Sat. Apr 19th, 2025

இளம்பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என்று பிறப்பித்திருக்கும் உத்தரவின் மூலம், தமிழக காவல்துறையின் மானம், சர்வதேச அளவில் கப்பலேறி நாறிவிட்டது விட்டது என்று மனம் நொந்து கொள்கிறார்கள், காவல்துறையில் உள்ள நேர்மையானஅதிகாரிகள். ஒருசிலமணிநேரங்களிலேயே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டிய விவகாரம், நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு காலம் காலமாக கரும்புள்ளியாக மாறிவிட்டதற்கு, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உளவுத்துறை அதிகாரிகளின் மெத்தனம்தான் காரணம் என்பதும் அவர்களுடையே குற்றச்சாட்டாகவே இருக்கிறது.

இதன் பின்னணியை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்…

பிப்ரவரி 21 ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். பின்னர், சென்னை திரும்பும்போது, தனது காரில் மாவட்ட எஸ்.பி. யாக பணியாற்றி வரும் இளம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை, அதிகார தோரணையை காட்டி, தனது காரில் அழைத்து வந்துள்ளார்.

கடந்த 22 ஆம் தேதி இரவு 7 மணியளவில், ராஜேஷ்தாஸ், தனது காரில் வந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையில் அதிகாரமிக்க பதவியில் உள்ள ராஜேஷ்தாஸின் தொந்தரவால் மனஉளைச்சலுக்கு உள்ளான அந்த பெண் அதிகாரி, அவரிடம் இருந்து போராடி காரில் இருந்து தப்பித்துள்ளார்.

ராஜேஷ்தாஸின் மகள் வயதுடைய தன்னிடம், உயர் அதிகாரி என்ற அதிகாரத்தை காட்டி கீழ்த்தரமாக நடந்து கொண்டது குறித்து அன்றிரவே , தனக்கு நேரடி உயரதிகாரியும், மத்திய மண்டல காவல்துறை ஐஜி.யுமான ஜெயராம் ஐபிஎஸ்.ஸிடம் கண்ணீர் மல்க புகார் தெரிவிக்கிறார், அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி. மேலும், பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு கொடூரம், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள் நடந்திருக்கிறது.

பெண் ஐபிஎஸ் அதிகாரி, பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவரின் நேரடி மேலதிகாரியான ஜெய்ராம் ஐபிஎஸ்.ஸின் தலைமையிடம் திருச்சி நகரத்தில் உள்ளது. இப்படி மூன்று, நான்கு மாவட்டங்களுக்குள் நிகழ்ந்த இந்த கொடூர நிகழ்வு, அந்தந்த மாவட்ட உளவுத்துறை அதிகாரிகளின் மூலம் சென்னையில் உள்ள உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ்.ஸுக்கும், அதே துறையில் அதே பொறுப்பில் இருந்து கடந்தாண்டு ஓய்வுப் பெற்ற சத்தியமூர்த்தி ஐபிஎஸ்.ஸுக்கும்(தற்போது முதல்வரின் தனிப்பட்ட ஆலோசகராக இருக்கிறார்), கவனத்திற்கும், கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆனால், உளவுத்துறையை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐஜி ஈஸ்வரமூர்த்தி, பெண் ஐபிஎஸ். அதிகாரிக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு கொடூரத்தின் சீரியஸ் தன்மை தெரிந்திருந்தும், முதலமைச்சரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லாமல் மறைத்துவிட்டதாக, அவர் கீழ் பணியாற்றும் அதிகாரிகளே மனம் வெறுத்து கூறுகிறார்கள்.

இத்தனைக்கும் காவல்துறை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறது. ஈஸ்வரமூர்த்தியும், சத்தியமூர்த்தியும் முதல்வரின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் இதில் கொடுமையான விஷயம். தங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த முதல்வர் பழனிசாமிக்கு அரணாக இருக்க வேண்டிய உளவுத்துறை அதிகாரியும், ஓய்வு பெற்ற அதிகாரியும், அதிமுக ஆட்சிக்கே இழுக்கு தேடி தந்துவிட்டனர்.

அதற்கு காரணம், ராஜேஷ்தாஸின் எல்லா முறைகேடுகளில் சத்தியமூர்த்தியும் பலன் அடைந்திருக்கிறார். அதனால்தான், ராஜேஷ்தாஸை காட்டிக் கொடுக்காமல், எடப்பாடி ஆட்சிக்கே அவப்பெயரை தேடி தந்துவிட்டார். இருவரின் மீதான பாசத்தின் காரணமாக ஐஜி ஈஸ்வரமூர்த்தியும் அமைதியாக இருந்து, இன்று சிக்கலை எதிர்கொண்டு வருகிறார் என்கிறார்கள், அவரது துறையைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள்.

