அரசுப் பணத்தில் நான் ஹெலிகாப்டரில் செல்லவில்லை, என்னுடைய சொந்த பணத்தில் செல்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகருக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டது அரசியல் காரணத்திற்காகதான்.
ஹெலிகாப்டரில் நான் செல்வதை விமர்சனம் செய்கிறார்கள். பேருந்தில் சென்று கொண்டிருந்த என்னை ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வைத்ததே மக்கள்தான். அவர்களை விரைவாக சந்திக்கவே நான் ஹெலிகாப்டரில் செல்கிறேன். இதற்காக எனது சொந்தப் பணத்தை நான் செலவு செய்கிறேன். அரசுப் பணத்தில் செல்லவில்லை.
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில் நிறைய சிக்கலை உருவாக்குகிறார்கள். எளிதாக காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைப்பதில்லை. கல்லூரி மாணவர்களுடன் நான் பேசிவிடக்கூடாது என்பதற்காகவே மறைமுகமாக கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு செய்தி அனுப்புகிறார்கள்.
இதுபோன்ற இடையூறுகள் எனக்கு 2, 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை என்ற எங்கள் திட்டத்தை, அனைத்துக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் தெரிவித்திருந்தார். எப்போதுமே மற்றவர்களுக்கு நாங்கள் முன்னுதாரணமாகத் திகழ எங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.