Sat. Nov 23rd, 2024

சேலத்தில் சரிந்த திமுக செல்வாக்கு என்ற தலைப்பில் நல்லரசு தமிழ் செய்திகள் தளத்தில் சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டிருந்தபடி, மார்ச் 23 ஆம் தேதி சேலத்தில் தங்கியிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகள் மற்றும் மூன்று மாவட்டச் செயலாளர்கள் (எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆ.ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி, ) ஆகியோரை அழைத்து ரவுண்ட் கட்டிவிட்டதாக தகவல் மறுநாள் காலையிலேயே கிடைத்தது.

கடந்த 24 ஆம் தேதி மு.க.ஸ்டாலினின் ருத்ரதாண்டவம் குறித்து வேறு எந்த ஊடகங்களிலாவது பதிவாகுமா என்று காத்திருந்தோம். வரவில்லை. நேற்றும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தோம். வேறு வழியின்றி, மு.க.ஸ்டாலினின் இன்னொரு அவதாரத்தை இங்கு விரிவாக பதிவிடுகிறோம்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதி. அதில் ஒன்றுதான் முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி. இந்த 11 தொகுதிகளில் திமுக 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஓமலூர் தொகுதியிலும் போட்டியிடுகிறது. இன்றைய நிலவரப்படி, ஆத்தூர், கெங்கவள்ளி, ஏற்காடு, சங்ககிரி ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டுமே திமுக.வுக்கு வாய்ப்பு இருக்கிறது.

கருத்துக் கணிப்பு வெளியிட்ட பிரபல ஊடகங்களைப் போலவே, மற்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கண்ணுக்குத் தெரியாத அதிமுக ஆட்சியின் எதிர்ப்பு அலை, நம்மை காப்பாற்றிவிடதா என்ற கனவில்தான் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் நீங்கலாக, வெற்றிப் பெற வாய்ப்புள்ள 4 தொதிகளைத் தவிர்த்து, இரண்டு தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றவையாக இருக்கிறது. அதில் ஒன்று முதல்வர் இ.பி.எஸ். போட்டியிடும் எடப்பாடி தொகுதி. மற்றொன்று வீரபாண்டி ஆறுமுகத்தின் குலக்கொழுந்தான டாக்டர் தருண் போட்டியிடும் வீரபாண்டி தொகுதி. இந்த இரண்டு தொகுதியின் நிலவரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தியுள்ளார்,

கடந்த 23ம் தேதி சேலத்தில் தங்கியிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். எடப்பாடியில் முதல்வர் அளவுக்கு பணத்தை வாரி இறைக்க முடியாது என்று சொல்லியுள்ள மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, திமுக.வுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அதனால், சம்பத்குமார், இபிஎஸ்.ஸை வீழ்த்தி வெற்றி நாயகனாக வருவார் என நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

மேலும், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் ஆகிய மூன்று தொகுதிகளில் சங்ககிரியில் திமுக வேட்பாளர் ராஜேஷ் வெற்றிக் கோட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். மற்ற இரண்டு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு சந்தேகம்தான்.

இதேபோல, மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ஆ.ராஜேந்திரன் உள்பட, சேலம் தெற்கு வேடபாளர் சரவணன், மேற்கு வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் ஆகிய மூன்று தொகுதிகளின் நிலைமையும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நிலைமைதான். அதிமுக அதிருப்தி அலையையே பெரிதாக நம்பியிருக்கின்றனர் இந்த மூன்று வேட்பாளர்களும். .

வீரபாண்டி, ஏற்காடு, கெங்கவள்ளி, ஆத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளில் வீரபாண்டியைத் தவிர்த்து மற்ற மூன்று தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 11 தொகுதிகளில் திமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் வெற்றி வாயப்பு பிரகாசமாக உள்ளது என்றும், எஞ்சிய 8 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு சந்தேகம் என்றும் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.

இதில் ஒரு முன்னேற்றமாக இப்போது, வெற்றி பெறும் தொகுதிகளில் ஏற்காடும் சேர்ந்துள்ளது. சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் போல. வெற்றி பெறும் இந்த மூன்று தொகுதிகளின் பொறுப்பாளராக அவர் தான் நியமிக்கப்பட்டிருக்கிறார். வீரபாண்டி பொறுப்பாளராக ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்த பார்த்திபன், பாரப்பட்டி சுரேஷிடம் மல்லுக்கு நிற்க முடியாது என்று ஒதுங்கியிருப்பார் போல…

எஞ்சிய 7 தொகுதிகளில் (காங்கிரஸை உள்ளடக்கி) வெற்றிப் பெறுவது அவசியம் என்றும் அப்படி திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றிப் பெறவில்லை என்றால், திமுக மாவட்டச் செயலாளர்கள் மூன்று பேரும் சென்னைக்கே (எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆ. ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி) வர முடியாது என்று கடுமையான வார்த்தைகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கர்ஜனை புரிந்துள்ளார்.

