விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நித்தம் நித்தம் செய்யும் காமெடிகளே ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஃபயர் ஆகி வருவதால், அந்த மாவட்டத்திற்குட்பட்ட மற்ற தொகுதிகளில் நடக்கும் களேபரங்கள, விருதுநகர் மாவட்டத்தை தாண்டி, வேறு எங்கும் பெரிதாக பேசப்படுவதில்லை.
ராஜபாளையம் தொகுதிக்கு இணையாகவே, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நிலவரமும் கலவரமாகதான் இருக்கிறது. நெசவாளர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர், திமுக.வின் வி.வி.ஐ.பி. யான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான இவர், அவரது மறைவுக்குப் பிறகு செல்வி ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக நின்று அவர் செய்த திருவிளையாடல்கள் எல்லாம் உலகப் பிரசித்தம்.
அதிமுக.வில் அவர் நீடித்த காலத்திலேயே, எம்.ஜி.ஆரின் வெறிக்கொண்ட பக்தரான மறைந்த தாமரைக்கனிக்கும், கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கும் நடைபெற்ற மோதல்களின் வெளிப்பாடுகளின் விளைவுகளை இன்றைக்கும் அவரின் முகத்தின் அடையாளமாக இருக்கிறது. சுமார் 40 ஆண்டுகளில் பெரும்பான்மையான ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததுடன், அமைச்சராகவும் இருந்திருக்கிறார் கேகேஎஸ்எஸ்ஆர். சாத்தூர், விளாத்திக்குளம், அருப்புக்கோட்டை என விருதுநகர் மாவட்டத்தில் சுற்றிசுற்றி வந்ததால், அந்த மாவட்டத்தில் அசைக்க முடியாத திமுக பிரமுகர், இன்றைக்கும் அவர்தான்.
2016 சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டையை கைப்பற்றியதைப் போல, இந்த தேர்தலிலும் தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்காக, கேகேஎஸ்எஸ்ஆர். தொகுதிக்குள் பம்பரமாக சுற்றி வருகிறார். 2011 தேர்தலில் வெற்றிப் பெற்று அமைச்சரான வைகைச் செல்வன், குறுகிய காலத்திற்குள்ளாகவே மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கோபத்திற்கு உள்ளாகி அமைச்சரவை பதவியை இழந்ததுபோல, 2016 தேர்தலிலும் கோட்டை விட்டார். 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தேர்தல்களில் தலா ஒருமுறை வெற்றிப் பெற்ற இந்த இரண்டு பிரபலங்களும், மூன்றாவது டெஸ்ட் மேட்ச் போல, இப்போது முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவர் டோக்கனுக்கு பெயர் பெற்றவர். இன்னொருவர் ஹாட் பாக்ஸுக்கு பெயர் பெற்றவர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக டோக்கன் அரசியலை கையில் எடுத்தவர், வைகைச் செல்வன். 2011 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து ஏமாற்றியவர் வைகைச் செல்வன் என்று பழிச்சொல்லை சுமந்து கொண்டிருக்கிறார். டோக்கன் கொடுத்தால் அருப்புக்கோட்டையில் எந்த கடையிலும் 3000 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று ஆசை காட்டி ஏமாற்றியுள்ளார். இந்த விவகாரம், 2016 தேர்தலில் கோபமாக கொந்தளிக்க வாக்காளர்களுக்கும், அதிமுக.வினருக்கும் இடையே கைகலப்பாக மாறியதை இன்றைக்கும் மறக்காமல் இருக்கிறார்கள் அருப்புக்கோட்டை மக்கள்.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் இவரை எதிர்த்துப் போட்டியிட்டு பரிதாபமாக தோற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், விக்கிரமாதித்தன் கதையாக மூன்றாவது முறையாகவும் அருப்புக்கோட்டையிலேயே போட்டியிடுகிறார். இரண்டு பேருக்கும் தற்போதைய தேர்தல் வாழ்வா, சாவா போராட்டமாக உள்ள நிலையில், இருவரில் யார் வெற்றிப் பெற்றாலும் அமைச்சர் என்ற ஆசைப்பதவி கண் முன்னே தொங்கிக் கொண்டிருப்பதால், எல்லா சித்துவேலைகளிலும் இறங்கி இருக்கிறார்களாம், கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரனும், வைகைச் செல்வனும். ஆனால், வாக்காளர்களைக் கண்டு அவர்கள் பயப்படுவதைவிட, ஒரே ஒருவரை, அதுவும் பெண்மணியை கண்டுதான் இருவரின் பேஸ்மென்ட்டும் ஆட்டம் கண்டுகொண்டிக்கிறதாம்.
