Sun. Nov 24th, 2024

அரசியல் சாணக்கியத்தனத்தில், குறுகிய காலத்தில் டாக்டரேட் பட்டம் யாருக்கு கொடுக்கலாம் என்றால், இன்றைய காலத்தில், சாட்சாத், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குதான் அந்த பாக்கியம் கிடைக்கும்.. திருவிளையாடல் திரைப்படத்தில், ஞானப்பழத்தை பெறுவதற்கு முருகன்,விநாயகர் ஆகிய இருவரிடையே போட்டி நடக்கும். அப்போது, முருகன் மயிலேறி உலகத்தைச் சுற்றி வர புறப்பட்டுவிடுவார். விநாயகரோ, தாய், தந்தையரைச் சுற்றி வந்தால் உலகத்தைச் சுற்றிவந்ததாக அர்த்தமாகிவிடும் என்று கூறி சிவனையும், பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுவிடுவார்கள்.

புராண கதையாக கூறப்பட்ட இந்த நிகழ்வு, இன்றைய நிகழ்கால அரசியலிலும் அப்படியே பொருந்திப் போகிறது. அரசுப் பணத்தில் கடந்த ஓராண்டாக மாநிலம் முழுவதும் சுற்றி வந்து, அதிமுக.வின் வாக்குவங்கியையும், தன்னுடைய இமேஜையும் பொதுமக்களிடம் அதிகரிக்கச் செய்துவிட்டார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. புராண கால விநாயகரைப் போல..

ஆனால், மயிலேறி உலகத்தைச் சுற்றிய கணக்காக, ஒன்றிணைவோம் வா, கிராம சபை கூட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என அடுத்தடுத்து சொந்தக் கட்சிகாரர்களான திமுக நிர்வாகிகளுக்கு இந்த நிமிடம் வரை லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு வைத்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் வியூகத்தை வடிவமைப்பதற்காக, பீகாரில் இருந்து தேர்தல் வல்லுனர் பிரகாஷ் கிஷோரை அழைத்து வந்து ஒரு வருடத்திற்கு மேலாக பல நூறு கோடிகளில் செலவு செய்துக் கொண்டிருக்கிறார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் எனும் அரசியல் பல்கலைக்கழகத்தில் அரைநூற்றாண்டுக்கு மேலாக உண்டு, உறைவிட மாணவனைப்போல அரசியல் பாடம் கற்றும் கூட, தேர்தல் யுத்தத்தில் திமுக தலைவரை மிஞ்சி, எடப்பாடி பழனிசாமியே முன்னிலையில் இருப்பதாக கூறுகிறார்கள், தேர்தல் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டுள்ள வல்லுனர்கள். அந்த வகையில், முருகனைப் போலதான் இருக்கிறது மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் என்கிறார்கள் அவர்கள்.

300 கோடி ரூபாய்க்கு மேல் பிரசாத் கிஷோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் அதகளப்படுத்துகின்றன. ஆனால், எடப்பாடியாரோ, உள்ளூரிலேயே சுனில் என்பவரை பிடித்து, சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதற்கு முன்பு இருந்த ஆகச் சிறந்த ஆளுமைகளான அரசியல் தலைவர்களையே மிஞ்சும் வகையில், சத்தமில்லாமல் தொலைக்காட்சி ஒன்றையே 3, 4 மாதத்திற்கு குத்தகை எடுத்துவிட்டார் எடப்பாடியார் என்று கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்கள், அதிமுக முன்னணி தலைவர்கள்.

அதிமுக.வின் தேர்தல் பிரசாரத்திற்காக, அரசு செலவில் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ஃபேஸ் புக், வாட்ஸ் அப், யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் முதல்வர் எடப்பாடியாரின் வெற்றி நடை போடும் தமிழகம் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. இந்த ஊடக விளம்பரம் போதாது என்று, சென்னை அண்ணா சாலையில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பாரம்பரிய குடும்பத்துச் சகோதர்களுக்கு சொந்தமான டிவி.யை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து, அரசியலில் என்னை மிஞ்சிய ராஜதந்திரி யாரும் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த மூன்று மாதங்களும், இரண்டு எழுத்துக் கொண்ட அந்த டிவி ஆளும்கட்சியான அதிமுக.வின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதற்கு எவ்வளவு தொகை கட்டணமாக வேண்டும் என்று விலை பேசி, கோடிகளை அள்ளி கொடுத்திருக்கிறதாம் எடப்பாடியார் தரப்பு. இதை சத்தமில்லாமல் முடித்தவர், முன்னாள் ஜெயா டிவி விற்பனை மேலாளர் என்பதுதான் சூப்பர் டிவிஸ்ட். அவர் பெயர் முருக கடவுளோடு தொடர்படுத்திக் கொள்ளலாம்.

