பொதுமக்கள் அனைவரும் அலட்சியம் காட்டாமல் கொரோனோ தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும் ஒவ்வொரு இடங்களிலும், தவறாமல், பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளை முதல்வர் முன் வைத்தார். கண்ணுக்கு தெரியாத கொரோனோ வைரஸ் கிருமியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள, அனைவரும் குடும்பத்தோடு தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும்.
இந்த தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் கொரோனோவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, ஒவ்வொரு வரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நான் தடுப்பூசி போட்டிருக்கிறேன். எங்கள் குடும்பத்தினர் போட்டு இருக்கிறார்கள். உங்கள் தொகுதி அமைச்சர் போட்டி இருக்கிறார். உங்கள் ஊர் எம்.எல்.ஏ., போட்டிருக்கிறார். எனவே, தவறாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பட்டுக்கோட்டையில் அதிமுக.வுக்கு ஆதரவு திரட்டியபோது, அந்த பகுதியில் உள்ள தர்காவில் தொழுகை தொடங்கியது. அதனை அறிந்து முதல்வர் தனது பேச்சை நிறுத்தி, தொழுகை முடிந்த பிறகு தனது உரையை தொடர்ந்தார்.
அதிமுக அரசு என்ன செய்தது என தொடர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டே இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரியை நானே நேரில் வந்து திறந்து வைத்தேன். யாரும் மறைக்க முடியாது. தொடர்ந்து, அரசு பல் மருத்துவக் கல்லூரி, கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் புதுக்கோட்டை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மக்களின் 100 ஆண்டுகால கனவுத் திட்டமான காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் 14,400 கோடி ரூபாயில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்படி கடந்த நான்காண்டுகிளல் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை என மு.க.ஸ்டாலின் பச்சைப் பொய் கூறி வருகிறார்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.