Sat. Nov 23rd, 2024

பெங்களூரில் இருந்து பிப்ரவரி 9 ஆம் தேதி சென்னை திரும்பிய வி.கே. சசிகலா, 35 நாட்களுக்கு மேலாக சென்னையிலேயே தங்கியிருந்தார். குடும்ப விழா, குலத் தெய்வ வழிபாடு, கணவர் எம். நடராஜனின் நினைவு நாள் என பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, மூன்று நாள்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். கடந்த இரண்டு நாட்களும் தஞ்சையை சுற்றியுள்ள கோயில்களில் அவர் தரிசனம் செய்தார். இன்று காலை தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் சென்ற அவர், புகழ்பெற்ற அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், சசிகலா தரிசனம் செய்தார்.


முன்னதாக, சசிகலாவுக்கு, ரெங்கா-ரெங்கா கோபுரம் அருகே ஆதரவாளர்களும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்பளிப்பாக வழங்கிய பேட்டரி கார் மூலம் கருட மண்டபம் சென்று கருடாழ்வரை தரிசனம் செய்தார். இதனையடுத்து கருவறைக்குச் சென்று மூலவர் அரங்கநாதரை தரிசனம் செய்தார். தாயார், ராமானுஜர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் கோயிலில் எவ்வாறு தரிசனம் செய்வாரோ, அதில் சிறிதும் பிசகாமல், அதே மாதிரியே சசிகலாவும் தரிசனம் செய்தார். கொடை வள்ளலாக மாறி காணிக்கையாக கரன்ஸி நோட்டுகளை வாரி வழங்கியபோது பட்டர்கள் எல்லாம் திகைத்தே போனார்களாம்…

சசிகலா வருகையால் கோயில் வளாகத்திலும், ஸ்ரீரங்கத்திலும் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.