திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. மூன்று கட்டங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும், காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இந்த நிமிடம வரை முடிவாகவில்லை. மேலிட தலைவர்கள், கேரள முன்னாள் முதல்வர் என விவிஐபி.க்கள் வந்து திமுக தலைமையுடன் பேசியும் 18 தொகுதிக்கு மேல் ஒதுக்க திமுக முன்வரவில்லை என்பது காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு குறைவான எண்ணிக்கையிலேயே தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ள நிலையில், அதை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி, நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த கூட்டத்தில், தொகுதி பங்கீடு விவகாரத்தில் தொடக்கம் முதலே திமுக தேர்தல் குழு, நடந்து கொண்ட விதம் குறித்து விவரித்தபோது, தன்னையறியாமலும் கண்ணீர் சிந்தினர் கே.எஸ்.அழகிரி.
இதுவரைக்கும் இருந்த காங்கிரஸ் தலைவர்களிலேயே மிகவும் மென்மையானவர் அவர். அவரது மனமே கலங்கும்படி வைத்துவிட்டார்களே திமுக தேர்தல் குழுவினர் என்று கவலையில் ஆழ்ந்தனர் தமிழக காங்கிரஸ் முன்னோடிகள்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்றாலே திமுக.வில் துரைமுருகனுக்கு எப்போதுமே கொண்டாட்டம்தான். கெத்தாக வரும் கூட்டணி கட்சியினருடனான முதல் சந்திப்பிலேயே பீஸ்ஸை கழற்றி விட்டுடுவார் துரைமுருகன். சிறிய கட்சிகளுக்கு மட்டுமல்ல, தேசிய கட்சிகளுக்கும் இதே நிலைதான். அவரின் நையாண்டி பேச்சை கேட்டால், மானமுள்ள மனிதன் அண்ணா அறிவாலயத்திலேயே தூக்கு மாட்டி செத்திடுவான். ஆனால், அரசியலை பிழைப்பாக கொண்டோருக்கு அறம் கூற்றாகது என்ற கணக்கில், துரைமுருகனின் கிண்டலையெல்லாம் தாங்கிக் கொண்டு பல சுற்றுகளாக கெஞ்சி, கூத்தாடி தங்கள் எதிர்பார்பபை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
காங்கிரஸைப் பொறுத்தவரை, கடந்த தேர்தல்களின் போதும் இதே அனுபவத்தை பெற்றிருந்த போதும், தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறக கே.எஸ்.அழகிரிக்கு வந்த சோதனை இது. நாடாளுமன்றத் தேர்தலின்போது வழங்கப்பட்ட பத்து தொகுதிகளுக்கு தலா 3 தொகுதிகள் என்ற அடிப்படையிலும், கடந்த 2016 தேர்தலின போது ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையிலும் பரிசீலித்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், காங்கிரஸை கூட்டணியில் இருந்தே கழற்றி விடுங்கள் என டெல்லி பாஜக மேலிடம் தொடர்ந்து மறைமுகமாக வற்புறுத்தி வரும் நிலையில், பெரிய மனதுடன் கூட்டணியில் இருந்து கழற்றி விடாமல், தொகுதிகளை மட்டும் பாதியளவுக்கு குறைந்து வழங்கும் திட்டத்தில் திமுக தலைமை தீர்மானமாக இருப்பதாக அண்ணா அறிவாலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் தலா 2 தொகுதிகள் என 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று திமுக கறார் காட்டுகிறது. இந்த நேரத்தில்தான் தேர்தல் வல்லுநர் பிரசாத் கிஷோர் வகுத்து தந்த வியூகத்தை செயல்படுத்த திமுக முனைகிறதா என்று சந்தேகத்தை கிளப்புகிறார்கள், தமிழக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அதனால், திமுக தனித்துப் போட்டியிட்டால்கூட, பெரும்பான்மையான இடங்களில் நின்று வெற்றிப் பெற்றுவிடலாம் என்ற செயல்திட்டததை கையில் எடுத்து, கூட்டணி கட்சிகளை குறைவான இடங்களில் போட்டியிட திமுக வற்புறுத்தி வருகிறதா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தொகுதி பங்கீடு விவகாரத்தில், பழைய பகையை தீர்த்துக் கொள்ளவும் திமுக முனைகிறதோ என்ற சந்தேகமும் காங்கிரஸ் தலைவர்கள் மனதில் எழுந்திருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தமிழகத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது, திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்த கலைஞர் டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்
ஒருபக்கம் சோதனை நடந்து கொண்டிருந்த போது, தரை தளத்தில் திமுக.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்ததை நடத்தி 63 தொகுதிகளை மிரட்டி பெற்றதாக, திமுக முன்னணி தலைவர்கள் இப்போதும் குமறுவது உண்டு.
