Sat. Nov 23rd, 2024

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் சித்ரா எம்.எல்.ஏ.வை ஆதரித்து, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அம்மா பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவருமான ஆர்.இளங்கோவன் வாக்கு சேகரித்தார். முன்னதாக, அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அதிமுக முன்னணி நிர்வாகிகள், சித்ரா எம்.எல்.ஏ.வின் கடந்த 5 ஆண்டு கால செயல்பாடுகளை கடுமையாக விமர்ச்சித்தனர். அதனைக் கேட்டு ஆவேசமான ஆர்.இளங்கோவன், சித்ரா எம்.எல்.ஏ.வை ஒருமையில் அழைத்து ஏக வசனத்தில் பேசினார்.

இதுதொடர்பாக சித்ரா எம்.எல்.ஏ.வை வெளுத்து வாங்கிய இளங்கோவன் என்று ஏற்கெனவே, நல்லரசு தமிழ் செய்திகளில் இன்று காலை ஒரு செய்தியை பதிவு ஏற்றியுள்ளோம். அந்த கூட்டத்தில் நிறைவாக பேசிய ஆர்.இளங்கோவன், அம்மா (ஜெயலலிதா) ஆட்சி காலத்தை விட அதிகமான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியவர் முதல்வர் எடப்பாடியார். அதேபோல, அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி படுத்தும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களையும் அறிவித்து குறுகிய ஆண்டுகளுக்குள்ளாகவே அவற்றையெல்லாம் அமல்படுத்தி உள்ளார்.

சேலம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நிறைவேற்றி வைக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது. இதேபோல, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களின் மக்களின் தேவைகளை அறிந்து, வியக்க வைக்கும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் நமது முதல்வர். மேலும், அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, மாநிலம் முழுவதும் அதிமுக.வுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

எனவே, மீண்டும் முதல்வராக எடப்பாடியார் தான் அரியணையில் அமருவார். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இதை மனதில் கொண்டு, ஏற்காடு தொகுதியில் அதிமுக வெற்றிப் பெற, கசப்புணர்வை எல்லாம் மறந்து அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பாடுபட்டு, முதல்வர் எடப்பாடியாரின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்க வேண்டும்.

இவ்வாறு ஆர். இளங்கோவன் கூறினார்.

தொடர்ந்து, ஏற்காடு பேருந்து நிலையம், அண்ணா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சித்ரா எம்.எல்.ஏ.வுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆர். இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.