தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், உடல்நலம் பலவீனப்பட்டு இருந்தபோதும், சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறாராம். சென்னையில் இரண்டு கட்டமாக பரப்புரை மேற்கொண்ட அவர், இன்று மாலை சாலை வழியாக மதுரை புறப்பட்டுச் செல்கிறார். அங்கு இரண்டு நாள் முகாமிடும் விஜயகாந்த், அமமுக- தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
இரண்டு நாட்கள் மதுரையிலேயே தங்கியிருப்பதால், அங்கிருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ள கோவில்பட்டி தொகுதிக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்ள விரும்புகிறாராம், நடிகர் விஜயகாந்த். தனது ஆர்வத்தை, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடமும் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறாராம். ஆனால், இந்த நிமிடம் வரை டிடிவி.தினகரனிடம் இருந்து அழைப்பு வரவில்லையாம். அதன் மர்மம் புரியாமல் குழப்பத்தில் ஆழ்த்திருக்கிறார்கள் விஜயகாந்த் குடும்பத்தினர்.
5 நாள் சுற்றுப் பயணத்திற்கு தயாராகிவிட்ட விஜயகாந்த், மதுரை பிரசாரத்தை முடித்துக் கொண்டு திருச்சி செல்லும் அவர், கடலூரிலும் அமமுக- தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம்.
விஜயகாந்த் தங்கள் தொகுதிக்கு வருகிறார் என்ற செய்தி அறிந்து மதுரை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அமமுக வேட்பாளர்களும், தேமுதிக வேட்பாளர்களும், எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர்களும் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்களாம்.
அதிமுக மற்றும் திமுக.வுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி பிரசாரம் செய்ய முடியாமல் போனாலும், விஜயகாந்த், தனது முகத்தை மக்களிடம் காட்டினால் கூட, அமமுக,தேமுதிக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருக்கும் என்று இரண்டுக் கட்சிகளைச் சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
உடல்நிலையைப் பற்றி கவலைப்படால், ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்குமேல் சாலை வழியாக கார் பயணம் மேற்கொள்ளும் விஜயகாந்தின் ஆர்வத்தைப் பார்த்து,அவரது குடும்பத்தினரே ஆச்சரியப்பட்டுள்ளனராம். பொதுமக்களை கூட்டமாக பார்க்கும் போது, விஜயகாந்தும் புத்துணர்சிசி பெறுவதால், அவரது சுற்றப் பயணத்திற்கு பிரேமலதாவும் மகிழ்ச்சியோடு ஒப்புதல் வழங்கிவிட்டாராம்.
விஜயகாந்தின் பிரசாரத்தை அவரது குடும்பத்தினரும், தேமுதிக.வினரும் உற்சாகப்படுத்தி வரும் போது, டிடிவி தினகரன் மட்டும், தான் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் விஜயகாந்த்தை பிரசாரத்திற்கு அழைக்காமல் ஏன் மௌனமாக இருக்கிறார் என்று அமமுக முன்னணி நிர்வாகிகளிடம் கேட்டோம்.. அவர் சிரித்துக் கொண்டே சிம்பிளாக பதில் அளித்தார்.
ஊடகங்களுக்கு தீனி போடுகிற அளவுக்கு எல்லாம் விஷயம் ஒன்றும் இல்லை. இன்றைய நிலையிலேயே கோவில்பட்டி தொகுதியில், தான்(டிடிவி) எளிதாக வெற்றிப் பெற்று விட முடியும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார், டிடிவி தினகரன். அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு எதிரான அதிருப்தி அலை, தொகுதி முழுவதும் கொடி கட்டி பறக்கிறது. மேலும், திமுக கூட்டணியில் நிற்கும் கம்யூனிஸ்ட் வேட்பாளரின் பிரசாரமும் பெரியளவில் களைகட்டவில்லை.
திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் மெத்தனமாகவே ஈடுபட்டுள்ளனர். மேலும், அமமுக தேர்தல் பிரிவு செயலாளரும், கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவரான மாணிக்க ராஜாவும், டிடிவி.யின் வெற்றிக்காக உயிரைக் கொடுத்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தை கோவில்பட்டிக்கு அழைத்து, கொதிக்கும் இந்த வெயில் காலத்தில் அவருக்கு சிரமம் கொடுக்க வேண்டுமா என்றுதான் ரெம்பவே யோசிக்கிறார் டிடிவி தினகரன்.
சுயநலமாக தனது வெற்றி முக்கியம் என்பதற்காக, குண்டடிபட்ட எம்.ஜி.ஆரை. போட்டோ எடுத்துப் போட்டு வாக்கு சேகரித்த திமுக தலைவர்கள் மாதிரியெல்லாம், டிடிவி சிந்திக்கவில்லை. முடிந்தவரை அமமுக மற்றும் தேமுதிக தொண்டர்களின் கடுமையான வாக்கு சேகரிப்பே தனக்கு வெற்றியைத் தேடி தந்துவிடும் என்பதால், விஜயகாந்த்தை அழைத்து சிரமப்படுத்த வேண்டுமா என்றுதான் யோசிக்கிறார் டி.டி.வி.தினகரன்.
மற்றபடி விஜயகாந்த்தை தொகுதிக்கு அழைக்கும் விஷயத்தில் எந்த மர்மமும் இல்லை என்று சிரித்தபடியே கைபேசி இணைப்பை துண்டித்தார், அமமுக நிர்வாகி.
இவ்வளவு நல்ல மனம் படைத்தவரா, டி.டி.வி.தினகரன்….