Sun. May 19th, 2024

சேலம் மாவட்டத்தில் உள்ள இன்றைய இளம் தலைமுறையினருக்கு ரங்கராஜன் குமாரமங்கலம் என்பவர் யார்? அவரின் பின்னணி என்னவென்றே தெரியாது? இத்தனைக்கும் சேலம் மாவட்டத்திற்கே பெருமைச் சேர்த்துக் கொண்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கே மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி என்றுதான் பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது.

ரங்கராஜன் குமாரமங்கலம்

1980ல் இருந்து 2000ம் வரை ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் மாவட்டத்தின் முன்னணி பிரமுகர்களில் ஒருவராக வலம் வந்தவர். அவரின் தந்தையின் பெயர்தான் மோகன் குமாரமங்கலம். அவரின் தந்தை, ப.சுப்பராயன், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக (1926 -30) சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக பதவி வகித்தவர். அதன் பிறகு மத்திய அமைச்சர், வெளிநாட்டு தூதர், ஆளுநர் என பல பதவிகளை வகித்த சிறப்புக்குரியவர்.

மோகன் குமாரமங்கலம் (தற்போதைய ஓமலூர் காங்கிரஸ் வேட்பாளரின் தந்தை வழி தாத்தா)

ப.சுப்பராயனின் மகன்களில் ஒருவரான மோகன் குமாரமங்கலமும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதுடன், பொதுவுடைமைக் கட்சி, காங்கிரஸ் என அரசியலில் பயணித்தவர். 1971 – 73 வரை மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவரின் பெயரைத்தான், சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சூட்டப்பட்டுள்ளது. அவரின் புதல்வர்தான் ரங்கராஜன் குமாரமங்கலம்.

டாக்டர் சுப்பராயன் குமாரமங்கலம் (காங். வேட்பாளரின் கொள்ளு தாத்தா)

தாத்தா, தந்தை வழியில் ரங்கராஜன் குமாரமங்கலமும் தேசிய அரசியலில் ஆர்வம் காட்டினார். 1984 ல் சேலம் எம்.பி.யான இவர், 1996 வரை தொடர்ந்து அதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1991 -93 வரை அப்போதையே பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக 3 ஆண்டுகள் நீடித்தார்.

1997 ல் காங்கிரஸ் தலைவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, பாஜக.வில் இணைந்த அவருக்கு 1988 தேர்தலில் திருச்சியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தேர்தலிலும் வெற்றிப் பெற்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையிலும் இடம் பெற்றார் ரங்கராஜன் குமாரமங்கலம். 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 23ல் மறைந்தார்.

அவரின் பெரியப்பா பரமசிவ பிரபாகர் குமாரமங்கலம், (மோகன் குமாரமங்கலத்தின் உடன்பிறந்த சகோதரர்) 1967 முதல் 1970 வரை சுதந்திர இந்திய இராணுவத்தின் ஏழாவது தலைமைப் படைத் தலைவராக பணியாற்றியவர். 2ஆம் உலகப்போர், இந்திய- பாகிஸ்தான் இடையேயான போர் (1947) இந்திய -சீனா போர் மற்றும் இந்தியா- பாகிஸ்தான் போர்களிலும் (1965) பங்கெடுத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

பரமசிவ பிரபாகர் குமாரமங்கலம்

இப்படி பாரம்பரிய அரசியல், தேசப் பக்தி கொண்ட குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை பிரமுகராக, ஓமலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியிருப்பவர்தான் மோகன் குமாரமங்கலம் (தனது தாத்தாவின் பெயரை சுமந்திருப்பவர்). காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரோடு குடும்ப உறுப்பினராக பழகும் வகையில் செல்வாக்கு பெற்றிருப்பவர். அகில இந்திய காங்கிரஸின் ஐ.டி. விங்கில் உள்ள மூத்த நிர்வாகிகளில் இவரும் முக்கியமானவர். (ஊடகப் பணிகளை மேற்கொள்ளும் தொழில் நுட்ப வல்லுநர் குழு)

நினைத்த நேரத்தில் ராகுல்காந்தியுடன் தொலைப்பேசியில் பேசும் செல்வாக்கு பெற்றுள்ள மோகன் குமாரமங்கலத்தை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் அம்போ என்று கழற்றிவிட்டுள்ளதுதான், தமிழக காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகளிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்ட காங்கிரஸைப் பொறுத்த வரை, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தனது கோட்டை போல பாவித்துக் கொண்டிருப்பவர். அங்கு தன்னை தவிர வேறு யாரும் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என அரசியல் சித்துவேலைகளை அசால்ட்டாக புரிபவர். அதுவும் சென்னையில் அமர்ந்து கொண்டே சேலத்தில் காய் நகர்த்தி, எதிரணியிரை அரசியலில் செல்வாக்குப் பெறாமல் செய்யும் பெருந்தன்மைக்குரியவர்.

