தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளுக்கு வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னையைக் கடந்த மற்ற மாவட்டங்களில் எந்தக் கட்சி வெற்றிப் பெறும் என்ற விவாதத்தைவிட, சென்னையை எந்தக் கட்சி கைப்பற்றும் என்பதை தெரிந்து கொள்ளதான், கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் பொதுஜனம் ஆர்வம் காட்டும். அந்த வகையில், சென்னை எப்போதுமே திமுக கோட்டை என்று சொல்லி வந்ததெல்லாம் பழங்கதையாக கடந்த ஒன்றிரண்டு தேர்தல் நிரூபித்துவிட்ட நிலையில், இன்றைக்கும் அந்த ஆர்வக் கோளாறான பேச்சு நின்றபாடில்லை.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளைவிட, ஒரு காலத்தில் சென்னைக்குட்பட்டிருந்த தொகுதிகள் இன்றைக்கு செங்கல்பட்டு மாவட்ட தொகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் தொகுதிகளில் நடக்கும் களேபரங்கள்தான் காமெடியாக மாறியிருக்கின்றன என்கிறார்கள், அந்தந்த தொகுதிக்குட்பட்ட சமூக ஆர்வலர்கள். ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளின் நிலவரம் தான் கலவரமாக இருக்கிறது என்கிறார்கள்.
தாம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான எஸ்.ஆர். ராஜா மூன்றாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுகிறார். 2006 மற்றும் 2016ல் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ..இவர்தான். திமுக.வின் பொருளாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலுவின் நம்பிக்கைக்குரிய விசுவாசி. பண பலம், படை பலத்திற்கு குறைவில்லை. திமுக.வில் உட்கட்சிப் பூசல், நிஜ பூசல் மாதிரி காலையில் தோன்றி மாலையில் மறைந்துவிடுவதால், உற்சாகமாக இருக்கிறார் எஸ்.ஆர். ராஜா.
அவரை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைசசர் சின்னய்யா, கடந்த 2011 தேர்தலில் இதே தொகுதியில் எஸ்.ஆர்.ராஜாவை வீழ்த்தி, வெற்றிப் பெற்றதையடுத்து, அமைச்சர் பதவி வழங்கினார் மறைந்த செல்வி ஜெயலலிதா. இவரின் கட்சி சேவைக்கும், விசுவாசத்திற்கும் பரிசாக கடந்த 2016 தேர்தலில் போட்டியிட வாய்ப்பே இவருக்கு வழங்கவில்லை, செல்வி ஜெயலலிதா.
அமைச்சராக இருந்த காலத்தில் சம்பாதித்த பணத்தையெல்லாம் நிரந்தர முதலீடாக மாற்றிய புத்திசாலியான இவர், இந்த தேர்தலில் பணத்தையே வெளியே எடுக்கவே இல்லையாம். பஞ்சப்பாட்டு பாடுவதால், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லாம், அமமுக வேட்பாளர் கரிகாலனுக்கு, தேர்தல் வேலை பார்க்க கிளம்பிவிட்டார்களாம்.
அமைச்சராக சின்னய்யா இருந்தபோது, தாம்பரம் நகராட்சி சேர்மனாக இருந்தவர் கரிகாலன். அந்த விசுவாசத்திற்காக, 2011 தேர்தலில், சின்னய்யாவின் செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டவர் கரிகாலன். ஆனால், இப்போதைய தேர்தலில் அவரே களத்தில் நிற்பதால், நன்கொடையாக ஒத்த பைசாவை கூடவே, சின்னய்யாவுக்கு தரவில்லையாம். யாராவது தேர்தல் நிதி தருவார்களா, அல்லது அதிமுக தலைமை பணத்தை அனுப்பி வைக்குமா என வழி மேல் விழி வைத்து சீன் போட்டுக் கொண்டிருக்கிறாராம் சின்னய்யா. இதனால், அதிமுக. வாக்கு பிளவுப்பட்டு, அமமுக.வுக்கு பாதி, அதிமுக.வுக்கு பாதி சென்றுவிடும் என்பதால், உதயசூரியன் பிரகாசமாக இருக்கிறது தாம்பரம் தொகுதியில்…
பல்லாவரம் தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன்தான் அதிமுக வேட்பாளர். 2016 தேர்தலில் தாம்பரத்தில் இவர் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவிடம் தோற்றுப் போனவர். திமுக.வில் சிட்டிங் எம்.எல்.ஏ இ.கருணாநிதி மீண்டும் போட்டியிடுகிறார். அக்கட்சியின் மறைந்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைப் போலவே, தேர்தல் அரசியலில்
சகலகலாவல்லவர் இந்த இ.கருணாநிதி. திமுக.வினரும் வெறித்தனமாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் உற்சாகமாக தொகுதியை வலம் வருகிறார் இ.கருணாநிதி. ஆனால், முன்னாள் எம்.பி.யாகவும், தற்போது செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்த போதும், கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லாதவர். கட்சிக்கு விசுவாசமான நிர்வாகிகளுக்கு உரிய பதவிகளை பெற்றுத் தராதவர் என்ற குற்றச்சாட்டு, ரெம்ப சத்தமாகவே கேட்கிறது அதிமுக கட்சிக்குள்.
