Sun. May 19th, 2024

பத்தாண்டு அதிமுக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலையில்லையே…

மு.க.ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமி நல்ல மனுஷனா இருக்காரய்யா..

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திமுக காரன்ங்க ரவுடியிசத்தை ஆரம்பிச்சிட்டாங்கய்யா…

பண்டிகைக்கு பண்டிகைக்கு பணம் கொடுக்கிறாரே..

கிணத்துல தண்ணீ இருக்கு, ஏரியில தண்ணீ இருக்கு, ஆத்துல தண்ணீ இருக்கு., விவசாயம் நல்ல போய்கிட்டு தானே இருக்கு…

என்னதான் எதிரியாக இருந்தாலும் கூட சி.எம். அம்மா பத்தி ஆ. ராசா அப்படி பேசலாம்மா…

பாவம்மய்யா…பழனிசாமி கண்ணீர் விட்டு அழறாப்பல…

உலகத்துக்கே தன்மானத்தை சொல்லிக் கொடுத்த தமிழனுக்கு மானம் மரியாதை முக்கியமில்லையா…

பிரதமர் மோடியை கண்டு நடுங்கிறாங்களேயப்பா… அம்மா மாதிரி கம்யீரம் இல்லையேப்பா..

நாலு, ஐஞ்சு அமைச்சர்கள் மட்டுமே தானேப்பா பொழைக்கிறாங்க...

பாமக கேட்டதையெல்லாம் செஞ்சவங்க., நல்ல மனுஷன் விஜயகாந்தே கூட்டணியில வச்சிருந்திருக்கலாமே.

ஓ.பி.எஸ். ஒன்று பேசறாரு..இ.பி.எஸ் ஒன்னு பேசறாரு…இவங்களுக்குள்ளேயே ஒத்துமை இல்லையே…

இ.பி.எஸ்.ஸோட, அம்மாவே பேசினதுக்கு பொங்கறாங்களேய்யப்பா…. சின்னம்மாவே சாக்கடைக்கு சொன்னப்ப யாருக்குமே கோவம் வரலேயே… பதவி கொடுத்த அந்தம்மா மனசு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும்… இத்தனைப் பேரு இன்னைக்கு மந்திரியா இருக்கறதுக்கு, எம்.எல்.ஏ.,வாக இருக்கறதுக்கு அந்தம்மா தானே காரணம்… நன்றியே இல்லையேப்பா… பதவி அவ்வளவு பவிசா போச்சா..

கலைஞர் மு.கருணாநிதி மாதிரி ஆளுமையாக இல்லைன்னாலும் கூட, பிரதமர் மோடியை மத்திய பாஜக அரசை பகிரங்கமாக எதிர்க்கிறாரய்யா மு.க.ஸ்டாலின்…. இன்கம் டேக்ஸ் ரெய்டு காட்டி பயமுறுத்தினாக் கூட சீறிக்கிட்டு நிற்கிறாரய்யா அவரு….

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்றிலிருந்து (மார்ச் 31) 7 நாட்கள்தான் இருக்கு.. இந்த நிமிடம் வரை கூட நிச்சயமாக தெரியவில்லை. யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று…அதிமுக.வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேச்சு இருக்கிறது. அதேபோல, திமுக.வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேச்சு இருக்கிறது. இப்படி இரண்டு விதமான பேச்சுகளிடையே மடு அளவுக்கு வித்தியாசம் இருக்கிறதா, மலையளவு வேறுபாடு இருக்கிறதா என்று யூகித்து சொல்கிறவர்களால்தான் தமிழக தேர்தல் களம் தெளிவு இல்லாமல் இருக்கிறது.

திமுக கூட்டணி அதிக இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் என்று கூறி வருபவர்கள் கூட, அதிமுக.மோசமாக தோற்றுப் போகாது என்று கூடவே ஒரு வார்த்தையை சொல்லி முடிக்கிறார்கள்.

இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளில் பெரும்பான்மையானவை திமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று ஆணித்தரமாக கூறி வருகிறார்கள். இருப்பினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சி நல்லாதானே இருக்குது என்று அவர்களின் அடிமனதில் கசடு போல ஒரு எண்ணம் படிந்து கிடக்கிறதை அவர்களாலேயே மறைக்க முடியவில்லை.