இதைவிட ஒரு படி மேலே போய், வீரபாண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்தை விலாவாரியாக சொல்லி, வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகள் மகேஸ்வரி, இளைய மகன் ஆ.ராஜா, இரண்டாவது மனைவி மகன் ஆ.பிரபு, வீரபாண்டி ஆறுமுகத்தின் சகோதரர் மகன் பாரப்பட்டி சுரேஷ், ஆறுமுகத்தின் கார் ஓட்டுனரும், உதவியாளருமான சேகரின் மனைவி வெண்ணிலா (வீரபாண்டி ஒன்றிய செயலாளர்) ஆகியோரை ஒரே குழுவாக நிற்க வைத்து, கடுமையான வார்த்தைகளில் வறுத்தெடுத்திருக்கிறார், மு.க.ஸ்டாலின்.

ஆ.ராஜா, வெண்ணிலா சேகர், பாரப்பட்டி சுரேஷ்
ஆ.பிரபு

வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண் வெற்றிப் பெறவில்லை என்றால், நீங்கள் யாரும் சென்னைக்கே வர முடியாது. மே 2 ஆம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சிதான் அமையும். அதை மறந்து விடாதீர்கள். அதன் பிறகு ஏற்படும் விளைவுகளை நினைத்துப் பாருங்கள். வீரபாண்டி தொகுதியில் தருண் போட்டியிடவில்லை. வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர் என்று நினைத்து ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் டாக்டர் தருணின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று ரவுண்ட் கட்டி வறுத்தெடுத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

வீரபாண்டியாரிடம் அன்புக் காட்டிய தலைவராக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், முதல்முறையாக சிவந்த கண்களோடு ஆவேசம் கொண்ட தவைராக மாறி சுடு சொற்களை உதிர்த்ததைப் பார்த்து அதிர்ச்சியான வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன்கள் ஆ.ராஜா, ஆ.பிரபு ஆகிய இருவரும் ஆடிப்போய்விட்டார்களாம். (ஆ.பிரபுவை சேலம் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாகவும் உறுதிபடுத்த முடியாத வகையில் தகவல் கிடைத்திருக்கிறது. )

சிறிது நேரத்திலேயே ஆவேசம் அடங்கியவராக காட்சியளித்த மு.க.ஸ்டாலின், வெண்ணிலா சேகரிடம் தனிப்பட்ட முறையில் சில வார்த்தைகளை பேசினாராம். பொறுமையாக இருங்கள். உங்களுக்கு உரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்று அன்பாக பேசியுள்ளார்.

இன்னொரு தகவலும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. வீரபாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஆ. மகேஸ்வரி, ஆ.ராஜா, ஆ.பிரபு, பாரப்பட்டி சுரேஷ், வெண்ணிலா சேகர் ஆகியோர் தலா 5 கோடி ரூபாயை, அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் விருப்பக் கட்டணமாக செலுத்தியிருக்கிறார்களாம். வீரபாண்டி தொகுதியில் டாக்டர் தருண் வெற்றிப் பெற்றால்தான், இந்த தொகை அவரவருக்கு திருப்பி தரப்படும் என்றும் இந்த சந்திப்பின் போது கூறப்பட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

வீரபாண்டி ஆறுமுகம், தனது சகோதரர் மு.க.அழகிரிக்கு ஆதரவாக நின்றதால், அவர் உயிரோடு இருக்கும் வரை வீரபாண்டியாரிடம் நெருங்கிப் பழகாமல் தவிர்த்து வந்தவர் மு.க.ஸ்டாலின். அவரின் மறைவுக்குப் பிறகு சேலம் வரும் தருணங்களில் வீரபாண்டியில் உள்ள அவரது சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்துவார் மு.க.ஸ்டாலின்.

திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய மறுநாளே சேலம் சென்ற மு.க.ஸ்டாலின், காலையில் எந்த நிகழ்ச்சியும் இல்லாததால் வீரபாண்டி ஆறுமுகத்தின் சமாதிக்கு செல்ல விருப்பப்பட்டிருக்கிறார். ஆனால், அங்குள்ள ஒரு விஜபி, தலைவரின் மனதை மாற்றியதையடுத்து, அன்று சமாதிக்கு செல்லவில்லை. கடந்த மார்ச் 23 ஆம் தேதி மீண்டும் இரண்டாவது கட்டமாக சேலத்திற்கு சென்றபோதும், அவரது சமாதிக்கு செல்ல மு.க.ஸ்டாலினுக்கு நேரம் இல்லை.

தங்களின் குல தெய்வமாக வீரபாண்டி ஆறுமுகத்தை இன்றைக்கும் நினைவுக்கூர்ந்து வரும் அவரது விசுவாசிகள், இரண்டு முறை பிரசாரத்திற்காக சேலம் வந்தபோதும், திமுக தலைவரின் புறக்கணிப்பை இயல்பாக எடுத்துக் கொள்ளாமல், நெஞ்சுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளும் தேர்தல் பொதுக்கூட்டமும் சேலத்தில்தான் வரும் 28 ஆம் தேதி நடக்கிறது. அன்றைய நிலவரத்தையும், கலவரத்தைதயும் அப்போது பார்ப்போம்…