சின்னய்யாவைப் போல இவரும் செலவழிப்பதில் கஞ்சத்தனம் காட்டுகிறார் என்றும் கரண்ஸி நோட்டுகளை இறக்காமல் அன்றாட செலவுக்கு மட்டுமே சில்லறையை சிதறவிட்டுக் கொண்டிருக்கிறார் என்று புலம்புகிறார்கள் பல்லாவரம் அதிமுக நிர்வாகிகள். அதிமுக.வில் நடக்கும் உள்கட்சி குழப்பத்தைப் பார்த்து தெம்பாக இருக்கிறார் இ.கருணாநிதி. மேலும், அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக அனகாபுத்தூர் முருகேசன் போட்டியிடுவதால், அதிமுக ஓட்டு வங்கியை அவரும் முடிந்தவரை பங்கம் செய்வார் என்பதால், திமுக கொடியோடு கோட்டைக்கு புறப்பட தயாராகவே இருக்கிறார் இ.கருணாநிதி.
ஆலந்தூர் தொகுதியும் வி.வி.ஐ.பி. தொகுதிதான். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் முன்னாள் அமைச்சர்கள் களத்தில் நிற்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்றே சொல்கிறார்கள் தொகுதி வாசிகள். இருவருமே இந்த தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் கொண்டவர்கள். திமுக.வின் வேட்பாளராக களத்தில் இருப்பவர் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரான தா.மோ.அன்பரசன். இவர் அதிதீவிரமான மு.க.ஸ்டாலின் விசுவாசி. இதை அவரே பலமுறை திமுக கூட்டங்களில் சொல்லியிருக்கிறார். செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகும்கூட, ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரான தா.மோ.அன்பரசன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
செங்கல்பட்டுக்கு என்று தனியாக மாவட்டச் செயலாளரை போட வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. க்கள் தாம்பரம் ராஜா, பல்லாவரம் கருணாநிதி ஆகியோர் முயன்றபோதும்,அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அந்தளவுக்கு அவரும் பாசம் காட்டுபவராகதான் தன்னை உருவாக்கி வைத்திருக்கிறார் தா.மோ.அன்பரசன். அதுமட்டுமின்றி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவரது தாயார் சாந்தா ஆகியோருக்கும் நம்பிக்கைக்குரிய விசுவாசிகயாகதான் அன்பரசன் இருந்து வருகிறாராம்.
மேலிடத்தின் செல்வாக்கை பரிபூரணமாக வைத்திருப்பதாலும், இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றால் உறுதியாக அமைச்சராகிவிடுவார் என்பதாலும், தா.மோ.அன்பரசனின் கடைக்கண் பார்வையில் எப்படியாவது பதிவாகிவிட வேண்டும் என்பதற்காக தீயாக வேலைப்பார்க்கிறார்கள் திமுக நிர்வாகிகள். அதனால், செம ஜாலியாக தேர்தல் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரின் ஜாலிக்கு மற்றொரு காரணம், அதிமுக. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிதான்.
அவருக்கு அதிமுக.வினரே ஒத்துழைப்பு தர மறுக்கிறார்களாம். சென்னை புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.கந்தன், கடந்த ஐந்தாண்டுகளில் ஆலந்தூர் தொகுதிக்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறாராம் பா.வளர்மதி. தொகுதியைச் சுற்றி வந்த முதல் ரவுண்டிலேயே அதிமுக.வினரின் அதிருப்தி, தொகுதி மக்களின் புறக்கணிப்பை கண்டு நொந்து போய்விட்டாராம் பா.வளர்மதி. அதிமுக ஆலோசனைக் கூட்டத்தின் போது, கே.பி.கந்தனை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தாராம் பா.வளர்மதி. அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்தபோதும், ஆலந்தூர் தொகுதியை கண்டு கொள்ளவே இல்லையே..நீங்கள் இங்கு போட்டியிடப் போவதில்லை. வேறு யாராவதுதான் போட்டியிடப் போகிறார்கள். அவர்கள் அனுபவிக்கட்டும் என்று சும்மா இருந்து விட்டீர்களா.. நீங்கள் போட்டியிடும் சோழிங்கநல்லூர் தொகுதியை மட்டுமே கவனித்துக் கொண்டீர் என சீற்றம் காட்டினாராம் பா.வளர்மதி.
எதிர்முகாமில் திமுக வேட்பாளர் பலம் பொருந்தியவராக இருந்தாலும், கடைசி நிமிடம் வரை டஃப் பைட் கொடுக்கும் வகையில், திமுக.வில் உள்ள உட்கட்சி குழப்பத்தை ஊதிப் பெரிதாக்கி, வெற்றிப் பெற்றுவிட முடியுமா என்று வியூகங்களை மாற்றி மாற்றி அமைத்து, களத்தை சுற்றி வருகிறாராம் அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி.
அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் முகம்மது தமீன் அன்சாரியும் அதிமுக வாக்குகளை பிரிப்பார் என்பதால், பா.வளர்மதி முகத்தில் சோக ரேகைகள் படர்ந்துதான் இருக்கிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
ஆக, மொத்தத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக கொடியே உயர, உயர பறந்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய தேதி கள யதார்த்தம்.