சிறப்புச் செய்தியாளர்…… புகைப்படங்கள் கவிமுகிலன்…
சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 தொகுதிகளுக்குதிமுக.வில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த திமுக மாவட்ட பிரமுகர்கள், காலை முதலே திமுக தலைமைக் கழகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் குழுமினர். காலையில், ஆத்தூர், கெங்கவள்ளி, வீரபாண்டி, ஏற்காடு ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு செய்திருந்த திமுக பிரபலங்களிடம் நேர்காணல் நடைபெற்றது. நான்கு தொகுதிகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தலா 20 க்கும் மேற்பட்டோர் என்ற வகையில், 100 பேர் குழுமினர்.
தொகுதி வாரியாக விருப்ப மனு வழங்கியர்களை ஒட்டுமொத்தமாக அழைத்து, நச் என்று மூன்று கேள்விகளைக் கேட்டார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கட்சியில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறீர்கள், எவ்வளவு தொகை செலவழிப்பீர், கட்சி போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறீர்களா… ஒரு சில நிமிடங்களில் முடிந்தது நேர்காணல் வைபவம். சொந்த ஊரில் எதிரும் புதிருமாக இருக்கும் பிரபலங்கள் கூட, பள்ளி மாணவர்கள் போல வரிசையாக ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தது, கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
ஏற்காட்டில் திடீர் பிரபலமான கல்பனா, (திமுக கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட உள்ளாட்சித்துறை பணியாளர் அவர். கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்) இளங்கலை வேளாண் பட்டதாரிகு.திலகவதி, பாப்பாத்தி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆடவர் வரிசையில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்வெ.மாறன், தீ.சிவராமன், ரேவதி மாதேஸ்வரன் என பட்டியல் மிக, மிக நீளமானது.
ஓமலூர் தொகுதிக்கு, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அம்மாசி, பாமக.வில் இருந்து திமுக.வுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு, மாணவரணி அமைப்பாளர் அருண் பிரசன்னா, கன்னங்குறிச்சி பேரூராட்சித் தலைவர் குபேந்திரன், நமது தளபதி நற்பணி மன்றம் சேலம் மாவட்டம் ஓமலூர் மகேந்திரன் என இந்த தொகுதிக்கும் பட்டியல் நீளமானதுதான்.
இதையெல்லாம் விட களை கட்டியது, வீரபாண்டி தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள்தான், மீடியாவின் வெளிச்சத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். சேலத்து சிங்கம் என்று அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகள், நான்கு ஐந்து பேர் மல்லுகட்டினார்கள். அவரின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ராஜா, மற்றொரு மகன் டாக்டர் பிரபு, ஆறுமுகத்தின் புதல்வி மலர்விழி ( பூலாவரி ஊராட்சி கவுன்சிலர்) முன்னாள் அமைச்சரின் உதவியாளர் சேகரின் மனைவி வெண்ணிலா (வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர்), பாரப்பட்டி சுரேஷ்( இவரது பெயருக்கு சேலம் மாவட்டத்தை தாண்டியும் மாநிலம் முழுவதும் புகழ் உண்டு) ஆகியோரே ஸ்டார் பிரமுகர்களாக காட்சியளித்தனர்.
சேலம் மேற்கு தொகுதிக்கு சர்க்கரை சரவணன், கு.சி.தாமரைக்கண்ணன், எல்ஆர்என் உமாராணி, வீரபாண்டியாரின் மூத்த மகன் மறைந்த ஆ.நெடுஞ்செழியனின் மருமகன் டாக்டர் தருண் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
சர்க்கரை சரவணன் (நேர்காணலின்போது சர்க்கரை என்று அடைமொழி சூடிக்கொண்டதன் பின்னணி என்ன என்று திமுக தலைவர் விசாரித்துள்ளார்)
சங்ககிரி தொகுதிக்கு தலைமை பொதுக்குழு உறுப்பினர் நிர்மலா, மகுடஞ்சாவடி ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, சங்ககிரி பொறுப்பாளர் ராஜேஷ் உள்பட 32 பேர் மல்லுகட்டுகின்றனர்.
இவர்கள் தவிர, சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மாநகர மாவட்டச் செயலாளருமான வழக்கறிஞர் ராஜேந்திரன், மீண்டும் தனது சொந்த தொகுதியான சேலம் வடக்கில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
விருப்ப மனு வழங்கியுள்ளவர்களிடம் நேர்காணல் செய்தபோது, அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய மாவட்டச் செயலாளர்கள் என்ற வகையில், முன்னாள் அமைச்சர் டிஎம்எஸ். செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
11 தொகுதிகளுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்த பிரபலங்களின் பெயர்களும், புகைப்படங்களும் பதிவு செய்ய வேண்டும் என்றால் இடம் பத்தாது என்பதாலும், நேரம் குறைவாக இருப்பதாலும் இத்தோடு நிறைவு செய்கிறோம். யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், அவர் வெற்றி பெற நல்லரசு தமிழ் செய்திகள், தனது வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறது.