சென்னையில் இருந்து நேற்று தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்ற வி.கே.சசிகலா, அவரது கணவர் மறைந்த நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமத்தில் இன்று சென்றார். அங்குள்ள அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான குலதெய்வம் வீரனார் கோயிலில் நடராசானின் தம்பி பழனிவேலின் பேரக்குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணிவிழாவில் கலந்துகொண்டார் . அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
மார்ச் 20 ஆம் தேதி நடராஜன் நினைவுத்தினம். இதனையொட்டி நாளை நடைபெறும் படையல் மற்றும் விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு எதிராக நடராசனின் சமாதிக்கும் சென்று சசிகலா அஞ்சலி செலுத்துகிறார். தஞ்சாவூரில் உள்ள அருளானந்த நகரில் உள்ள பங்களாவில் தங்கியிருக்கிறார். நாளை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் சென்னைக்கு திரும்புவார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று நாள் பயணமாக தஞ்சை வந்துள்ள சசிகலா, அதிமுக பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறாரா என்றும் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உளவுத்துறையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.