இதைவிட பெரிய நம்பிக்கை துரோகம் என்பது, சென்னையில் உள்ள காவல்துறை டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரிடம் புகார் அளிக்க அந்த பெண் அதிகாரிக்கு புறப்பட்டபோது, வழியில் நடந்த ஈவு இரக்கமற்ற செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனின் கொடூரத்தையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்ததுதான்.

பெண் அதிகாரிக்கு தொடர்ந்து மனஉளைச்சலை ஏற்படுத்தியதுடன், அவரது உயிருக்கே உலை வைக்கும் வகையில், கொடூர காமூகனாக மாறிவிட்ட ராஜேஷ்தாஸுக்கு ஆதரவாகவும், அவரை காப்பாறறுவதற்காகவும், ஒட்டுமொத்த உளவுத்துறையும், மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமும் அவரின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து சட்டவிரோத செயல்களுக்கு துணை புரிந்ததால்தான், இன்றைககு இந்த விவகாரத்தை நீதிமன்றமே கையில் எடுத்து கண்காணிக்கும் அளவிற்கு சென்றுவிட்டது என்கிறார்கள் மத்திய மாவட்டத்தை சேர்ந்த நேர்மையான அதிகாரிகள்.

தனது புகாரின் பேரில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய மண்டல ஐஜி ஜெயராம், காவல்துறைக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில், ராஜேஷ்தாஸை பாதுகாக்கும் வகையில், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் மனம் நொந்துபோய், தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி தேடி,பெரம்பலூரில் இருந்து சென்னை புறப்பட்டார் அந்த பெண் அதிகாரி.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பரனூர் சுங்க சாவடியில் அந்த பெண் அதிகாரியின் காரை தடுத்து நிறுத்தி, அவரது அந்தஸ்துக்கு இணையான எஸ்.பி. கண்ணன், ரவுடி போல நடந்துகொண்டு, அந்த இளம் பெண் ஐபிஎஸ். அதிகாரியை மிரட்டுகிறார். ராஜேஷ்தாஸுக்கு எதிராக புகார் கொடுக்க சென்னைக்கே செல்லக் கூடாது என்று தடுத்து, நேரடி ஐபிஎஸ் அதிகாரி என்றும் பார்க்காமல், கீழ்த்தரமாக நடத்தியிருக்கிறார், எஸ்.பி. கண்ணன்.

எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஒரு ஆண் அதிகாரி, மற்றொரு பெண் எஸ்.பி.ஸை மிரட்டுவதையும், கொடூரமான குற்றவாளியை நடத்துவதைப் போல, தரம் தாழ்ந்து நடந்து கொண்டதையும் அங்குள்ள பொதுமக்களே வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள். அப்படியென்றால், அந்த பகுதியைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள் எங்கே போனார்கள், என்ன செய்து கொண்டிருந்தார்கள். இல்லை, அவர்களை பணி செய்யவிடாமல் முடக்கி போட்டார்களா, சென்னையில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் என்று கேள்வி எழுப்புகிறார்கள், காவல்துறையில் உள்ள பெண் அதிகாரிகள்.

பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு காரில் வருவதை தடுக்க ராஜேஷ்தாஸ் போட்ட அனைத்து தடுப்புகளையும் உடைத்து எறிந்துவிட்டும், ராஜேஷ்தாஸின் அடியாட்களாக செயல்பட்ட கண்ணனின் அடாவடி செயல்களையும் மீறி சென்னை வந்து டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோரிடம் புகார் கொடுத்துவிட்டு, பெரம்பலூர் திரும்யிருக்கிறார் அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி.

அவருக்கு நடந்த பாலியல் தொந்தரவின் கொடூரத்திற்கு சட்டத்தில் என்ன மாதிரியான தண்டனைகள் கிடைக்கும் என்பதையெல்லாம் தெரிந்திருந்தும், இந்த விவகாரம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்தால் எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு இந்தியா முழுவதும் எவ்வளவு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதும், தேர்தல் நேரத்தில் இந்த பாலியல் தொந்தரவு விவகாரத்தை கையில் எடுத்து, அதிமுக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொடுக்கும் குடைச்சல்கள் பற்றியும் தெரிந்திருந்தும், உளவுத்துறையை நிர்வகித்து வரும் ஐபிஸ் ஈஸ்வரமூர்த்தியும், தனிப்பட்ட ஆலோசகரான சத்தியமூர்த்தியும் எப்படி மறைத்தார்கள்?ஏன் மெளனமாக இருந்தார்கள்? முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைக்கும் அளவுக்கு அவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது ? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள், முதல்வருக்கு துணையாக நிற்கும் அமைச்சர்கள்.

அவர்களின் கேள்விகளுக்கு வலு சேர்க்கும் வகையில்தான் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளுக்கு உள்ளும் பல மர்மங்கள் மறைந்துகிடக்கின்றன.