கிராமப்புறங்களில் மக்களின் மனநிலை இரண்டு விதமாக இருப்பதாக, களங்களுக்கே நேரில் சென்று கருத்துக் கணிப்புகளை மேற்கொண்ட மூத்த ஊடகவியலாளர்கள் குழு கருத்து தெரிவிக்கிறது. இரட்டை இலை மீதான ஈர்ப்பு இன்னும் குறையவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணையாக என்று சொல்ல முடியாது என்றாலும், தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கூட எடப்பாடியார் என்று சொல்கிற அளவுக்கு, தனது தலைமையிலான நான்கு ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தனிப்பட்ட முறையில் முதல்வர் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

இரட்டை இலைக்கு வாக்களிததவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.அதுபோல உதயசூரியன் சின்னத்திற்கு வாக்காளித்தவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இயல்பாகவே, கிராமப்புறங்களை பொறுத்தவரை அதிமுக.வுக்கு நிரந்தர செல்வாக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பது கடந்த கால தேர்தல் வரலாறுகள் நிரூபிக்கின்றன. அந்த வகையில், கிராமப் புறங்களில் அதிமுகவும், திமுக.வும் சமமாக வாக்குகளைப் பெறவே வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளிகளுக்கு கொரோனோ காலத்தை உள்ளடக்கி எந்த பாதிப்பும் அவர்களுக்கு ஏற்பட்டதாக பெரும்பான்மையானோரிடம் இருந்து கருத்து எதிரொலிக்கவில்லை.

கிராமப்புறங்களில் உள்ள ஆண்களிடம் மனமாற்றம் ஏற்பட்டிருபது வெளிப்படையாக தெரிகிறது. அதிமுக அரசுக்கு எதிரான மனநிலைக்கு அவர்கள் திரும்பியிருக்கிறார்கள். அதற்கு காரணம், பழனிசாமி மீதான ஆட்சியின் மீது வெறுப்பு இல்லை. மத்திய அரசு அடிமையாக இருக்கிறார்களே என்ற கோபம் அவர்களிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கிராமப்புற அளவில் சமமான அல்லது, அதிமுக.வைவிட ஒன்றிரண்டு கூடுதல் சதவிகித வாக்குகளை திமுக பெற வாய்ப்பு இருப்பதாகவே கருத்துக் கணிப்பில் ஈடுபட்டவர்கள் கூறுகிறார்கள்.

நகரப்பகுதி மக்கள்தான், அதிமுக ஆட்சியின் தலையெழுத்தை எழுதுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கருத்துக்கணிப்பு மேற்கொண்டவர்களின் பார்வையாக இருக்கிறது. அதற்கு காரணம், இந்த பகுதி மக்களிடம்தான், அதிமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை வெளிப்படையாக பார்க்க முடியவில்லை என்கிறார்கள் அவர்கள். அதையும் மீறி அதிருப்தி தெரிவிப்பவர்கள் திமுக.வுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களிப்பார்கள் என்பதையும் உறுதியாக கூற முடியவில்லை என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது.

அதிமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு பெரும்பான்மையாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் நகர்ப்புறங்களில் எடுத்த கருத்துக்கணிப்புகள் மறைந்து கிடக்கும் ரகசியம் என்கிறார்கள். அதிமுக ஆட்சி மீது நகர்ப்புற வாக்காளர்களுக்கு கோபம் இருக்கிறது. ஆனால், அவர்கள் திமுக.வுக்கு ஆதரவாக திரும்பவில்லை. அவர்கள் மனதில் மக்கள் நீதி மய்யம்தான் இருக்கிறது. இந்த மாதிரியான மனநிலையில் இருந்தவர்கள் எல்லாம் கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்குதான், சீமானுக்குதான் ஆதரவாக இருந்தவர்கள். சீமான் மீது நம்பிக்கை போய், கமல்ஹாசன் மீது நம்பிக்கை அதிகரித்து இருப்பதுதான் கருத்துக்கணிப்பில் ஈடுபட்ட எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது என்கிறார்கள் மூதத ஊடகவியலாளர்கள்.

திமுக.வுக்கு ஆதரவாக மாறியிருக்க வேண்டிய அதிருப்தி அலையை, 70 சதவிகிதத்திற்கு மேல் நடிகர் கமல்ஹாசன் அறுவடை செய்யப் போகிறார் என்பதுதான் 2021 தேர்தலில் புதுமையாக இருக்கப் போகிறது. அந்த வகையில், திமுக.வுக்கு கமல்ஹாசன்தான் வில்லனாக மாறியிருக்கிறார் என்கிறார்கள் கருத்துக்கணிப்பில் இப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எந்தக் கட்சிக்கும் சார்ப்பற்ற ஊடகவியலாளர்கள்.