கடந்த 5,6 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜெயா டிவியில் பணியாற்றி வந்தவர், அவர். பொறியியல் பட்டதாரி. அங்கிருந்து விலகி, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து, அவரது இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஒருங்கிணைத்து நிர்வகித்து வந்தார். அதேநேரத்தில், நியூஸ் 7 தொலைக்காட்சி புதிதாக தொடங்கிய போது, அங்கும் உயர்ந்த பதவியில் அவர் அமர்ந்தார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து விலகியவர், தற்போது கொங்கு மண்டலத்தில் சில மாவட்டங்களுக்கு அதிமுக ஐ.டி.விங்கை நிர்வகிக்கும் பொறுப்பை கவனித்து வருகிறார்.

அண்ணா சாலையில் உள்ள அந்த டிவியின் நான்காவது மாடியில், அதிமுக வழங்கிய நிதியில் பிரம்மாண்டமான ஸ்டியோ, செய்திப் பிரிவு, அதிநவீன மின்சாதனங்கள், விலை உயர்ந்த் கேமிராக்கள் என ஹெச்.டி. வடிவிலான டிஜிட்டல் வடிவத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறதாம் அந்த பாரம்பரிய டி.வி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரங்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்வதற்காக, அதிநவீன வீடியோ கேமிராவை, அதன் பெயர் அடைப்புக்குறியில் உள்ளது சிங்கப்பூரில் (4K 3-CMOS 1/3″ Sensor XDCAM Camcorder) வரவழைக்க பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம். ஆனால், தேர்தல் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டதால், இந்த வகையிலான கேமிரா, சிங்கப்பூரில் இருந்து வரவழைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறுகிறார்கள்.

ஒரு அரசியல் கட்சி, தனது தேர்தல் வெற்றிக்காக, நாளிதழ், டி.வி.களில் விளம்பரம் கொடுப்பதைதான் இதுவரை தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசியல் வரலாற்றிலேயே, ஏன் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு தொலைக்காட்சியையே குத்தகைக்கு எடுக்கும் வித்தையை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் செய்துள்ளார் என்று விழிகள் விரிய வியந்து பேசுகிறார்கள், மூத்த அரசியல் ஊடவியலாளர்கள்.

அரசியல் கூட்டங்களோ, தேர்தல் பிரசார காலம் என்றாலோ களத்தில் உள்ள செய்தியாளர்கள்தான் குஷியாவார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ, ஊடகங்களின் முதலாளிகளையே கோடிக்கணக்கான ரூபாயை விளம்பரக் கட்டணமாக கொடுத்து மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கிறது.

கொரோனோ தொற்று பரவிய கடந்தாண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து தற்போது வரை, ஊடகப் பணியை இழந்த நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், இந்த தேர்தல் நேரத்திலும் 20,000 முதல் 50 ஆயிரம் வரை தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்காமல், ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் பெரும்பான்மையானோர், புதிதாக திருமணமானவர்கள். அவர்களின் நிலைதான் பரிதாபம். இப்படி பெரும்பான்மையான ஊடகவியலாளர்கள் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்க, அதிமுக ஐடி விங்க், திமுக ஐடி விங்க் என்று கூறிக் கொண்டு 30 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு ஜாலியாக இருக்கிறார்கள், ஊடகத்துறைக்கே துளியும் சம்பந்தம் இல்லாதவர்கள்.

25 ஆண்டு காலத்திற்கு மேலாக முன்னணி நிறுவனத்தில் பணியாற்றி வரும் திறமையான ஊடகவியலாளர் கூட, கடந்த ஓராண்டாகதான் 40 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் என்ற உயர்வு நிலைக்கு வந்திருக்கிறார். ஆனால், அதிமுக.வுக்கும் திமுக.வுக்கும் சமூக ஊடகங்களில் புரமோஷன் செய்கிறோம் என ஓராண்டுக்கு மேலாக லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிறார்கள் நூற்றுக்கணக்கானோர்.

அதைவிட கொடுமையாக, ஊடகங்களை திமுக, அதிமுக கட்சிக்கு ஆதரவாக திருப்பி விடுவதற்காக, தலைவர்களின் வாரிசுகளுக்கு பிஆர்ஓ வாக மாறிய அனுபவமிக்க மூத்த ஊடகவியலாளர்கள் பலர், சில கோடிகளை லபக்காக அள்ளுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களும் அரசியல் சார்பற்ற சென்னை ஊடகவியலாளர்களின் காதுகளில் புகையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

காசேதான் கடவுளுப்பா…

காசு…. துட்டு…. பணம்…மணி…மணி…..