Sat. Nov 23rd, 2024

திமுக கூட்டணியில், இஸ்லாமிய கட்சிகளுக்கு அடுத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வது தொடர்பாக, திமுக தேர்தல் குழுவினருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. மூன்றாவது கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அக்கட்சிகு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கையெழுத்திட்டனர்.

திமுக தலைமை அலுவலகமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார், திருமாவளவன். அதன் விவரம் இதோ…

தமிழகத்தில் சாதி வெறியர்களும், மத வெறியர்களும் இடம் பெற்று விடக்கூடாது, சமூக நீதிக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எந்த நிபந்தனையும் இன்றி திமுக கூட்டணியில் கடந்த 5 ஆண்டுகளாக பயணித்து வருகிறோம்.

திமுக.வுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவில் விசிக.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதவாத சக்திகள் உள்ளே வருவதற்கு விசிக காரணமாக ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவை அறிவிக்கிறோம்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத சூழ்நிலையில் எப்படியாவது தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என பாஜக முயல்கிறது.

தமிழகத்தில் பாஜக, சங்க பரிவார அமைப்புகளால் காலூன்ற முடியாத நிலை உள்ளது. யுத்த களமாக சட்டப்பேரவை தேர்தல் களம் அமைய உள்ளது.

அதிமுகவையும் திமுகவையும் தமிழகத்தில் ஒழித்துவிட வேண்டும் என பாஜக செயல்படுகிறது.

மதசார்பற்ற கட்சிகளின் வாக்குகள் சிதறிப் போனால் அதன் மூலம் பயனடையப் போவது பாஜகதான் என்பதால், எதிரணி பிளவுப்பட வேண்டும் என்ற பாஜக.வின் சதித்திட்டங்களுக்கு விசிக ஒருபோதும் துணைபோகாது.

6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் விசிக போட்டியிடுகிறது.

இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார்.