கொங்கு மண்டலம், வடக்கு மண்டலம் என இரண்டு மண்டலங்களிலும் அதிமுக செல்வாக்கு கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாத அதேவேளையில், படுபாதாளத்திற்கு சரிந்துவிட்டது என்றும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. விவசாய கடன் தள்ளுபடி, குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் என அதிமுக.வின் ஒன்றிரண்டு தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் ஒருவிதமான ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படிபட்ட மனநிலையில் உள்ள மக்களிடையேதான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிரசாரம், அதிமுக.வின் வாக்கு வங்கிக்கு வேட்டு வைக்கும் விதமாக அமைந்து கொண்டிருக்கிறது. நான்காண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் சம்பாதித்ததை (அவரது வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் கொள்ளையடித்ததை) படிப்பறிவு இல்லாத பாமர மக்களின் மனங்களில் பதிய வைக்கும் அளவிற்கு டிடிவி தினகரனின் பிரசாரம் அமைந்திருக்கிறது.

தென்மாவட்டங்களில் டிடிவி தினகரனின் பிரசாரத்தை காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். அதுதவிர, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித இடஒதுக்கீட்டையும், தனது பிரசாரத்தின் போது பிரதானமாக விமர்ச்சித்து கூறுவது, ஏற்கெனவே எரிந்துக் கொண்டிருக்கிற தீயில், எண்ணெய்யை வார்ப்பது போல இல்லாமல் பாஸ்பரயை வீசுவது போல இருக்கிறது. பட்டென்று இளம்மனசில் பற்றிக் கொள்கிறது.

அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வரும் இன்றைய சூழலில், டிடிவி தினகரனின் பிரசாரம், அதிமுக வாக்கு வங்கியை ஆட்டம் காண செய்து கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் மட்டுமின்றி வடமாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களிலும் கணிசமான பாதிப்பை அமமுக-தேமுதிக கூட்டணி ஏற்படுத்துமாம்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக.வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை, அக்கட்சி தொண்டர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழகம் முழுவதும் பரவலாக தேமுதிக.வுக்கு என 500, ஆயிரம் என குறைந்த பட்ச வாக்குகள் இருக்கின்றன. அந்த வாக்குகள் எல்லாம், திமுக.வுக்கு ஆதரவாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல, பெரும்பான்மையான தொகுதிகளில் குறைந்த பட்சமாக ஆயிரம் முதல் அதிகபட்சமாக 10 ஆயிரம் வரையிலான வாக்குகளை அமமுக வாங்கும் என்பதால், 2006 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக.வால், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டதைப் போல, இன்றைய தேர்தலிலும் அதே மாதிரியான பாதிப்பு ஆளும்கட்சியான அதிமுக.வுக்கு ஏற்படும் என்கிறார்கள் தேர்தல் கள அனுபவமிக்க ஊடகவியலாளர்கள்.

அவர்களின் அனுபவ மொழி உண்மையானால், அதிமுக.வுக்கு வில்லனாகவும், திமுக.வுக்கு கதாநாயகனாகவும் மாறியிருப்பார் டிடிவி தினகரன்.

இருப்பினும் ஊழலுக்கு எதிரான போர் முழக்கத்தில், நடிகர் கமல்ஹாசனின் குரலுக்கும், நாம் தமிழர் சீமானின் சீற்றத்திற்கும்தான் மக்கள் காது கொடுக்கிறார்களே தவிர, ஊழல் பற்றி பேசிக் கொண்டிருக்கும் மற்ற அரசியல் கட்சித்தலைவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிமிடம் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமிருந்து ஒரு தன்னிலை விளக்கத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நேர்மையான ஆட்சியையும், வன்முறையில்லாத ஆட்சியையும் தருவோம் என்பதை தன்னிலை விளக்கம் போல கொடுக்க வேண்டும் என்று. அதற்கு சாத்தியமே இல்லை என்பதை போலதான், திமுக.வினர் தொடர்புடைய சில நிகழ்வுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. அப்படிபட்ட நிகழ்வுகள் திரும்ப, திரும்ப எழுவதை பார்த்து, திமுக.வுக்கு ஆதரவாக நிற்கும் மக்கள் கூட, மெல்ல, மெல்ல விலகத் தொடங்கியிருக்கிறார்கள்.

2021 தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளுக்கு நேரடியாக எந்த நன்மையும், பலனும் கிடைத்திருக்காது. ஆனால், இவ்விருவரின் ஆழ்மனது எண்ணம், விருப்பம் நிறைவேறிவிட்டது என்பதை அவர்கள் இருவரால் மட்டுமே உணர்ந்து கொள்ளும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்தாலும், பொதுவெளியிலும், அரசியல் தளத்திலும் எந்தவிதமான அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும், ஏன் அதிர்வுகளையும் கூட உடனடியாக ஏற்படுத்தாது என்பதுதான், அரசியல் சார்ப்பற்ற மூத்த ஊடகவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது.