Sun. Nov 24th, 2024

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 7) ஆம் தேதி நடைபெற்ற திமுக.வின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம், திமுக.வின் அடிமட்ட தொண்டர்களிடம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற இந்தக் கூட்டம், திருவிழாவைப் போல களைகட்டியதையடுத்து, கூடி கலைந்த திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்தோடு அவரவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

திருச்சியில் பீறீட்ட உற்சாகம், ஏப்ரல் 6 ம் தேதி வரை அப்படியே இருக்கும். தேர்தல் களப் பணிகளில், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆளும்கட்சிக்கு கடும் போட்டியை கொடுப்பார்கள் என்று உற்சாகமான அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், திருச்சி பொதுக் கூட்டத்திற்கு மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையேயும் சிறப்பாக ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை மனதார பாராட்டியதுடன், தொண்டர்களிடம் காணப்பட்ட எழுச்சியை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டு சென்னை திரும்பியுள்ளனர்.

தொண்டர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், வரும் 10 ஆம் தேதி திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறார், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். அதை எதிர்நோக்கி ஆவலுடன் மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்கள் காத்திருக்க, மு.க.ஸ்டாலின் குடும்பத்தில்தான் ஒருவிதமான குழப்ப நிலை நிலவிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் மூத்த திமுக நிர்வாகிகள். அவர்களை அடையாளம் கண்டு பேசினோம். குழப்பத்தின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவர்கள் அவிழ்க்க, நமக்கு வியர்த்துக் கொட்டியது.

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தை கைவிடுமாறு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக தலைவரும், அவரது தந்தையுமான மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டிருப்பதாக ஒரு தகவல், இளைஞரணி முன்னணி நிர்வாகிகளிடம் அனலடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6 ஆம் தேதி திமுக நேர்காணலை நிறைவு செய்வதற்கு முன்பாக, விருப்ப மனு அளித்த திமுக நிர்வாகிகளைப் போல உதயநிதி ஸ்டாலினும் நேர்காணலில் கலந்துகொண்டார்.

அப்போது, பொதுச் செயலாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலினை உற்சாகப்படுத்தும் வகையில் சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்க, மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நிச்சயம் போட்டியிட்டுதான் ஆக வேண்டுமா ?இந்த முறை போட்டியில் இருந்து விலகிக் கொண்டு, அடுத்த தேர்தலை எதிர்கொள்ளக் கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைவர் மு.க.ஸ்டாலினின், அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, உதயநிதி மட்டுமின்றி, நேர்காணலின்போது உடனிருந்த முன்னணி தலைவர்கள் டி.ஆர்.பாலு, சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டவர்களும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். தன்னுடைய தந்தையிடம் இருந்து இப்படிபட்ட கேள்விகள் வரும் என்பதை சற்றும் எதிர்பாராத உதயநிதி, அதிர்ச்சியடைந்தபோதும் அடுத்த நிமிடங்களிலேயே சுதாரித்துக் கொண்டு திமுக தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு கட்டுப்படுகிறேன் என்று சுரத்தில்லாமல் கூறிவிட்டு, விடை பெற்றிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி இடையே நேர்காணலின் போது நடைபெற்ற இந்த வசனங்கள், அவர்களது குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிடுவதில், தனது கணவருக்கே விருப்பம் இல்லை என்பதை கேள்விப்பட்டு, துர்கா ஸ்டாலினும் கலக்கமடைந்திருக்கிறார். அவரின் இறுக்கத்தால் ஆழ்வார்ப்பேட்டை இல்லம் சனிக்கிழமையன்று (மார்ச் 6) வழக்கத்திற்கு மாறான அமைதியில் மூழ்கியது.

