கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மு.க. ஸ்டாலின் இன்றைக்கு வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். என்னைப் பார்த்து விவசாயி இல்லை என்கிறார். போலி விவசாயி என விமர்சனம் செய்கிறார். விவசாயிகளிலேயே போலி விவசாயி என்று கண்டறிந்தவர் உலகத்திலேயே ஸ்டாலின் ஒருவராகதான் இருக்கும். அவருக்கு விவசாயத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாது.அதனால் அப்படி அவர் பேசுகிறார்.
எனக்கு சொந்தமான விவசாய பூமி இருக்கிறது. எனது தாத்தா காலத்திலிருந்தே பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறேன். என்னை கேலி பேசுவதாக நினைத்து விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார்.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறைக்கு 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. முந்தைய திமுக ஆட்சியின் போது, அவர்தானே உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். ஒரு விருதையாவது மு.க.ஸ்டாலின் வாங்கியிருப்பாரா?
இன்றைக்கு எங்கு சென்றாலும் சிறப்பான சாலை வசதியிருக்கிறது. ஆனால் திமுக.வினரும் மு.க.ஸ்டாலினும் பொய்யையே திரும்ப திரும்ப பேசி வருகிறார்கள்.
அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தோம். ஆனால், புதிய மாவட்ட பிரிப்புக்கு தடை போட்டவர் மு.க.ஸ்டாலின்.
புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிட்ட கையோடு, குறுகிய காலத்திலேயே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தோம். அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதுபோல, கள்ளக்குறிச்சி- சேலம் மாவட்ட எல்லையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான கால்நடை பூங்காவை அமைத்துள்ளோம். நாங்கள் தொடங்கி வைக்கும் திட்டங்களை கிண்டலடிக்கிறார் மு.க.ஸ்டாலின். கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்த நானே, அண்மையில் அந்த பூங்காவையும் திறந்து வைத்தேன்.
தேர்தல் நேரத்தில் மக்களை எப்படியாவது குழப்பி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார் ஸ்டாலின். அதற்கு தப்பான வழிகளையெல்லாம் கண்டுபிடித்து மக்கள் மனதில் இடம்பிடிக்க துடிக்கிறார்,
அவர்கள் ஆட்சியில் இருந்த போது நல்லது செய்து இருந்தால்தானே பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணவே அவர்களுக்கு ஒருபோதும் கிடையாது.
அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். இப்போதுகூட அதிகாரம் வரும் முன்பே அதிகாரிகளை திமுக.வினர் மிரட்டுகின்றனர், அதிகாரம் வந்தால் இன்னும் எப்படியெல்லாம் மிரட்டுவார்கள் என்று நினைத்து அரசு அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்புதான் அரசியலுக்கே வந்தார் உதயநிதி. ஆகிறது, காவல்துறை டி.ஜி.பி.யையே அவர் எச்சரிக்கிறார். இந்த நிலைமை அ.தி.மு.க.வில் உண்டா? மக்களிடம்
தி.மு.க. என்றால் ரவுடி கட்சி என்ற நினைப்புதான் உள்ளது.
அராஜக கட்சி. அந்த கட்சி தலைவரே அப்படித்தான் நடந்து கொள்கிறார். தலைவர் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியில் தான் இருப்பார்கள்.
10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால், திமுகவினர் கோரப்பசியில் இருக்கிறார்கள்.தப்பித்தவறி மீண்டும் ஆட்சிக்கு அவர்கள் வந்தால் சும்மா இருப்பார்களா? திமுக ஆட்சிக்கு வந்தால் கடை, கடையாக வந்து மாமூல் வசூல் செய்வார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு செம்மையாக இருக்கிறது. இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று மத்திய அரசே பாராட்டுகிறது. மாநிலத்தின் எந்த பகுதியிலும் சாதி சண்டை என்ற பேச்சே கிடையாது, அதுபோல இந்த பத்தாண்டுகளில் மத சண்டையும் கிடையாது.
அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ்கிறது. ஒரே குடும்பமாக நாம் எல்லோரும் வாழ்ந்து வருகிறோம். வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழகத்தை ஆள்வற்கு மீண்டும் ஒருமுறை அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
தப்பிதவறி கூட தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுத்து விடாதீர்கள், தி.மு.க.ஆட்சி நிச்சயம் அமையாது. உஷாராக இருங்கள் என மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் உரையாற்றினார்.