தொகுதி முழுவதும் அவர் பிரபலம் இல்லையென்றாலும் கூட அவரின் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் போல காட்சியளிக்கும் நிறுவனத்தின் பெயர்தான், ஆட்சியின் உச்சத்தை நுகர்ந்த திமுக, அதிமுக வேட்பாளர்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டதாம். ஆதிக்கச் சக்தியாக இருக்கும் ராமச்சந்திரனையும், வைகைச் செல்வனையும் ஒருசேர கண்ணில் விரலை விட்டு ஆட்டுபவர், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் உமாதேவி விஜய்ராம். வெறும் பெயரை மட்டும் சொன்னாலே, அருப்புக்கோட்டையை தாண்டி விருதுநகர் முழுவதும் ஓங்கி ஒலிக்கிறதாம், ஸ்ரீஜெயவிலாஸ் நூற்பாலையின் நிர்வாக இயக்குனர்தானே என்று கிராம மக்களும் உற்சாகமாக கேட்கிறார்களாம். அவரின் நூற்பாலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கிறார்களாம்.
இந்த பணியாளர்கள், உமாதேவிக்காக உயிரையே கொடுக்கும் விசுவாசமுள்ளவர்கள் என்று கூறும் அருப்புக்கோட்டை சமூக ஆர்வலர்கள், மக்கள் நீதி மைய வேட்பாளராக உமாதேவி , தேர்தலில் போட்டியிடுகிறார் என்றவுடன் கேகேஎஸ்எஸ்ஆரும், வைகைச் செல்வனும் கதிகலங்கி போனது என்னவோ உண்மைதான் என்கிறார்கள்.
தொகுதியின் இன்றைய நிலவரப்படி சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், வெற்றிக்கு எந்த வழியிலும் குந்தகம் வந்து விடக் கூடாது என்பதற்காக, மேலிடம் மூலம் எடுத்த முயற்சிதான், அருப்புக்கோட்டையிலேயே அனலை கிளப்பியுள்ளது. திமுக மேலிடத்தில் இருந்து உமாதேவிக்கு மிகப் பெரிய ஆஃபர் ஒன்று வந்ததாகவும், அதைக் கேட்டும் உமாதேவி குடும்பம் சலனமடையாமல், அதை தவிர்த்துவிட்டது என்கிறார் அருப்புக்கோட்டை தொழிலதிபர் ஒருவர்.
இதேபோல, அதிமுக.வில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய போது தேமுதிக கேட்ட டெல்லி ஆஃபரை உமாதேவியிடமும் கூறி ஆசை காட்டியதாகவும், அதையும் அந்த குடும்பம் புறக்கணித்துவிட்டதாகவும், அந்த தொழிலதிபரே ஆச்சரியத்துடன் விவரித்தார்.
அதிமுக, திமுக என இரண்டு கழகங்களுமே ஆஃபர் ஆசை காட்டும் வித்தையை அறிந்து ஆவேசமாகியிருக்கிறார்கள் மக்கள் நீதி மையப் பொறுப்பாளர்கள்.
நூலிழையிலாவது திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெற்றிப் பெற்றிடுவர். மே 2க்குப் பிறகு திமுக ஆட்சிதான் அமையப் போகிறது. எப்படியும் அமைச்சராகி விடுவார் கேகேஎஸ்எஸ்ஆர். கடந்த முறை ஜெயிக்க வைத்ததைப் போல, இந்த முறையும் ஜெயிக்க வைக்கும் மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, அருப்புக்கோட்டை உள்பட தொகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அரசு கல்லூரிகளை அருப்புக்கோட்டைக்கு கொண்டு வர கேகேஎஸ்எஸ்ஆர். நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் ஹாட்பாக்ஸை கொடுத்து ஏமாற்றிவிடக் கூடாது என்பதுதான் எங்கள் ஒரே ஆசை என்கிறார்கள் அருப்புக்கோட்டை சமூக வலைதள போராளிகள்.