Sat. Nov 23rd, 2024

கொரோனா தொற்று பரவல் காரணமாக, 9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

அரசின் இந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க கோரி, ஆசிரியர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதிகள் அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.

முன்னதாக மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பொது தேர்வு நடத்தவில்லை என்றாலும்கூட, பள்ளிகள் அளவில் தேர்வு நடத்த வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில்தான் மேல் வகுப்பான பிளஸ் 1 படிப்பில் சேரும் போது விரும்பும் பாடத்திட்டத்தை மாணவர் சேர்க்கை நடத்த முடியும். தேர்வுகள் ரத்து செய்யப்படுவது தொடர்பாக, பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என எந்த தரப்புடனும் பள்ளிக்கல்வித்துறை எந்த கலந்தாலோசனையும் நடத்தவில்லை. சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, அரசியல் ஆதாயம் தொடுவதற்காக தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்ற வாதத்தை முன்வைத்தார்.
அரசு தரப்பில், கொரேனோ அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், பொதுநலன் சார்ந்த அம்சங்களில் அரசு அதிகாரிகள் உரிய ஆலோசனைகளை பெற்ற பிறகே முடிவுகள் எடுப்பார்கள். எனவே எந்த கலந்தாலோசனையும் நடைபெறவில்லை என்ற வாதத்தை கருத்தில் கொள்ள முடியாது. 9 முதல் 11ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வு என்ற அரசின் அரசாணை ரத்து செய்ய முடியாது.

மேலும் 10-ஆம் வகுப்பில் இருந்து 11-ஆம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், அவரவர் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதற்கு, அவர்களின் தகுதியை கண்டறிய 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்தி கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், பள்ளிக்கல்வித் துறை தேவையான வழிகாட்டும் விதிகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.