Sun. May 5th, 2024
அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறி வைத்துள்ளவர், கோவை மாவட்டததைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைதான். உள்ளாட்சித் துறை அமைச்சரான எஸ்.பி.வேலுமணி, கடந்த இரண்டு முறை தெண்டாமுத்தூர் தெகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர். தற்போது மூன்றாவது முறையாகவும் தேர்தல் களத்தில் களமாடி வருகிறார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், எடப்பாடி பழனிசாமிக்கு 
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக செயல்பட்டு வரும் எஸ்.பி.வேலுமணி, இந்த தேர்தலில் வெற்றிப் பெற்று விடக் கூடாது என்று கோவை மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகளுக்கு கட்டளையே பிறப்பித்திருக்கிறார், அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். வேலுமணியா...திமுக.வா ஒரு கை பார்த்துவிடலாம் என்று சவால் விடும் அளவுக்கு இறங்கியதால்தான், அவரை இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக்கிய தொண்டாமுத்தூரை குறித்து உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரைய மேற்கொண்டு எஸ்.பி.வேலுமணியை வறுத்தெடுத்தார் மு.க.ஸ்டாலின் என்பதை நினைவுக்கூர்ந்து பேசுகிறார்கள் கோவை திமுக நிர்வாகிகள். 
 கொங்கு மண்டலத்தில் உள்ள மற்ற அமைச்சர்களான கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கருப்பண்ணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரை வீழ்த்துவதற்கு கூட தனித்த வியூகம் வகுக்காத மு.க.ஸ்டாலின், எஸ்.பி.வேலுமணியை வீழ்த்த தனித்த அக்கறை எடுத்து கொண்டுள்ளதாக கோவை மாவட்ட திமுக.வினர் தகவல் தெரிவிக்கின்றனர். அந்த வகையில்தான், கோவையைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நிறுத்தினால் விலை போய்விடுவார்கள் என்பதால்தான், பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து திமுக பாரம்பரியத்திலேயே தொடர்ந்து நீடித்து வரும், கொங்கு மண்டலத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பிரபலமான கார்த்திகேய சிவசேனாபதியை, கொம்பு சீவி, வேலுமணிக்கு எதிராக நிறுத்தியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

தொண்டாமுத்தூரில் இந்த முறை பெறும் வெற்றிதான் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்பதால், ஒரு வாக்கின் அதிகபட்ச விலை எத்தனை ஆயிரம் ரூபாய் என்று கேட்டு வாக்காளர்களையே விலைபேசிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அவருக்கு ஈடுகொடுத்து, கார்த்திகேய சிவசேனாபதி தேர்தல் செலவு செய்வாரா என்று கோவை திமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வந்தனர். நல்ல பெயர், சுற்றுச்சூழல் ஆர்வலர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர் என்ற அடையாளங்களுடன் அநீதிக்கு எதிராக பொங்குபவர், நேர்மையாளர் என்ற நற்குணங்களை எல்லாம் நம்பி, தொண்டாமுத்தூர் வாக்காளர்கள், திமுக.வுக்கு வாக்களித்துவிடுவார்களா என்பதுதான் தொண்டாமுத்தூர் திமுக முன்னணி நிர்வாகிகளின் கவலையாக இருந்து வந்தது. 

அவர்களின் கவலையை எல்லாம் அடித்து தூள், தூளாக்கும் வகையில், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பணியாற்றக் கூடிய திமுக நிர்வாகிகளுக்கு முதற்கட்டமாக உற்சாக பூஸ்ட்டை சில நாள்களுக்கு முன்பு வாரி இறைத்து, ஒட்டுமொத்த திமுக.வினரையும் திக்கு முக்காட வைத்துவிட்டாராம் கார்த்திகேய சிவசேனாபதி. கஞ்சத்தனம் பார்க்காமல் கொடை வள்ளல் போல விஸ்வரூபம் எடுத்த கார்த்திகேய சிவசேனாபதியை கண்டு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விசுவாசிகளே அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். 
ஓராண்டுக்கு மேலாக, தொகுதி முழுவதும் சுற்றி வந்து ஒவ்வொரு வாக்காளர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு பழகி வைத்திருக்கிற அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூட, தேர்தல் செலவு என்று வாக்குச்சாவடி அதிமுக நிர்வாகிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யவில்லை. இந்த விஷயத்தில் திமுக வேட்பாளர் சிவசேனாபதி முந்திக் கொண்டாரே என்று முணுமுணுக்கிறார்கள் அந்த தொகுதி அதிமுக நிர்வாகிகள்.இருந்தாலும் அமைச்சரை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்கள், அவரின் விசுவாசிகள். 
மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து கார்த்திகேய சிவசேனாபதி காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு எல்லாம் கலங்கிப் போகிறவர் எஸ்.பி.வேலுமணி கிடையாது. கடந்த ஆண்டு கொரோனோ பரவிய ஏப்ரல் மாதத்தில் இருந்தே, தொண்டாமுத்தூர் தொகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்.
கொரோனோ உதவி என தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும், குறிப்பாக கட்சி வித்தியாசம் பார்க்காமல், அனைத்து வீடுகளுக்கும் உணவுப் பொருள்களை மாதம் தவறாமல் கிடைக்கச் செய்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதுபோல, கொரோனோ தடுப்பு மருந்து என சிறப்பு தொகுப்புகளை, கோடி ரூபாய்களை கொட்டி வாங்கி, தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் வழங்கியிருக்கிறார். மேலும், தீபாவளி பரிசு, பொங்கல் தொகுப்பு என தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கடந்த 12 மாதங்களில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார் எஸ்.பி.வேலுமணி. தொகுதி மக்களிடம் இப்போது இருக்கிற கேள்வியே, ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பாரா, பத்தாயிரம் ரூபாய் கொடுப்பாரா என்றுதான் வாக்காளர்கள் கேட்கிறார்கள். 
கடந்த மாதம் கோயம்புத்தூரில் 100க்கும் மேற்பட்ட இணைகளுக்கு திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தங்கத்திலான தாலி உள்ளிட்ட செலவுகளுக்கு பல ஆயிரங்களும், சீர்வரிசைகளோடு கணக்கிட்டால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார். சும்மாவே இவ்வளவு செலவு செய்கிற அமைச்சர், தேர்தல் திருவிழாவில் வெற்றி மாலை தன் கழுத்தில் விழுவதற்கு, எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்க தயங்க மாட்டார். 

அமைச்சரைப் போல அல்லது அவருக்கு ஈடுகொடுத்து வாக்காளர்களுக்கு கார்த்திகேய சிவசேனாபதி பணம் கொடுக்க வேண்டும் என்றால் அண்ணா அறிவாலய கஜானாவைதான் காலி செய்ய வேண்டும். அதனால், தேர்தல் ரேஸில் முயல் முந்தி போகிற மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார் திமுக வேட்பாளர். ஆனால், மே 2 ஆம் தேதி ஆமைதான் வெற்றிப் பெற்றதாக அறிவிப்பு வெளியாகும்.இதில் எந்த மாற்றமும் இருக்காது என்று கொக்கரிக்கிறார்கள், அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள். 

பழங்கதை பேசி உதார் விடாதீங்க...காங்கேயம் காளை முட்டி தூக்கி எறிந்துவிடப் போகிறது...