தமிழக காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று புகழப்படுபவர் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை. சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டு தள்ளிய குழுவில் முக்கிய பங்காற்றியதற்காக, இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இவர் ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத் துறையில் பணியாற்றி வந்தார். மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள், தேர்தலை காரணம் காட்டி மாற்றப்பட்டனர். அந்த அடிப்படையில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை காவலர் நலப்பிரிவு கூடுதல் துணை ஆணையராக, வெள்ளத்துறை 2019 ல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கிருந்து கடந்த ஆண்டு நெல்லை மாநகர காவல் துறை கூடுதல் துணை ஆணையர் பணியிடத்திற்கு வெள்ளதுரை மாற்றப்பட்டார். தற்போது அங்கு பணியாற்றி வந்த வெள்ளத்துரை, மீண்டும் இடம் மாற்றம் செய்யப்பட்டு, சென்னை தலைமை அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றமும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தான் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணமே வேறு..
அவரின் மனைவிணி ரஞ்சிதம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மனைவி தேர்தலில் போட்டியிடும் தொகுதிக்குட்பட்ட மாவட்ட எல்லைக்குள் கணவர், காவல் துறை அதிகாரியாக பணியாற்றுவது, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில், வெள்ளத்துரை, சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.