அன்றைய தினம் மறைந்த தலைவர் கலைஞர் மு. கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் காங்கிரஸ் தலைவர்கள் காயப்படுத்தியதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியதை விடவா, தற்போது காங்கிரஸ் தலைவர்களை துரைமுருகன் நோகடித்து விட்டார். எப்போதுமே அவர் இப்படிதான் கிண்டலடித்து வருகிறார். அதுவும் இந்த முறை அப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்று அவருக்கு வாய்ப்பூட்டு வேற மு.க.ஸ்டாலின் போட்டியிருப்பதாக தகவல் வெளியானது. துரைமுருகன் யார் சொன்னாலும், தனது கிண்டல் பேச்சை மாற்றிக் கொள்ள மாட்டார். அது அவரின் பிறவிக் கும் என்கிறார்கள் திமுக.வின் இரண்டாம் தலைவர்கள்.
இப்படி இரண்டு கட்சியினரும் மாறி மாறி குறைகளை கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு உள்ள பலம், பலவீனம் என்ற அடிப்படையில் மட்டுமே தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தை நடைபெறாமல், அவரவர் மனதில் உள்ள வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பாகவும் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்கிறார்கள், மூத்த ஊடகவியலாளர்கள்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்தியாவிலேயே முதல்முறையாக ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று பிரகடனப்படுத்தியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றும் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தியை வைத்துக் கொண்டே பிரதமர் மோடியை சேடிஸிட் என்று கடுமையாக விமர்சனம் செய்தவர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை நினைவுக்கூறும் திமுக இரண்டாம் கட்ட தலைவர், ராகுல்காந்தி, தமிழகத்திற்கு இரண்டு முறை பிரசாரத்திற்கு வந்த போதும், திமுக.வுக்கு வாக்களியுங்கள்., முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க ஆதரவு தாருங்கள் என்று ராகுல்காந்தி பேசாதது, தங்களுக்கு வருத்தத்தை தந்துள்ளதாக கூறுகிறார்கள், திமுக.வின் முன்னணி தலைவர்களை சிலர்.
திமுக.வோடு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் நடிகர் கமல்ஹாசனுடனும் நட்போடு இருக்கிறார்கள் என்பதுதான் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைத்து 100 தொகுதிகளில் போட்டியிட்டாலும் கூட காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெற முடியாது. ஆனால், திமுக கூட்டணியில், ஒதுக்கப்படுகிற தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதை மறந்துவிடக் கூடாது என்கிறார்கள் திமுக அறிவு ஜீவிகள்.
காங்கிரஸுக்கு எதிராக திமுக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொல்லி வரும் இந்த நேரத்திலும்கூட, அந்த கூட்டணியிலேயே தொடர்வதைதான் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பான்மையானோர் விரும்புகின்றனர் என்கிறார்கள் மாவட்ட தலைவர்கள். அழகிரி என்ற பெயரே ஸ்டாலினுக்கு ஆகாது போல. அதனால்தான், மிகுந்த பணிவோடு அண்ணா அறிவாலயத்திற்கு கே.எஸ்..அழகிரி தலைமையிலான குழுவினர் சென்ற போதும் சுமூகமாக தொகுதி பங்கீட்டை முடிக்காமல், அழகிரியை அலைகழித்து, அழ வைக்கும் அளவிற்கு கொண்டு வந்துவிட்டது திமுக தேர்தல் குழு என்பதும் அவர்களின் வேதனை..
இப்படி திமுக.வும் காங்கிரஸும் மாறிமாறி பரஸ்பரம் புகார் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு 20 தொகுதிகளும், கன்னியாகுமரி எம்.பி. தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து, திமுக கூட்டணியில் இன்று காங்கிரஸுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிடும். 20 ல் இருந்து 25 தொகுதிக்குள் ஒதுக்கியும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் காங்கிரஸுக்கு வழங்கி தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக கையெழுத்திட்டு விடும் என்கிறார்கள், திமுக தேர்தல் குழுவோடு உறவாடும் திமுக முன்னோடிகள்.
குறைந்த தொகுதிகளை பெற்றுக் கொண்ட விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியதைப்போல, மதவாத பாஜக தமிழகத்தில் காலூன்றி விடக் கூடாது என்பதால், திமுக கூட்டணியை வலுப்படுத்துவதே பிரதான நோக்கமாக இருக்கிறது என்ற வசனத்தை தமிழக காங்கிரஸும் இன்றைக்கு உதிர்க்கும என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்களின் மனநிலையை அறிந்து வைத்திருக்கும் தமிழக அரசியல் கள ஆய்வாளர்கள்.
சீக்கிரம் பேசி முடிங்கப்பா….தாங்கல….