பிப்ரவரி 24 ஆம் தேதி, பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் பிரசுரமாகிறது. அதைப் பார்த்து கோபமாகி, திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்.பி, அன்று காலை 9,27க்கே தனது டிவிட்டர் பக்கத்தில், அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஒரு பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? என்று பதிவு போட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறார்.

ராஜேஷ்தாஸ் விவகாரத்தை பிரதான எதிர்க்கட்சியான திமுக கையில் எடுத்து அரசியல் செய்ய தொடங்கிவிட்ட பிறகும் கூட, முதல்வர் பழனிசாமி கவனத்திற்கு இந்த விவகாரத்தில் உள்ள ஆபத்தை கொண்டு செல்லாமல் உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தியும், முன்னாள் அதிகாரி சத்தியமூர்த்தியும் தூங்கி வழிந்தததின் பின்னணி என்ன ? ராஜேஷ்தாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அவர்களை தடுத்த மாபெரும் சக்தி யார்? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள், அவர்களைப் போலவே அதிகாரமிக்க பதவியில் உள்ள அதிகாரிகள்.

பிப்ரவரி 24 ஆம் தேதி, நாள் முழுவதும் சமூக ஊடகங்களில், ராஜேஷ்தாஸின் காம லீலைகள் சந்தி சிரித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு என்ன தூங்கிக் கொண்டு இருக்கிறதா? என்று லட்சக்கணக்கான பதிவுகள் முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்டவற்றில் தீயாக பரவியது. அப்போதும், இதனுடைய சீரியஸ் தன்மை உளவுத்துறை உயரதிகாரிகளுக்கு உரைக்கவில்லை. அன்று மாலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கையில் எடுத்து அதிமுக அரசுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிடுகிறார். அதிலேயே, ராஜேஷ்தாஸை பணியில் இருந்து உடனடியாக நீக்குவதுடன், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

அதன்பிறகுதான், ராஜேஷ்தாஸ் மீதான குற்றச்சாட்டை இனிமேலும் மறைக்க முடியாது என்று கருதிய உளவுத்துறை அதிகாரிகள், விழுந்தடித்துக் கொண்டு, முதல்வரைச் சந்தித்து, ராஜேஷ்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறார்கள். அந்த நிமிடமே, ராஜேஷ்தாயை பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து, அவரை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க உளவுத்துறை ஆலோசனை வழங்கியிருந்தால், இன்றைக்கு இந்த விவகாரம் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்புக்கு போய் இருக்காது.

மேலும், இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே ராஜேஷ்தாஸை பாதுகாப்பதற்காகவே துடித்த உளவுத்துறை உயர் அதிகாரிகள், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மனஉளைச்சலுக்கு ஏற்படுத்திய மத்திய மண்டல ஐஜி ஜெயராம், செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியலான நடவடிக்கை எடுக்க வைத்து, அவர்கள் இருவரையும் காத்திருப்போர் பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், எடப்பாடி பழனிசாமி அரசை ஒட்டுமொத்த காவல்துறையுமே இன்றைக்கு பாராட்டியிருக்கும்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி மீதான அவப்பெயரை துடைப்பதற்கு பதிலாக, ராஜேஷ்தாஸை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்போதும் உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்தி ஐ.பி.எஸ்., ஏன் துடித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அதற்கு காரணமாக அவர்கள் முன் வைக்கும் வாதம் இதுதான். பாலியல் தொந்தரவு வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்று உத்தரவிட்டு 24 மணிநேரம் ஆகிவிட்ட பிறகும், சிபிசிஐடி, தனது முதல் தகவல் அறிக்கையிலேயே பதிவு செய்துள்ள, மத்திய மண்டல ஐஜி ஜெயராம், செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் உள்ளிட்ட நான்கு மாவட்ட எஸ்.பி.க்களையும் துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்காமல் உளவுத்துறை மௌனமாகவே இருப்பது ஏன்? என்று நேர்மையான காவல்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நேரடியாக டி.எஸ்.பி. பணியில் சேர்ந்த காலம் முதல் அடுத்தடுத்து எஸ்.பி., டி.ஐ.ஜி, ஐ.ஜி என பதவி உயர்வு பெற்று, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு உள்ளிட்டதுறைகளிலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தபோதும், துளியளவு கூட சலனங்களுக்கு ஆட்படாமல் நேர்மை குணத்தில் இன்றைக்கும் உறுதியாக இருக்கும் உளவுத்துறை ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ், தனது ஒட்டுமொத்த நேர்மையையும், காம கொடூரத்தில் ஈடுபட்டு குற்றவாளியாக சித்திரிக்கப்படும் ராஜேஷ்தாஸை காப்பாற்ற துடிப்பதின் மர்மம்தான் ஏன் என்று புரியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் காவல்துறைக்கு வெளியே உள்ள அவரின் நலம் விரும்பிகள் பலர்.