அரசியல் உள்நோக்கத்திற்காக வழக்கை பதிவு செய்து நீதிமன்றத்தின் நேரத்தை அமைச்சராக இருப்பவரே வீணடிக்கலாமா என்று கூறி அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கூடவே 10 ரூபாய் அபாரதத்தொகையும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை அறப்போர் இயக்கம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு எதிராவும் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டது, அறப்போர் இயக்கம். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வாங்கிய மின்சாரத்திற்கு செலுத்தப்பட்ட தொகையில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது, அறப்போர் இயக்கம்.
இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வெளியிட அறப்போர் இயக்கம் தயாராகி வருவதாகவும், சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் அதுபோன்ற வீடியோ வெளியிடப்பட்டால் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, அந்த வீடியோ வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வீடியோ வெளியிடப்படவுள்ளதற்கான எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் அரசியல் உள்நோக்கத்தின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நீதிமன்றத்தின் நேரத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீணடித்துள்ளது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்களை எதிர்காலத்தில் நடைபெறாமல் கவனமாக செயல்பட வேண்டும். அமைச்சரின் பொறுப்பற்ற தன்மைக்கு 10 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.