அங்கு நிலவிய ஒருவிதமான இறுக்கத்தை உடைத்தவர்கள் காங்கிரஸ் தலைவர்கள். தொகுதி பங்கீடு விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர், மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் நள்ளிரவு சந்தித்துப் பேசினார்கள். இந்த விவகாரத்தால், அன்றிரவு உதயநிதி விவகாரம் பற்றி விவாதிக்க குடும்ப உறுப்பினர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

மறுநாள் காலை காங்கிரஸோடு தொகுதி பங்கீட்டை முடித்த கையோடு, மு.க.ஸ்டாலின், திருச்சி திமுக பொதுக் கூட்டத்திற்கு கிளம்பிச் சென்றார். அதனால், உதயநிதி விவகாரத்தை, அப்படியே ஆறப் போட்டார்கள். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திமுக பொதுக்கூட்டத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்க, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் விவகாரத்தில் உதயநிதிக்கு வரும் தடைகள் எல்லாம் நீங்கி, அவர் அமோக வெற்றிப் பெற வேண்டும் என்ற வேண்டுதலோடு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மனமுருக வேண்டியுள்ளார், துர்கா ஸ்டாலின்.

உதயநிதி விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எப்படியாவது சமாதானப்படுத்தி, சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிடும் வகையில் ஸ்டாலினிடம் அவரது குடும்பத்தினர் இன்று எப்படியும் சம்மதம் பெற்றிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார், அந்த திமுக முன்னணி நிர்வாகி.

உதயநிதிக்கு முட்டுக்கடை போடுவது ஏன்? என்று நமது சந்தேகத்தை முன்வைத்தோம். சில நிமிடங்கள் மௌனமாக இருந்த அந்த நிர்வாகி மீண்டும் பேசினார்.

இந்த சட்டமன்றத் தேர்தல், திமுக.வுக்கு வாழ்வா, சாவா போராட்டமாக உள்ளது. பொதுமக்களிடம் காணப்படும் எழுச்சியால் பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியைப் பிடித்துவிடும் என்று ஆளும்கட்சி பயப்படுகிறது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக பயம் வந்துவிட்டது. அதனால்தான், திமுக.வை குறி வைத்து ஒரே குற்றச்சாட்டை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரின் அந்த குற்றச்சாட்டு ஏற்கெனவே மக்களிடம் விவாதப் பொருளாக இருக்க கூடிய ஒன்றுதான்.

திமுக குடும்பக் கட்சி. கலைஞர் கருணாநிதிக்குப் பின்பு மு.க.ஸ்டாலின்.அவருக்குப் பின்பு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என்று வாரிசு அரசியலை மையப் பொருளாக வைத்தும், திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும் கூறியே பொதுமக்களிடம் திமுக.வுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி. அந்த குற்றச்சாட்டை உடைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் விரும்புகிறார்.

உதயநிதியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி 2019ல் அதிமுக கேள்வி எழுப்பியபோது, 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுக பிரச்சாரத்திற்கு வலு சேர்க்க உதயநிதியின் சுற்றுப்பயணம் பயன் அளிக்கும் என்று கூறி சமாளிக்க வேண்டியிருந்தது. அதன் பின்புதான் இளைஞரணி செயலாளர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது. அப்போதும் எதிர்க்கட்சிகள் முணுமுணுத்தன. இப்போது, சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதையும் திமுக.வுக்கு எதிரான பிரசாரமாக கையில் எடுப்பார் முதல்வர் பழனிசாமி.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை, தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலினுக்கு ஏற்படும். அதைவிட, 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து உதயநிதி தீவிர பிரசாரம் மேற்கொண்டால் திமுக வெற்றி எளிதாகும் என நினைக்கிறார் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சியை பிடிப்பது உறுதி என்ற நிலையில், பொறுத்திருந்து பதவியை ஏற்றுக் கொள்ளாலாமே என்பதுதான் தலைவர் மு.க.ஸ்டாலின் சிந்தனையாக இருக்கிறது. அவருக்கு ஏற்படும் தர்மசங்கடத்தை புரிந்து கொண்டு உதயநிதி , தனது விருப்பத்தை தியாகம் செய்வாரா? அல்லது இளைஞரணி நிர்வாகிகளின் வலியுறுத்தல் மற்றும் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி போன்றோரின் சமாதானத்தை ஏற்று, சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிட மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கிவிடுவாரா? என்பதெல்லாம் இன்று இரவுக்குள் தெரிந்துவிடும் என்றார் அந்த திமுக நிர்வாகி..

தந்தை சொல் தட்டாத தனையன் என்ற புகழ் மாலையை சூடிக் கொள்வாரா? உதயநிதி ஸ்டாலின். மார்ச் 10 ல் பதில் கிடைத்துவிடும்…