வேலை பார்த்து கவிழ்ப்பற்கு மறைமுகமாக செயல்படுத்தி வரும் சதித்திட்டங்களை, கலைஞர் மு கருணாநிதி காலத்து விசுவாசிகள், அண்ணா அறிவாலயத்திற்கு புகாராக அனுப்பி வைத்து வருகின்றனர்.

அதனைப்பார்த்து அதிர்ச்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது இலக்கான 234க்கு 234 என்பதை எட்டுவதற்கு கொங்கு மண்டலமே முட்டுக்கட்டையாக இருக்கிறதே என்று கண்கள் சிவந்திருக்கிறாராம். கொங்கு மண்டலத்தில் திமுக முன்னணி நிர்வாகிகளுக்குள் நிலவும்கோஷ்டிப் பூசலை ஒழித்து, திமுக கூட்டணி அமோகமாக வெற்றிப் பெற வேண்டும் என வியூகம் வகுத்தாராம்.

எடப்பாடி திமுக வேட்பாளர் சம்பத்குமார்…..
சங்ககிரி திமுக வேட்பாளர் ராஜேஷ்

தலைவரின் ஸ்கெட்ஜை முழுமையாக நிறைவேற்ற, தனயனான உதயநிதி ஸ்டாலினும், அவரது மருமகனான சபரீசனும் களத்தில் குதித்துள்ளார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு சேலம் சென்ற சபரீசன், சேலத்தில் உள்ள மூன்று மாவட்டச் செயலாளர்கள், திமுக சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள், சேலம் எம்.பி., தேர்தல் பொறுப்பாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என ஒட்டுமொத்த சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகளையும் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரவழைத்து, வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் புதல்வி செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் மற்றும் குழந்தைகள்…

தலைவர் சொல்லிதான் தான் வந்திருப்பதாகவும், சேலத்தில் ஒன்றிரண்டு தொகுதிகளில்தான் திமுக வெற்றிப் பெறும் என்ற தகவலை கேட்டு தலைவர் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாகவும், கூறிய சபரீசன், இந்த தேர்தலில் வெற்றி ஒன்றேதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். கோஷ்டிப் பூசலை தேர்தல் வரை மறந்துவிட்டு, ஒற்றுமையாக உழையுங்கள். இ.பி.எஸ்.ஸுககு எதிராக அதிருப்தி அலை இருக்கும் இந்த நேரத்தில் கூட சேலம் மாவட்டத்தை திமுக. கைப்பற்றிவில்லையென்றால், திமுக ஆட்சியைப் பிடித்தாலும் கூட உங்களுக்கு எதிர்காலமே இருக்காது.

மு.க.ஸ்டாலினிடம் ஆசி வாங்கும் மருமகன் சபரீசன்…

எந்த முகத்தை வைத்துக் கொண்டு தலைவரை வந்து பார்ப்பீர்கள். அதனால், எஞ்சியுள்ள 5,6 நாட்களிலாவது உயிரைக் கொடுத்து வேலை பார்த்து, திமுக போட்டியிட்ட10 தொகுதிகளிலும் வாகை சூடிய மகிழ்ச்சியோடு சென்னை வாருங்கள். உங்களின் உண்மையான உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தை தலைவர் நிச்சயம் தருவார் என பொரிந்து தள்ளியிருக்கிறார்.

ஈரோடு மேற்கு திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி…
கோபி திமுக வேட்பாளர் மணிமாறன்

கடுமை காட்ட வேண்டியவர்களிடம் சாட்டையை சுழற்றியும் தட்டிக் கொடுக்க வேண்டிய நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியும் சபரீசன் மேற்கொண்ட சாதுரியத்தைக் கண்டு, திமுக. நிர்வாகிகள் அசந்து போயிருக்கிறார்கள். சேலத்தில் இருந்து நாமக்கல், ஈரோடு என முகாமிட்டு, திமுக நிர்வாகிகளுக்கு இடையே உள்ள கோஷ்டிப் பூசலை களைத்து, தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டும் வகையில் விரட்டிவிட்டிருக்கிறாராம். இதேபோல, திருப்பூர், கோவை, நீலகிரி என அடுத்தடுத்து மாவட்டங்களிலும் முகாமிடும் சபரீசன், வரும் 4 ஆம் தேதி வரை கொங்கு மாவட்டத்தில் திமுக.வினரை விரட்டி தேர்தல் பணிகளில் சுணக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் முடிவோடு, சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார் என்கிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள்.

சபரீசன் ஒருபக்கம் சாட்டையை சுழற்றி கொண்டிருக்க, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கொங்கு மண்டலத்தை குறி வைத்து பிரசாரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக (29. 30 மார்ச்) சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மின்னல் வேக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பொதுமக்களிடம் கலகல பிரசாரத்தை நடத்திய உதயநிதி ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களிடம் இனிமையாக பேசி, உற்சாகமாக தேர்தல் பணியாற்றுங்கள். தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைவது உறுதி. திமுக ஆட்சி அமைந்தால், தொகுதி கிடைக்கும் நன்மைகளை எடுத்துக் கூறி நேர்மறையான எண்ணங்களை வாக்காளர்கள் மனதில் விதைத்து, வாக்கு அறுவடையை செய்யுங்கள் என உற்சாகப்படுத்தி செல்கிறாராம்.

குமாரபாளையம் திமுக வேட்பாளர் வெங்கடாசலம்
அவிநாசி திமுக கூட்டணி வேட்பாளர் அதியமான்

தேர்தல் பிரசாரம் முடிவதற்கு முன்பாக மீண்டும் கொங்கு மண்டலத்தில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் பெருவாரியான தொகுதிகளில் திமுக வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற தலைவர் மு.க.ஸ்டாலின் அஜென்டாவை முழுமையாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் கொங்கு மண்டல திமுக நிர்வாகிகள்.

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகிய ஒட்டுமொத்த குடும்பமும் கொங்கு மண்டலத்தை குறி வைத்ததற்கு உட்கட்சிப் பூசல் உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொகுதியான தொண்டாமுத்தூரில், அவரின் ஆல் இன் ஆல் ஆக உள்ள சந்திரசேகர் பேசிய பேச்சுதான் முக்கிய காரணம் என்கிறார்கள். கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற மாட்டார்கள். அங்கெல்லாம் அதிமுக வெற்றி விழாவைக் கொண்டாடும் போது, திமுக வேட்பாளர்களை பொலி போட்டு பிரியாணி செய்துவிடுவோம் என பகிரங்கமாக மிரட்டியதுதான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை உசுப்பேற்றி விட்டதாம். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு சந்திரசேகரை ஸ்கெட்ஜ் போட்டு தூக்குவோம். பிரியாணி எப்படி செய்வது என்பதை அவருக்கு நேரிலேயே காட்டுவோம் என்ற ஆக்ரோஷமான குரல்கள், அண்ணா அறிவாலயத்தில் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறதாம்.

யப்பா.,…இப்பவே கண்ணைக் கட்டுதே….