தற்போதைய தேர்தலில், தனது வாரிசுக்கு ஓமலூர் தொகுதியை குறி வைத்து ஏமாந்து போனார் கே.வி.தங்கபாலு. அதனால், மோகன் குமாரமங்கலத்திற்கு ஆதரவாக காங்கிரஸின் முன்னணி தலைவர்கள் ஒருவர் கூட ஓமலூர் சென்று அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து விடாமல் இன்று வரை தடுத்து வருகிறார்.

தமிழக காங்கிரஸில் உள்ள ஒட்டுமொத்த தலைவர்களும் தனக்கு எதிராக இருப்பதை கண்டு மனம் வெறுத்துப் போன மோகன் குமாரமங்கலம், ராகுல்காந்தியிடம் முறையிட்டிருக்கிறார். தமிழக காங்கிரஸ் உன்னைப் புறக்கணிக்கிறதா? பொறுமையாக இரு. அவர்களுக்கு நான் பாடம் புகட்டுகிறேன் என்று கூறிய ராகுல்காந்தி, அதற்கான தரூணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.

அப்போதுதான், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும், சென்னையில் நடத்த திமுக தலைமை விரும்புகிறது என்று கே.எஸ்.அழகிரி, ராகுல்காந்திக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

அப்போது, மோகன் குமாரமங்கலத்தை மனதில் வைத்து, அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக, சேலத்தில் பொதுக்கூட்டத்தை வைத்துக்கொள்வோம். அதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டியே செய்யட்டும் என்று அதிரடி காட்டியிருக்கிறார் ராகுல்காந்தி.

அதன்படி, மார்ச் 28 ஆம் தேதி சென்னைக்குப் புறப்பட்டு வந்த ராகுல்காந்தி, அடையாறில் வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்துவிட்டு, பிரசார பொதுக்கூட்டத்திற்காக சேலம் புறப்பட்டுச் சென்றார்.

சேலத்தில் மோகன் குமாரமங்கலத்தின் தோளில் கைப்போட்டு, கவலைப்படாமல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்..மீண்டும் ஒருமுறை தமிழகம் வருகிறேன். அப்போது ஓமலூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறேன் என்று கூறியதாகவும் தகவல் உண்டு.

மோகன் குமாரமங்கலத்தை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாகவே புறக்கணிக்கிறார் என்பதற்கும், கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார் உள்ளிட்ட இளம் தலைவர்களும் வேண்டும் என்றே அவரை புறக்கணிக்கிறார்கள் என்பதையும் ஓமலூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி, சேலம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட திமுக கூட்டணி நிர்வாகிகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் பட்டியல் கடந்த 15 ஆம் தேதி வெளியானது. அந்த பட்டியலிலேயே ஓமலூர் மோகன் குமாரமங்கலத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அவரோடு அறிவிக்கப்பட்ட மற்ற வேட்பாளர்களின் பிரசார போட்டோ, வீடியோ உள்ளிட்டவை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் மற்றும் முகநூலில் ஒவ்வொரு நாளும் சில நிமிட இடைவெளியிலேயே திரும்ப திரும்ப பதிவேற்றப்பட்டு வருகின்றன.

ஆனால், ஓமலூர் காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் மோகன் குமாரமங்கலத்தின் ஒரு பிரசார போட்டோ கூட இந்த 14 நாட்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிவிட்டர், முகநூல் பக்கங்களில் பதிவேற்றப்படவில்லை. மோகனின் பிரசாரப் படத்தை பதிவேற்றக் கூடாது என்று முட்டுக்கட்டை போடுபவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும் என்கிறார்கள் சேலம் காங்கிரஸ் நிர்வாகிகள்.

இளம் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்திற்கு, அதுவும் ராகுல்காந்தியோடு மிக நெருக்கமாக இருக்கும் செல்வாக்கு மிக்க குடும்ப வாரிசுக்கு, காங்கிரஸில் உள்ள பெருந்தலைகள் இத்தனை விரோமாக இருக்கிறார்கள் என்றால், இவர்களா, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய ரத்தம் சிந்தப் போகிறார்கள் என்று கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள் தமிழக இளைஞர் காங்கிரஸ் அணி நிர்வாகிகள்.

உட்கட்சிக்குள்யே இவ்வளவு அவமானப்படுத்துதல், குழிப்பறி வேலைகள் நடக்கும் போது, திமுக.வுடனான தொகுதிப்பங்கீட்டின் போது தன்னை அவமானப்படுத்திவிட்டதாக கூறி முதலைக் கண்ணீர் சிந்திய கே.எஸ். அழகிரி, மோகன் குமாரமங்கலத்தை தீண்டதகாதவராக நடத்தும் கொடுமைக்கு என்ன பதில் சொல்வார். ? என்று ஆவேசம் காட்டுகிறார்கள் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்…

குமாரமங்கலம் என்று இந்த குடும்பத்தோடு ஓட்டியிருக்கும் பெயர், பழைய சேலம் மாவட்டத்தில், இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் என்ற ஊரின் பெயர்தான்….